பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்கு ஆசியாவில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான விளக்கக் கூட்டம்

உர இருப்பு வலுவாக உள்ளது; தேவைக்கு அதிகமாகவே விநியோகம் தொடர்கிறது

மேற்கு ஆசிய நெருக்கடிச் சூழ்நிலைக்குப் பிறகு, மொத்தம் சுமார் 84 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 04 MAY 2026 6:33PM by PIB Chennai

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு தொடர்ச்சியான தகவல்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக, இன்று புதிதில்லி தேசிய ஊடக மையத்தில் ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது. இதில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள், மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் அதிகாரிகள் பங்கேற்று, எரிபொருள் இருப்பு, கடல்சார் செயல்பாடுகள், அப்பகுதியில் உள்ள இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் உதவிகள், மற்றும் முக்கியத் துறைகளில் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வழங்கினர்.

இதன்படி, 2026-ஆம் ஆண்டு காரீப் பருவத்திற்கான உரத் தேவை 390.54 லட்சம் மெட்ரிக் டன்னாக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையால் மதிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி கையிருப்பு சுமார் 195.71 லட்சம் மெட்ரிக் டன்னாக (50%க்கும் மேல்) உள்ளது. இது, வழக்கமான அளவான சுமார் 33%-ஐ விடக் கணிசமான உயர்வாகும். இது, அரசின் மேம்பட்ட திட்டமிடல், முன்கூட்டிய கையிருப்பு மற்றும் திறமையான தளவாட மேலாண்மை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.

மாநிலங்களில் விநியோக நிலை தொடர்ந்து வலுவாக உள்ளது. 2026 மே 1 முதல் 3 வரையிலான காலகட்டத்திற்கு, தேவையளவை விட கையிருப்பு கணிசமாக அதிகமாக உள்ளது. யூரியாவின் தேவை 2.66 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்க, அதன் கையிருப்பு 62.28 லட்சம் மெட்ரிக் டன்னாகவும், டிஏபி-யின் தேவை 0.85 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ள நிலையில், அதன் கையிருப்பு 20.32 லட்சம் மெட்ரிக் டன்னாகவும், எம்ஓபி-யின் தேவை 0.22 லட்சம் மெட்ரிக் டன்னாகவும், கையிருப்பு 7.60 லட்சம் மெட்ரிக் டன்னாகவும், என்பிகே-யின் தேவை 1.16 லட்சம் மெட்ரிக் டன்னாகவும், கையிருப்பு 49.71 லட்சம் மெட்ரிக் டன்னாகவும், எஸ்எஸ்பி-யின் தேவை 0.55 லட்சம் மெட்ரிக் டன்னாகவும், கையிருப்பு 24.60 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் உள்ளது. நெருக்கடி நிலைக்குப் பிறகு, மொத்தமாக சுமார் 84 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் கையிருப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. 2025 ஏப்ரலில் 21.89 லட்சம் டன்னாக இருந்த யூரியா உற்பத்தி, இந்த ஆண்டு  ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 20.98 லட்சம் டன் உள்நாட்டு உற்பத்தியை எட்டியுள்ளது.

நெருக்கடி புவிசார் அரசியல் சூழல் இருந்தபோதிலும், வீட்டு உபயோக எல்பிஜி, வீட்டு உபயோக பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜி (போக்குவரத்து) ஆகியவை  100% விநியோகம் செய்யப்படுவதை அரசு உறுதி செய்துள்ளது. வணிக எல்பிஜியைப் பொறுத்தவரை, மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மருந்து, எஃகு, வாகனம், விதை, விவசாயம் போன்ற துறைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026 மார்ச் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் உள்ள சராசரி தினசரி விநியோகத்தின் அடிப்படையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 5 கிலோ எஃப்டிஎல் (FTL) விநியோகமும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

எல்பிஜி பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்கின்றன. நாடு முழுவதும், நேற்று 1570-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் திடீர் சோதனைகளைத் தொடர்ந்து  தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும், 349 எல்பிஜி விநியோகஸ்தர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று வரை 74 எல்பிஜி விநியோகஸ்தர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது நிலவும் புவிசார் அரசியல் சூழ்நிலையால் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு எல்பிஜி வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி விநியோக மையங்களில் எந்தவிதமான தட்டுப்பாடுகளும் பதிவாகவில்லை. வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின்  விநியோகத்தை உறுதி செய்வதற்காக, பெரும்பாலான எல்பிஜி விநியோக மையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கின.

சீர்திருத்தத்துடன் இணைந்த 10% ஒதுக்கீட்டையும் சேர்த்து, வணிகப் பயன்பாட்டிற்கான மொத்த  எல்பிஜி ஒதுக்கீடு நெருக்கடிக்கு முந்தைய அளவுகளில் சுமார் 70% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2026 ஏப்ரல் மாதம் முதல், 23.58 லட்சத்திற்கும் அதிகமான 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் முதல், மொத்தம் 2,15,332 மெட்ரிக் டன் (113.33 லட்சத்திற்கும் அதிகமான 19 கிலோ எல்பிஜி சிலிண்டர்களுக்குச் சமம்) வர்த்தக எல்பிஜி சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.  இந்தக் காலகட்டத்தில், பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் மொத்தம் 11,106 மெட்ரிக் டன் வாகன எல்பிஜி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2026 மார்ச் முதல், சுமார் 6.12 லட்சம் பிஎன்ஜி இணைப்புகளுக்கு எரிவாயு வழங்கப்பட்டுள்ளதுடன், கூடுதலாக 2.67 லட்சம் இணைப்புகளுக்கான உள்கட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை 8.79 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், சுமார் 6.79 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிய இணைப்புகளுக்காகப் பதிவு செய்துள்ளனர். 03.05.2026 வரை, 43,760-க்கும் மேற்பட்ட பிஎன்ஜி நுகர்வோர் தங்களது எல்பிஜி இணைப்புகளைத் திரும்ப ஒப்படைத்துள்ளனர்.

மேற்கு ஆசியப் பகுதியில் உள்ள இந்திய மாலுமிகளின் நலனுக்கு அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தியத் தூதரகங்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் முகமைகளுடன் ஒருங்கிணைந்து இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன. இப்பகுதியிலிருந்து இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குக் கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதால், ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்து நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2257893&reg=3&lang=2

 ***
 

BR/TV/SE

 


(வெளியீட்டு அடையாள எண்: 2257926) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam