பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா-நெதர்லாந்து கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
17 MAY 2026 3:45AM by PIB Chennai
நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 மே 16, 17 ஆகிய தேதிகளில் நெதர்லாந்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் இரண்டாவது நெதர்லாந்துப் பயணமாகும்.
மே 16 அன்று காலையில், ஹேக்கில் உள்ள ஹூயிஸ் டென் போஷ் அரண்மனையில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பிற்காக, நெதர்லாந்தின் மன்னர் வில்லெம் அலெக்சாண்டர், ராணி மாக்சிமா ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை வரவேற்றனர். மன்னர், ராணி ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மதிய விருந்தும் அளித்தனர்.
நெதர்லாந்துப் பிரதமர் திரு ஜெட்டனும் பிரதமர் திரு நரேந்திர மோடியும் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மே 16 அன்று மாலை இரவு விருந்து நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால, வரலாற்று வர்த்தகத் தொடர்புகள், ஆழமாக வேரூன்றிய மக்கள் உறவுகள், வலுவான இருதரப்பு உறவுகளை இரு பிரதமர்களும் நினைவு கூர்ந்தனர். மேலும், இந்த பன்முக உறவை மேலும் விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். இந்தச் சூழலில், உயர்மட்ட அரசியல் நிலையிலான கலந்துரையாடல்கள் உட்பட, பல்வேறு ஒத்துழைப்புத் திட்டங்களில் சமீபத்திய ஆண்டுகளில் எட்டப்பட்ட முன்னேற்றத்தையும், 2023-ல், ஜி20 அமைப்பின் இந்தியத் தலைமைத்துவத்தின் போதும், பிப்ரவரி 2026-ல் புது தில்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் போதும் ஏற்பட்ட பயனுள்ள ஒத்துழைப்பின் மூலமும் அடைந்த முன்னேற்றத்தை இரு தலைவர்களும் திருப்தியுடன் குறிப்பிட்டனர்.
இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள வலுவான உத்வேகத்தையும், இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஒருங்கிணைப்புகளையும் அங்கீகரித்து, இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான உறவை 'உத்திசார் ஒத்துழைப்பு' நிலைக்கு உயர்த்த இரு தலைவர்களும் முடிவு செய்தனர். இந்தச் சூழலில், ஒரு உத்திசார் ஒத்துழைப்பு செயல்திட்டத்தை இருநாடுகளும் ஏற்றுக்கொண்டதை அவர்கள் வரவேற்றனர். அதன்படி, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, செமிகண்டக்டர், விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் அமைப்பு, அறிவியல், புத்தாக்கம், நிலைத்தன்மை, சுகாதாரம், நிலையான விவசாயம், உணவு அமைப்புகள், நீர் மேலாண்மை, எரிசக்தி மாற்றம், நிலையான போக்குவரத்து, கடல்சார் மேம்பாடு, கல்வி, கலாச்சாரம், மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
லோத்தல், ஆம்ஸ்டர்டாம் ஆகிய இடங்களில் உள்ள கடல்சார் அருங்காட்சியகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு போன்ற பல்வேறு முன்னுரிமைத் துறைகளில் டிசம்பர் 2025-ல் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை இரு தலைவர்களும் வரவேற்றனர்.
இரு தலைவர்களும் 'எதிர்காலத்திற்கான ஒப்பந்தத்தை' குறிப்பிட்டதோடு, ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணங்க, ஜனநாயகம், மனித உரிமைகள், சர்வதேச அமைதி, பாதுகாப்பு, விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு உள்ளிட்ட பகிரப்பட்ட விழுமியங்களையும் கோட்பாடுகளையும் நிலைநிறுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். சீர்திருத்தப்பட்ட, விரிவாக்கப்பட்ட ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு நெதர்லாந்து அரசு தொடர்ந்து அளித்துவரும் ஆதரவிற்காக நெதர்லாந்து பிரதமர் திரு ஜெட்டனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தியதோடு, இது தொடர்பாக இந்த ஆண்டு ஜனவரியில் பரஸ்பர நன்மை பயக்கும் இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததை வரவேற்றனர்.
சர்வதேச சட்டத்திற்கான மரியாதை, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில், சுதந்திரமான, திறந்த, பாதுகாப்பான, அமைதியான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
உக்ரைன் குறித்து, தொடர்ந்து நடைபெற்று வரும் போர் பெரும் மனிதத் துன்பங்களை ஏற்படுத்துவதோடு, உலகளாவிய விளைவுகளையும் கொண்டுவருகிறது என்று இரு தரப்பினரும் கவலை தெரிவித்தனர்.
மேற்கு ஆசியா / மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை குறித்து இரு தலைவர்களும் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர். அமைதியை நிலைநாட்ட நடைபெற்று வரும் முயற்சிகளுக்குத் தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு:
பரஸ்பர செழிப்பை உருவாக்கும் ஒத்துழைப்பின் ஒரு முன்மாதிரியாக நெதர்லாந்து-இந்தியா பொருளாதாரக் ஒத்துழைப்பு தனித்து நிற்கிறது என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். திறமையான விநியோகச் சங்கிலிகள், திறந்த சந்தைகளுக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பால் உருவாகும் இருதரப்பு வர்த்தக வளர்ச்சியை அவர்கள் வரவேற்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பொருளாதார ஒத்துழைப்பில் திருப்தி தெரிவித்த தலைவர்கள், குறிப்பாக இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் உருவாகும் வாய்ப்புகளின் பின்னணியில், மேலும் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்தனர்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு:
பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான செயல்திட்ட அறிக்கை கையெழுத்திடப்பட்டதை இரு தலைவர்களும் வரவேற்றனர். மேலும், தகவல் பரிமாற்றங்கள், களப்பயணங்கள், ஆராய்ச்சி, புத்தாக்கம், பயிற்சி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்காக, அந்தந்த பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையேயான வழக்கமான கலந்துரையாடல்களுக்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இரு நாடுகளின் தேசியப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே வழக்கமான பரிமாற்றங்கள் மூலம் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தவும் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆண்டுதோறும் நடைபெறும் இருதரப்பு இணைய ஆலோசனைகள் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். இணைய அச்சுறுத்தல்கள், இணையக் குற்றங்களை எதிர்கொள்வதற்கான கூட்டு முயற்சிகள் குறித்த செயல்திட்டம் கையெழுத்திடப்பட்டதை தலைவர்கள் வரவேற்றனர்.
நெதர்லாந்து பிரதமர் ஜெட்டன், ஏப்ரல் 2025-ல் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்தார். மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் நெதர்லாந்தின் அசைக்க முடியாத ஆதரவையும் அவர் வெளிப்படுத்தினார்.
இருதரப்பு, பலதரப்பு வழிமுறைகள் மூலம் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், இது தொடர்பாக உலகளாவிய ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அங்கீகரித்து, சர்வதேச தரநிலைகளை அனைத்து நாடுகளும் நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், புத்தாக்கம், அறிவியல், கல்வி:
செமிகன்டக்டர், அது தொடர்பான வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை இரு தலைவர்களும் வரவேற்றனர்.
அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் தொடர்பான கூட்டுப் பணிக்குழு ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. இது வழக்கமான இருதரப்பு உரையாடல்கள் மூலம் கூட்டு ஆராய்ச்சி, மேம்பாட்டுத் திட்டங்கள், தொழில்நுட்பப் பரிமாற்றத்தை எளிதாக்குவது குறித்து இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
முக்கிய கனிமங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை தலைவர்கள் வரவேற்றனர்.
இரு நாடுகளின் உயர்கல்வி நிறுவனங்கள் தத்தமது கல்வி கற்பித்தல் முன்னுரிமைகள், தேவைகளுக்கு ஏற்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இந்தியக் கல்வி அமைச்சகத்திற்கும் நெதர்லாந்தின் கல்வி, அமைச்சகத்திற்கும் இடையே உயர்கல்வி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை இரு தலைவர்களும் வரவேற்றனர்.
எரிசக்தி பாதுகாப்பு, சுழற்சிப் பொருளாதாரம்
உயிரி எரிபொருள்கள், உயிரி ரசாயனங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு தீவிரமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, ஜி20 அமைப்பின் இந்தியத் தலைமைத்துவத்தின் போது தொடங்கப்பட்ட உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியில் நெதர்லாந்து இணைவதை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்.
'கழிவிலிருந்து மதிப்புமிக்க பொருட்களை' உருவாக்கும் திட்டத்தில் நடைபெற்று வரும் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் வரவேற்றனர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மீதான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஒரு கூட்டுப் பணிக்குழு அமைக்கப்பட்டதை இரு தலைவர்களும் வரவேற்றனர்.
பசுமை ஹைட்ரஜன் மேம்பாடு குறித்த லட்சியமிக்க இந்தியா-நெதர்லாந்து செயல்திட்டத்தை இரு தலைவர்களும் தொடங்கி வைத்தனர்.
நீர் மேலாண்மை:
இந்தியாவின் நீர் தொடர்பான தேவைகளுக்கும் நெதர்லாந்தின் அனுபவத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். தூய்மை திட்டத்தில் ஒத்துழைப்பு, நகர்ப்புற நதி மேலாண்மைத் திட்டங்கள், புதிய நீர் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட நீர், நதி மேலாண்மைத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டு முயற்சிகளை இரு பிரதமர்களும் பாராட்டினர்.
இந்தியா தலைமையிலான, பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான உலகளாவிய கூட்டமைப்பின் நகர்ப்புற நீர் உள்கட்டமைப்பு மீட்சித்திறன் திட்டத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தலைவர்கள் குறிப்பிட்டனர்.
கடல்சார் மேம்பாடு:
இரு பிரதமர்களும், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட கடல்சார் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டதோடு, அக்டோபர் 2025-ல் கையெழுத்திடப்பட்ட செயல்திட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளபடி, இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையே ஒரு உத்திசார் 'பசுமை - டிஜிட்டல் கடல் வழித்தடத்தை' உருவாக்குவதற்கு ஆதரவளித்து, பாதுகாப்பான, உறுதியான, நிலையான கடல்சார் துறையை நோக்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
சுகாதாரத் துறை
தொற்று நோய்கள் போன்ற உலகளாவிய பொது சுகாதார அபாயங்களையும், அத்துடன் தொற்றா நோய்களின் அதிகரித்து வரும் தாக்கத்தையும் எதிர்கொள்வதில், சுகாதாரம் தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
இரு நாடுகளிலும் நிலையான சுகாதார அமைப்புகள் குறித்த அறிவுப் பரிமாற்றத்தில் புதிய ஒத்துழைப்பு முயற்சிகளை அவர்கள் வரவேற்றனர்.
வேளாண்மை, உணவு அமைப்புகள்:
வேளாண்மை, உணவு ஆகிய துறைகளில் இந்தியா-நெதர்லாந்து ஒத்துழைப்பு தொடர்வதையும், வேளாண்மைக்கான கூட்டுப் பணிக்குழு மூலம் அறிவுப் பரிமாற்றம், அனுபவப் பகிர்வு நடைபெறுவதையும் இரு தலைவர்களும் திருப்தியுடன் குறிப்பிட்டனர். உணவு பதப்படுத்துதல், பால், கோழி வளர்ப்பு ஆகிய துறைகளில் இந்தியாவில் நெதர்லாந்து நிறுவனங்களின் அதிகரித்து வரும் செயல்பாடுகளைத் தலைவர்கள் வரவேற்றனர். வேளாண் தொழில்நுட்பம் உள்ளிட்ட வேளாண் துறை தொடர்பாக இருநாடுகளும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை தலைவர்கள் வலியுறுத்தினர்.
நெதர்லாந்தின் நிபுணத்துவத்துடன், இந்தியாவில் வேளாண்மை சார்ந்த துறைகளில் சிறப்பு மையங்களை அமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தலைவர்கள் ஆய்வு செய்தனர்.
மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வள அமைச்சகத்திற்கும், நெதர்லாந்தின் வேளாண்மை, மீன்வளம், உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையே ஒரு கூட்டுப் பிரகடனம் கையெழுத்திடப்பட்டதை தலைவர்கள் வரவேற்றனர். நெதர்லாந்து உணவு, நுகர்வோர் தயாரிப்புப் பாதுகாப்பு ஆணையத்திற்கும், இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரு தலைவர்களும் வரவேற்றனர்.
மக்கள் பரிமாற்றம், கலாச்சாரம்:
இந்தியா-நெதர்லாந்து உறவின் ஒரு முக்கிய தூணாக விளங்கும் மக்களுக்கு இடையிலான உறவுகளை இரு பிரதமர்களும் சுட்டிக்காட்டினர். இரு நாடுகளுக்கும் இடையே, குறிப்பாக இளைஞர்கள், கல்வியாளர்கள், தொழில்முறைப் பணியாளர்கள், விளையாட்டு, கலாச்சாரப் பரிமாற்றங்கள் மூலம் மக்கள் தொடர்புகளை மேலும் எளிதாக்குவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையே நியாயமான இடப்பெயர்வு, போக்குவரத்து ஆகியவற்றை எளிதாக்குவதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்ட இரு தலைவர்களும், இது தொடர்பாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் கையெழுத்திடப் பட்டதை வரவேற்றனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமர் ஜெட்டனின் அன்பான உபசரிப்புக்கு நன்றி தெரிவித்ததோடு, அவரை விரைவில் இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261884®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2261966)
வருகையாளர் எண்ணிக்கை : 7