உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நக்சலிசத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் சரிசெய்ய அரசு உறுதிபூண்டுள்ளது - மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAY 2026 5:03PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, இன்று (18.05.2026) சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் தியாகி வீர குண்டதூர் பொது சேவை மையத்தை (ஷஹீத் வீர் குண்டாதூர் சேவா டேரா ஜன் சுவிதா கேந்திரா) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய், துணை முதலமைச்சர் திரு விஜய் சர்மா, மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, இன்று ஒரு மிக வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று கூறினார். தியாகி வீர குண்டதூர் பிறந்த இந்த இடம், இந்தியாவின் ஒவ்வொரு நபருக்கும் ஒரு புனித யாத்திரைத் தலம் போன்றது என்று அவர் தெரிவித்தார். 2013-ம் ஆண்டு முதல் பாதுகாப்பு முகாமாக இருந்து வந்த இந்த முகாம், இனி சேவை முகாமாக மாறி பழங்குடியினருக்குச் சேவை செய்யும் என்று அவர் கூறினார்.

 

நக்சலிசத்தை ஒழிக்க அரசு தீர்மானம் எடுத்தபோது, நக்சல்களை ஒழிப்பது மட்டும் நோக்கமாக இருக்கவில்லை எனவும், பெருநகரங்களில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் ஏழைப் பழங்குடியினரைச் சென்றடைவதை உறுதி செய்வதும் முக்கிய நோக்கமாக இருந்தது என்றும் திரு அமித் ஷா கூறினார். தற்போது, ஒவ்வொரு ஏழை வீட்டிற்கும் குடிநீர் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் ஆதார் அட்டைகள் உருவாக்கப்பட்டு, ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு நபருக்கும் மாதம் 7 கிலோ அரிசி வழங்கப்படுவதாகவும், ₹5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைத் திட்டமும் இப்பகுதிக்கு வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

தங்கள் பகுதி வளர்ச்சி அடையவில்லை என்பதால் தாங்கள் ஆயுதம் ஏந்தியதாக,  தவறான கருத்தை நக்சல்கள் பல பரப்பி வந்ததாக திரு அமித் ஷா கூறினார். உண்மை என்னவென்றால், நக்சல்கள் ஆயுதம் ஏந்தியதால்தான் இந்தப் பகுதி வளர்ச்சி அடையவில்லை என்று அவர் தெரிவித்தார்.

 

நக்சலிசம் முடிந்துவிட்டது என்று கருதி நாம் நிம்மதியாக உறங்கக்கூடாது என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளதை திரு அமித் ஷா சுட்டிக்காட்டினார். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நக்சலிசத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஈடுசெய்து, இந்தக் கிராமங்கள் அனைத்தையும் துடிப்பான, ஆற்றல்மிக்க பழங்குடியினக் கிராமங்களாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளதாக திரு அமித் ஷா தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262365&reg=3&lang=1

(Release ID : 2262365)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2262555) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam