பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச ஆர்ய மகாசம்மேளனத்தில் பிரதமர் திரு.நரேந்திரமோடி நிகழ்த்திய ஆங்கில உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2025 7:16PM by PIB Chennai

 

குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு. ஆச்சார்ய தேவவ்ரத் அவர்களே, தில்லி முதல்வர் திருமதி. ரேகா குப்தா அவர்களே, கியான் ஜோதி மஹோத்சவ் அமைப்புக் குழுத் தலைவர் திரு. சுரேந்திர குமார் ஆர்யா அவர்களே, டி.ஏ.வி  கல்லூரி மேலாண்மைக் குழுத் தலைவர் திரு. பூனம் சூரி அவர்களே, மூத்த துறவி சுவாமி தேவவ்ரத் சரஸ்வதி அவர்களே மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் வருகை தந்துள்ள ஆர்ய சமாஜ உறுப்பினர்களுக்கு எனது வணக்கங்கள்.

நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்காக முதலில் நான் மன்னிப்புக் கோருகிறேன். இன்று சர்தார் படேல் அவர்களின் 150-வது பிறந்ததினம் என்பதால், ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமைச் சிலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதால் இங்கு வர தாமதமானது.

தொடக்கத்தில் ஓதப்பட்ட மந்திரங்களின் சக்தி நம்மிடையே ஒரு தெய்வீக அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் ஆசியாலும், அவரது கொள்கைகள் மீதான பற்றுதலாலும், உங்களுடனான எனது பல தசாப்த காலத் தொடர்பாலும் உங்கள் முன் நிற்பதை பெருமையாகக் கருதுகிறேன். உங்களைச் சந்திக்கும் போதெல்லாம் நான் புதிய ஆற்றலைப் பெறுகிறேன். இந்த அரங்கத்தைப் போலவே மேலும் ஒன்பது அரங்குகளில் காணொளி வாயிலாக இணைந்திருக்கும் ஆர்ய சமாஜ உறுப்பினர்களுக்கும் எனது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு, குஜராத்தில் சுவாமி தயானந்த சரஸ்வதி ஜி பிறந்த இடத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் நான் காணொளி வாயிலாக உரையாற்றினேன். அதற்கு முன்னதாக, மகரிஷி தயானந்த சரஸ்வதி ஜியின் 200-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தில்லியில் தொடங்கி வைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அப்போது ஓதப்பட்ட வேத மந்திரங்களின் ஆற்றலும், யாகத்தின் புனிதச் சூழலும் நேற்று நடந்தது போலவே இப்போதும் பசுமையாக நினைவில் உள்ளது.

நண்பர்களே,

அந்த நிகழ்வின் போது, இந்த 200-வது பிறந்தநாளை இரண்டு ஆண்டுகளுக்கு 'விசார யாகமாக' கொண்டாட நாம் முடிவு செய்திருந்தோம். இந்த 'அகண்ட விசார யாகம்' கடந்த இரண்டு ஆண்டுகளாக தடையின்றித் தொடர்வதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது, ஆர்ய சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட 150-வது ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்று எனது ஆன்மீகப் பங்களிப்பை வழங்க எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. சுவாமி தயானந்த சரஸ்வதி ஜியின் பாதங்களில் எனது மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன். இந்த சர்வதேச மாநாட்டிற்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தருணத்தில், ஒரு சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிடும் பாக்கியத்தையும் நாம் பெற்றுள்ளோம்.

நண்பர்களே,

ஆர்ய சமாஜம் தொடங்கப்பட்டதன் 150-வது ஆண்டு என்பது வெறும் ஒரு சமூகம் அல்லது பிரிவு சார்ந்த நிகழ்வு மட்டுமல்ல. இது பாரதத்தின் வேத அடையாளத்தோடு ஆழமாகப் பிணைக்கப்பட்ட ஒன்று. கங்கை நதியின் நித்திய ஓட்டத்தைப் போன்றதும், தன்னைத்தானே தூய்மைப்படுத்திக்கொள்ளும் வலிமை கொண்டதுமான இந்தியச் சிந்தனையை இது பிரதிபலிக்கிறது. சமூகச் சீர்திருத்தப் பாரம்பரியத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்றதோடு, சுதந்திரப் போராட்டக் காலத்தில் எண்ணற்ற வீரர்களுக்கு அறிவுசார் வலிமையையும் இது வழங்கியது. திரு. லாலா லஜபதி ராய், மாவீரர் திரு. ராம் பிரசாத் பிஸ்மில் போன்ற பல புரட்சியாளர்கள் ஆர்ய சமாஜத்திடமிருந்து உத்வேகம் பெற்றுத் தங்களைச் சுதந்திரப் போராட்டத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டனர். துரதிர்ஷ்டவசமாக, அரசியல் காரணங்களால் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்ய சமாஜத்தின் முக்கியப் பங்கு உரிய அங்கீகாரத்தைப் பெறவில்லை.

நண்பர்களே,

ஆர்ய சமாஜம் அதன் தொடக்கத்திலிருந்தே தீவிர தேசபக்தர்களின் அமைப்பாக இருந்து வருகிறது. இந்தியத்தன்மையின் சாராம்சத்தைப் பற்றி ஆர்ய சமாஜம் எப்போதும் அச்சமின்றித் துணிச்சலாகப் பேசி வந்துள்ளது. அந்நிய சித்தாந்தங்கள், பிரிவினைவாத மனப்போக்குகள் அல்லது கலாச்சாரச் சீரழிவு என பாரதத்திற்கு எதிராக இருந்த ஒவ்வொரு கருத்தையும் ஆர்ய சமாஜம் தொடர்ந்து எதிர்த்து நின்றுள்ளது. ஆர்ய சமாஜம் 150 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த வேளையில், நாடும் சமுதாயமும் இணைந்து சுவாமி தயானந்த சரஸ்வதி ஜியின் சிறந்த லட்சியங்களுக்கு இவ்வளவு பிரம்மாண்டமான முறையில் அஞ்சலி செலுத்துவது எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது.

நண்பர்களே,

தங்களது ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் சீர்திருத்த இயக்கங்கள் மூலம் வரலாற்றின் போக்கிற்கு ஒரு புதிய திசையை வழங்கிய சுவாமி ஸ்ரத்தானந்தர் போன்ற ஆர்ய சமாஜத்தின் பல ஒளிவிளக்குகளின் ஆற்றலும் ஆசியும் இந்த வரலாற்றுத் தருணத்தில் நம்முடன் ஆன்மீக ரீதியாக உள்ளன. அத்தகைய உன்னத ஆன்மாக்கள் அனைவரையும் நான் வணங்குகிறேன்.

நண்பர்களே,

நமது இந்தியா எண்ணற்ற வழிகளில் தனித்துவமானது. இந்த புனித பூமியும், அதன் நாகரிகமும், வேத பாரம்பரியமும் காலங்காலமாக நிலைத்து நிற்கின்றன. ஏனெனில், புதிய சவால்கள் எழும்போதெல்லாம், காலம் புதிய கேள்விகளை எழுப்பும்போதெல்லாம், நமது சமூகத்தை சரியான பாதையில் வழிநடத்த ஒரு மகான் அல்லது ஒரு ரிஷி பிறக்கிறார்கள். இந்த மாபெரும் பாரம்பரியத்தில் வந்த ஒரு சிறந்த ஞானிதான் சுவாமி தயானந்த சரஸ்வதி ஜி. பல நூற்றாண்டு கால அடிமைத்தனத்தால் நமது தேசமும் சமுதாயமும் ஒடுக்கப்பட்டிருந்த காலனித்துவ ஆட்சிக் காலத்தில் அவர் பிறந்தார். ஆழமான சிந்தனைகளுக்குப் பதிலாக மூடநம்பிக்கைகளும் சமூகத் தீமைகளும் அந்த இடத்தைப் பிடித்திருந்தன. ஆங்கிலேயர்கள் நமது மரபுகளையும் நம்பிக்கைகளையும் சிறுமைப்படுத்த முயன்றனர். நம்மை இழிவுபடுத்துவதன் மூலம் பாரதத்தின் அடிமைத்தனத்தை அவர்கள் நியாயப்படுத்தினர். இத்தகைய சூழ்நிலையில், புதிய மற்றும் அசல் எண்ணங்களைச் சிந்திக்கும் துணிச்சலைக்கூட சமூகம் இழந்திருந்தது.

அத்தகைய இருண்ட மற்றும் கடினமான காலத்தில்தான் ஒரு இளம் துறவி தோன்றினார். அவர் இமயமலையின் தனிமையான, கரடுமுரடான பகுதிகளில் தியானம் செய்து, கடுமையான தவத்தின் மூலம் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். அவர் திரும்பி வந்தபோது, சுயசந்தேகத்தில் சிக்கியிருந்த ஒரு சமூகத்தை விழிப்படையச் செய்தார். காலனித்துவ ஆட்சி இந்தியாவின்  அடையாளத்தை இழிவுபடுத்திக் கொண்டிருந்த வேளையில், வீழ்ச்சியடைந்து வரும் தார்மீக மற்றும் சமூக விழுமியங்கள் மேற்கத்தியமயமாக்கல் மூலம் நவீனமயமாகக் காட்டப்பட்ட நேரத்தில், இந்த தன்னம்பிக்கை மிக்க முனிவர் தனது குரலை உயர்த்தி, "வேதங்களுக்குத் திரும்புங்கள்! வேதங்களுக்குத் திரும்புங்கள்!" என்று தனது மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். அடிமைத்தனத்தின் அந்த இருண்ட காலத்தில், உறங்கிக் கிடந்த தேசிய உணர்வை மீண்டும் தட்டியெழுப்பிய சுவாமி தயானந்தரின் பெருமை அத்தகையது.

நண்பர்களே,

இந்தியா உண்மையாகவே முன்னேற வேண்டுமானால், அரசியல் அடிமைச் சங்கிலிகளை உடைப்பது மட்டும் போதாது என்பதை சுவாமி தயானந்த சரஸ்வதி ஜி உணர்ந்திருந்தார். நமது சமூகத்தைப் பிணைத்து பிரித்து வைத்திருக்கும் சமூக விலங்குகளையும் உடைக்க வேண்டியிருந்தது. அதனால்தான் சுவாமி தயானந்த சரஸ்வதி ஜி பாகுபாடு, தீண்டாமை மற்றும் உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற எண்ணங்களை முற்றிலுமாக நிராகரித்தார். தீண்டாமையை வேரோடு ஒழிக்க அவர் அழைப்பு விடுத்தார். எழுத்தறிவின்மைக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினார். வேதங்களையும் வேத நூல்களையும் தவறாகச் சித்தரித்தவர்களுக்கு அவர் சவால் விடுத்ததோடு, அந்நியக் கதையாடல்களை எதிர்த்துப் போராடி, பண்டைய இந்திய மரபான 'சாஸ்திரார்த்தம்' (அறிவுசார் விவாதம்) மூலம் உண்மையை நிரூபித்தார்.

நண்பர்களே,

சுவாமி தயானந்த ஜி தனது காலத்தின் தொலைநோக்கு சிந்தனையாளர். ஒரு தனிநபரை உருவாக்குவதிலும் சரி, ஒரு சமூகத்தைக் கட்டமைப்பதிலும் சரி, 'பெண் சக்தி'  முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே, பெண்களை வீட்டின் நான்கு சுவர்களுக்குள் முடக்கி வைத்திருந்த மனநிலையை அவர் துணிச்சலாக எதிர்த்தார். ஆர்ய சமாஜப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கும் இயக்கத்தைத் தொடங்கினார். அந்த நாட்களில் ஜலந்தரில் ஒரு பெண்கள் பள்ளி தொடங்கப்பட்டது, அது விரைவில் ஒரு கன்யா மகாவித்யாலயமாக (பெண்கள் கல்லூரி) வளர்ந்தது. ஆர்ய சமாஜத்தால் நிறுவப்பட்ட இத்தகைய நிறுவனங்களில் லட்சக்கணக்கான மகள்கள் கல்வி பெற்று, இன்று தேசத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத்தி வருகின்றனர்.

நண்பர்களே,

தில்லி முதல்வர் திருமதி. ரேகா குப்தா அவர்களும் இந்த மேடையில் அமர்ந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்புதான், நமது குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்கள், ஸ்வாட்ரன் லீடர் ஷிவாங்கி சிங்குடன் ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார். இன்று நமது மகள்கள் போர் விமானங்களை இயக்குகிறார்கள், மேலும் 'ட்ரோன் சகோதரிகள்' என நவீன விவசாயத்தையும் முன்னெடுத்துச் செல்கிறார்கள். இன்று உலகில் அதிக எண்ணிக்கையிலான பெண் பட்டதாரிகளை 'ஸ்டெம்' பாடப்பிரிவில் கொண்ட நாடாக பாரதம் திகழ்கிறது என்று நாம் பெருமையுடன் சொல்ல முடியும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்கள் தலைமைப் பொறுப்புகளை ஏற்று வருகின்றனர். நமது உயரிய அறிவியல் நிறுவனங்களில், மங்கள்யான், சந்திரயான் மற்றும் ககன்யான் போன்ற திட்டங்களில் பெண் விஞ்ஞானிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இந்த மாற்றம், சுவாமி தயானந்த ஜியின் கனவுகளை நனவாக்கி, தேசம் சரியான பாதையில் நகர்வதைக் காட்டுகிறது.

நண்பர்களே, சுவாமி தயானந்தரின் ஒரு ஆழமான சிந்தனையை நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு, பலரிடமும் பகிர்ந்துள்ளேன். சுவாமி அவர்கள் கூறினார்: "யார் மிகக் குறைவாகப் பெற்றுக்கொண்டு, மிக அதிகமாகப் பங்களிக்கிறாரோ, அவரே உண்மையான முதிர்ச்சியடைந்த மனிதர்." இந்தச் சில வார்த்தைகளுக்குள் ஒரு அசாதாரணமான கருத்து அடங்கியுள்ளது. ஒரு கருத்தின் உண்மையான வலிமை அதன் அர்த்தத்தில் மட்டுமல்ல, அது எவ்வளவு காலம் நிலைத்திருக்கிறது மற்றும் எத்தனை உயிர்களை மாற்றுகிறது என்பதில்தான் உள்ளது. மகரிஷி தயானந்த ஜியின் கருத்துக்களை இந்த அளவுகோலில் நாம் சோதிக்கும்போது, ஆர்ய சமாஜத்தின் அர்ப்பணிப்புள்ள தொண்டர்களைப் பார்க்கும்போது, காலப்போக்கில் அவரது கருத்துக்கள் மேலும் பிரகாசமாகவும் வலிமையாகவும் மாறியுள்ளதை நாம் உணர்கிறோம்.

சகோதர சகோதரிகளே,

சுவாமி தயானந்த சரஸ்வதி ஜி தனது வாழ்நாளில் 'பரோபகாரிணி சபா'வை நிறுவினார். அவர் விதைத்த அந்த விதை இன்று பல கிளைகளுடன் ஒரு பிரம்மாண்டமான மரமாக வளர்ந்துள்ளது. குருகுல் காங்க்ரி, குருகுல் குருக்ஷேத்ரா, டி.ஏ.வி  நிறுவனங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் அந்தந்த துறைகளில் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. தேசம் ஒரு நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம், ஆர்ய சமாஜ மக்கள் எப்போதும் நாட்டு மக்களுக்குச் சேவை செய்யத் தங்களை தன்னலமின்றி அர்ப்பணித்துள்ளனர். பாரதப் பிரிவினையின் துயரமான காலத்தில், அனைத்தையும் இழந்த அகதிகளுக்கு உதவுவதிலும், மறுவாழ்வு அளிப்பதிலும், கல்வி புகட்டுவதிலும் ஆர்ய சமாஜம் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியது. இன்றும் கூட, இயற்கை பேரிடர் காலங்களில், துன்பத்தில் இருப்பவர்களுக்குச் சேவை செய்வதில் ஆர்ய சமாஜம் முன்னணியில் உள்ளது.

சகோதர சகோதரிகளே,

ஆர்ய சமாஜத்திற்கு தேசம் கடன்பட்டுள்ளது.  நாட்டின் பண்டைய குருகுல மரபைப் பாதுகாக்க அது மேற்கொண்ட முயற்சியாகும். குருகுல முறையின் வலிமையால் இந்தியா அறிவு மற்றும் அறிவியலின் உச்சத்தில் நின்ற ஒரு காலம் இருந்தது. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இந்த முறை திட்டமிட்டுத் தாக்கப்பட்டது. இதன் விளைவாக, நமது அறிவுத் தளம் சிதைக்கப்பட்டது, நமது விழுமியங்கள் பலவீனமடைந்தன, நமது இளைய தலைமுறை திசை மாறியது. சிதைந்து கொண்டிருந்த குருகுல மரபைப் புதுப்பித்து பாதுகாப்பதற்கு ஆர்ய சமாஜம் முன்வந்தது. அதுமட்டுமின்றி, ஆர்ய சமாஜத்தின் குருகுலங்கள் பண்டைய விழுமியங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், சமகாலக் கல்வியையும் இணைத்து தங்களை நவீனப்படுத்திக் கொண்டன. இன்று, தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் தேசம் மீண்டும் கல்வி விழுமியங்கள் மற்றும் குணநலன்களைக் கட்டமைப்பதோடு ஒருங்கிணைத்து வரும் வேளையில், இந்த புனிதமான இந்தியக் கற்றல் மரபைப் பாதுகாத்ததற்காக ஆர்ய சமாஜத்திற்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நமது வேதங்கள், “கிருண்வந்தோ விஸ்வம் ஆர்யம்” என்று பறைசாற்றுகின்றன. அதாவது, "முழு உலகையும் உன்னதமானதாக மாற்றுவோம், உன்னத சிந்தனைகள் மற்றும் செயல்களின் மூலம் மனிதகுலத்தை உயர்த்துவோம்" என்பதே இதன் பொருள். சுவாமி தயானந்த ஜி இந்த வேதச் செய்தியையே ஆர்ய சமாஜத்தின் தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டார். இன்று, இதே வேத கால லட்சியம்தான் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் வழிகாட்டும் கொள்கையாக மாறியுள்ளது. அதாவது, இந்தியாவின் முன்னேற்றத்தின் மூலம் உலகின் நலன்; இந்தியாவின்  செழிப்பின் மூலம் மனிதகுலத்திற்குச் சேவை. இன்று பாரதம் நிலையான வளர்ச்சிக்கான உலகளாவிய குரலாக உருவெடுத்துள்ளது.

சுவாமி அவர்கள் அன்று "வேதங்களுக்குத் திரும்புங்கள்" என்று அழைப்பு விடுத்தது போல, இன்று இந்தியா உலகை வேத கால வாழ்க்கை முறைக்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை என்ற திட்டத்தை நாம் தொடங்கியுள்ளோம், அதற்கு உலகளாவிய ஆதரவு கிடைத்து வருகிறது. "ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு மின் தொகுப்பு"  என்ற தொலைநோக்குப் பார்வையின் மூலம், தூய்மையான ஆற்றலை உலகளாவிய இயக்கமாக மாற்றி வருகிறோம். நமது யோகா கலையும் சர்வதேச யோகா தினத்தின் மூலம் 190-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சென்றடைந்துள்ளது. சமநிலையான, விழிப்புணர்வுடன் கூடிய வாழ்க்கையை வாழ்வதற்கான அர்ப்பணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பணிகளில் உலகம் காட்டும் ஆர்வம் ஆகியவை ஆர்ய சமாஜ மக்கள் நீண்டகாலமாகத் தங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து வரும் விழுமியங்களின் வெளிப்பாடே ஆகும். ஆர்ய சமாஜத்தினர் எளிய வாழ்க்கை முறை, சேவை மனப்பான்மை, இந்திய உடை மற்றும் கலாச்சாரம் மீதான பற்று, சுற்றுச்சூழல் அக்கறை மற்றும் இந்திய விழுமியங்களை முன்னெடுப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதனால் தான் சகோதர சகோதரிகளே, "சர்வே பவந்து சுகினஹ்" (அனைத்து உயிர்களும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்) என்ற பழமையான முழக்கத்துடன், மனிதகுலத்தின் நலனுக்காக உலகளாவிய முயற்சிகளுக்கு பாரதம் தலைமை தாங்கி வருகிறது. பாரதம் ஒரு 'விஸ்வ பந்து' (உலகின் உண்மையான நண்பன்) என்ற தனது பங்கினை வலுப்படுத்தி வரும் நிலையில், ஆர்ய சமாஜத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்தத் திட்டத்தைத் தனது சொந்தத் திட்டமாகவே உணர்கிறார்கள். இதற்காக உங்கள் அனைவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

நண்பர்களே, சுவாமி தயானந்த சரஸ்வதி ஜி ஏற்றி வைத்த தீபம், கடந்த 150 ஆண்டுகளாக ஆர்ய சமாஜத்தின் பணிகளின் மூலம் சமூகத்திற்கு ஒளியூட்டி வருகிறது. சுவாமி ஜி நம் அனைவரிடமும் ஒரு ஆழமான பொறுப்புணர்வையும், புதிய கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லும் உணர்வையும், தேக்கமடைந்த பழக்கவழக்கங்களை உடைத்துத் தேவையான சீர்திருத்தங்களைத் தொடங்கும் ஆற்றலையும் ஏற்படுத்தியுள்ளார் என்று நான் நம்புகிறேன். நீங்கள் எப்போதும் என் மீது அன்பு செலுத்துபவர்கள், அதனால் இன்று உங்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா? ஆம், நீங்கள் அதை முழுமனதுடன் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும்! தேசத்தைக் கட்டியெழுப்பும் இந்த மகா யாகத்தில் நீங்கள் ஏற்கனவே பெரும் பங்களிப்பை அளித்து வருகிறீர்கள், இருப்பினும் தேசத்தின் தற்போதைய சில முன்னுரிமைகளை உங்கள் முன் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். உதாரணமாக, சுதேசி இயக்கம் வரலாற்று ரீதியாக ஆர்ய சமாஜத்துடன் ஆழமான தொடர்புடையது. இன்று தேசம் மீண்டும் "உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம்" என்ற சுதேசி அழைப்பை முன்னெடுக்கும் வேளையில், இந்த முயற்சியில் உங்களின் பங்கு மிக முக்கியமானது.

நண்பர்களே,

சிறிது காலத்திற்கு முன்பு நாடு 'ஞான பாரதம்' என்ற திட்டத்தைத் தொடங்கியதை நீங்கள் நினைவில் வைத்திருக்கலாம். பாரதத்தின் பண்டைய கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல்மயமாக்கிப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். எல்லையற்ற அறிவின் இந்த விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள், இளைய தலைமுறை அவற்றோடு இணைந்து அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும் போதுதான் உண்மையாகப் பாதுகாக்கப்படும். எனவே, நான் ஆர்ய சமாஜத்திற்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். பாரதத்தின் புனிதமான பண்டைய நூல்களைக் கண்டறிந்து பாதுகாப்பதற்காக நீங்கள் 150 ஆண்டுகளாக அயராது உழைத்துள்ளீர்கள். பல தலைமுறைகளாக, ஆர்ய சமாஜத்தைப் பின்பற்றுபவர்கள் நமது வேத நூல்களை அவற்றின் அசல் வடிவத்தில் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளனர். ஞான பாரதம் திட்டம் இப்போது இந்த முயற்சியைத் தேசிய அளவில் முன்னெடுத்துச் செல்லும். இதை உங்களது சொந்தப் பிரச்சாரமாகக் கருதி, இதில் பங்களிப்பதோடு, உங்கள் குருகுலங்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் இளைஞர்களை இந்தக் கையெழுத்துப் பிரதிகளை ஆய்வு செய்யவும் ஆராய்ச்சி செய்யவும் ஊக்குவிக்கவும்.

நண்பர்களே,

மகரிஷி தயானந்த ஜியின் 200-வது பிறந்தநாளின் போது, 'யாகங்களில்' பயன்படுத்தப்படும் தானியங்கள் குறித்து நான் பேசியிருந்தேன். யாகத்தில் 'ஸ்ரீ அன்னா' (Shri Anna - சிறுதானியங்கள்) எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இத்தகைய சடங்குகளில் பயன்படுத்தப்படும் தானியங்கள் மிகவும் தூய்மையானதாகக் கருதப்படுகின்றன. அத்துடன், நமது பண்டைய பாரம்பரியமான சிறுதானியங்களையும், நமது ஸ்ரீ அன்னா பாரம்பரியத்தையும் நாம் ஊக்குவிக்க வேண்டும். இந்தத் தானியங்களின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அவை இயற்கையாகவே வளர்க்கப்படுகின்றன. திரு ஆச்சார்ய   இப்போது விரிவாக விளக்கிய இயற்கை விவசாயம், ஒரு காலத்தில் பாரதப் பொருளாதாரத்தின் முக்கிய அஸ்திவாரமாக இருந்தது. இன்று உலகம் மீண்டும் அதன் மதிப்பை அங்கீகரித்து வருகிறது. இயற்கை விவசாயத்தின் பொருளாதார மற்றும் ஆன்மீக அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு நான் ஆர்ய சமாஜத்தை வலியுறுத்துகிறேன்.

மற்றொரு முக்கியமான விஷயம் நீர் பாதுகாப்பு. இன்று, 'ஜல் ஜீவன் மிஷன்' மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் சுத்தமான நீரைக் கொண்டு செல்ல நாடு உழைத்து வருகிறது. ஜல் ஜீவன் மிஷன் என்பது உலகின் மிக தனித்துவமான பிரச்சாரங்களில் ஒன்றாகும். இருப்பினும், வருங்கால சந்ததியினருக்குப் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் மட்டுமே இந்த அமைப்புகள் அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதை அடைய, நாம் சொட்டு நீர் பாசனத்தை ஊக்குவித்து வருகிறோம், மேலும் நாடு முழுவதும் 60,000-க்கும் மேற்பட்ட 'அமிர்த சரோவர்'களை (புனித குளங்கள்) உருவாக்கியுள்ளோம். ஆனால் அரசாங்க முயற்சிகளுடன் இணைந்து, சமுதாயமும் முன்வர வேண்டும். பாரம்பரியமாக, ஒவ்வொரு கிராமத்திலும் குளங்கள், ஏரிகள், கிணறுகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் இருந்தன, ஆனால் கால மாற்றத்தால் அவை புறக்கணிக்கப்பட்டு வறண்டு போயின. இந்த இயற்கை நீர் ஆதாரங்களை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் வேண்டிய அவசியத்தை நாம் மக்களுக்குத் தொடர்ந்து உணர்த்த வேண்டும். அரசின் பிரச்சாரமான "மழையைப் பிடிப்போம்", உறிஞ்சு குழாய்களைக் அமைத்தல் மற்றும் நிலத்தடி நீரைச் செறிவூட்ட மழைநீரைப் பயன்படுத்துதல் ஆகியவை இன்றைய காலத்தின் தேவையாகும்.

நண்பர்களே,

கடந்த சில காலமாக, "தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடுவோம்" என்ற பிரச்சாரமும் அமோக வெற்றி பெற்றுள்ளது. இது சில நாட்கள் அல்லது ஆண்டுகளுக்கான பிரச்சாரம் அல்ல. மரக்கன்று நடுவது என்பது ஒரு தொடர்ச்சியான பணியாக இருக்க வேண்டும். இந்த உன்னதமான நோக்கத்தில் ஆர்ய சமாஜம் மேலும் பலரை இணைக்க முடியும்.

நண்பர்களே,

நமது வேதங்கள் நமக்குக் கற்பிக்கின்றன: "சங்கச்சத்வம் சம்வதத்வம் சம் வோ மனான்சி ஜானதாம்". அதாவது, "நாம் ஒன்றாக நடப்போம், ஒன்றாகப் பேசுவோம், ஒருவருக்கொருவர் மனதைப் புரிந்துகொள்வோம்." சாராம்சத்தில், இது பரஸ்பர மரியாதை மற்றும் சிந்தனை நல்லிணக்கத்திற்கான அழைப்பு. இந்த வேதச் செய்தியை தேசத்தின் அழைப்பாக நாம் பார்க்க வேண்டும்; தேசத்தின் தீர்மானங்களை நமது தனிப்பட்ட தீர்மானங்களாக மாற்ற வேண்டும்; மக்கள் பங்களிப்பின் மூலம் கூட்டு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். கடந்த 150 ஆண்டுகளில், ஆர்ய சமாஜம் தனது பணிகளின் மூலம் இந்த உணர்வை வெளிப்படுத்தியுள்ளது. இந்த உணர்வைத்தான் நாம் தொடர்ந்து வலுப்படுத்தி நிலைநாட்ட வேண்டும். மகரிஷி தயானந்த சரஸ்வதி ஜியின் போதனைகள் மனிதகுலத்தை நல்வழியில் தொடர்ந்து வழிநடத்தும் என்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையுடன், ஆர்ய சமாஜத்தின் 150-வது ஆண்டு விழாவில் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் மிக்க நன்றி. வணக்கம்.

***

(Release ID:2184816)

AD/VK/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2256853) வருகையாளர் எண்ணிக்கை : 11