குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சிக்கிமின் 51-வது மாநில தின கொண்டாட்டங்களில் குடியரசு துணைத் தலைவர் உரையாற்றினார்

இடுகை இடப்பட்ட நாள்: 16 MAY 2026 7:08PM by PIB Chennai

மாநில தின கொண்டாட்டங்களை முன்னிட்டு சிக்கிம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன், கடந்த 50 ஆண்டுகளில் இமயமலை மாநிலத்தின் பயணம் அசாதாரணமானது என்றார். சிக்கிம் இந்தியாவுடன் இணைந்தது தொடர்பான முன்னேற்றங்களை ஒரு மாணவராக உன்னிப்பாக கவனித்ததாக குறிப்பிட்ட அவர், 51 வது மாநில தின கொண்டாட்டங்களில் இன்று கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

சிக்கிம் "பசுமை, இயற்கை, சுத்தமான மற்றும் தூய்மையானது" என்று விவரித்த குடியரசு துணைத் தலைவர், சிக்கிம் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இம்மாநிலத்தில் தனது சாலை பயணத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், சிக்கிம் மக்களின் ஒழுக்கமான மற்றும் இரக்கமுள்ள தன்மையைக் கண்டதாகக் கூறினார். நல்ல எண்ணங்கள் மற்றும் இணக்கமான வாழ்க்கை தனிநபர்களையும் சமூகத்தையும் வலுப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

இயற்கை, கலாச்சாரம், ஆளுகை ஆகியவற்றுக்கு இடையேயான நல்லிணக்கத்தை அடைய முடியும் என்பதற்கு சிக்கிம் ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், இம்மாநிலத்தின் 51-வது ஆண்டு வளர்ச்சி, மாற்றம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் புதிய கட்டத்திற்கு வழிவகுக்கும் என்றார்.

சிக்கிமின் முதல் முதலமைச்சர் திரு காஸி லெண்டுப் டோர்ஜிக்கு அஞ்சலி செலுத்திய குடியரசு துணைத் தலைவர், புத்திசாலித்தனத்துடனும், தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜனநாயக மாற்றத்தின் மூலம் சிக்கிமை வழிநடத்திய தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்றார்.

சிக்கிம் மாநிலத்தின் 50-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி சமீபத்தில் சிக்கிம் சென்றதைப் பற்றிக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், சிக்கிம் மாநிலத்தில் ரூ. 4, 000 கோடி திட்டங்கள் தொடங்கப்பட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

 வடகிழக்கில் உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை வலுப்படுத்தியதற்காக வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தை பாராட்டிய அவர், இப்பகுதி முழுவதும் ரயில்வே மற்றும் ஹெலிபோர்ட் வசதிகளை விரிவுபடுத்துவதை எடுத்துரைத்தார். சமீபத்தில் தான் மிஸோராம் சென்றதைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், மேம்பட்ட ரயில் இணைப்பு வடகிழக்கில் வர்த்தகம், சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது என்றார். சிக்கிம் மாநிலமும் விரைவில் நேரடி ரயில் இணைப்பைப் பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், மாநிலத்தின் இயற்கை பொருட்கள் இந்தியா முழுவதும் உள்ள சந்தைகளை சென்றடைய இது உதவும் என்றார்.

முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் அரசைப் பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர், நீடித்த வளர்ச்சிக்கான உலகளாவிய முன்மாதிரியாக இந்த மாநிலம் உருவெடுத்துள்ளது என்றார். 2016-ம் ஆண்டில் சிக்கிம் உலகின் முதல் 100 சதவீத இயற்கை வேளாண் மாநிலமாக மாறியதை நினைவு கூர்ந்த அவர், 76,000 ஹெக்டேர் விவசாய நிலத்தை ரசாயனமற்ற சுற்றுச்சூழல் அமைப்பாக மாற்றியது ஒரு விவசாய சீர்திருத்தம் மட்டுமல்ல, ஒரு "கலாச்சார புரட்சி" என்றும் கூறினார்.

சிக்கிமின்  முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குடியரசு துணைத் தலைவர், இம்மாநிலத்தை தேசத்தின் கண்காணிப்பாளர் என்று விவரித்தார். சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமை, ஒத்துழைப்பு உணர்வு மற்றும் மக்களிடையே உள்ள ஆழமான தேசபக்தி உணர்வு ஆகியவை சிக்கிம் மாநிலத்தை இந்தியாவின் ஒருமைப்பாட்டின் வலுவான தூணாக ஆக்குகின்றன என்று அவர் கூறினார். எல்லை மற்றும் துடிப்பான கிராமங்களுக்குச் சென்று வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்தியதற்காக ஆளுநர் திரு ஓம் பிரகாஷ் மாத்தூரையும் அவர் பாராட்டினார்.

துடிப்பான கிராமத் திட்டத்தின் கீழ் சிக்கிமில் உள்ள 58 கிராமங்கள் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். எல்லைப்புற கிராமங்கள் இனி "கடைசி கிராமங்கள்" அல்ல, ஆனால் "பாரதத்தின் முதல் கிராமங்கள்" என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் போது, இணைப்புகள், உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் ஆளுகை தொடர்பான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், புதுமையான சிந்தனைகளை வழிகாட்டுதல், புத்துணர்வு, நிதி மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவு மூலம் அளவிடக்கூடிய வணிகங்களாக மாற்ற வடிவமைக்கப்பட்ட அரசு ஆதரவு தொழில்முனைவோர் திட்டமான "எழும் சிக்கிம்’’ -ஐ குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கி வைத்தார்.

 

(Release ID: 2261802)

****

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261821) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Nepali , Gujarati