தேர்தல் ஆணையம்
சட்டப்பேரவை பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026
மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தல் மற்றும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் படிவம் 17ஏ மீதான பரிசீலனை நிறைவடைந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
25 APR 2026 11:56AM by PIB Chennai
தேர்தல் ஆணையம், வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தவும், வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றால் அவற்றைக் கண்டறியவும், தேவைப்பட்டால் மறுவாக்குப் பதிவுக்குப் பரிந்துரைக்கவும், படிவம் 17ஏ (வாக்காளர் பதிவேடு), பிற தேர்தல் நாள் ஆவணங்கள் மற்றும் இதர பதிவேடுகளைத் தேர்தலுக்குப் பின் பரிசோதிப்பது தொடர்பான ஒருங்கிணைந்த அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மேற்கு வங்கத்தில் முதற்கட்டத் தேர்தல் நடைபெற்ற அனைத்து 152 சட்டமன்றத் தொகுதிகளிலும், 2026 ஏப்ரல் 24 அன்று, தேர்தல் அதிகாரிகளால், பொதுப் பார்வையாளர்கள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் ஆவணச் சரிபார்ப்பு சுமுகமாக நடத்தப்பட்டது.
மேற்கு வங்க பொதுத் தேர்தலின் முதல் கட்டத்தில், 1,478 வேட்பாளர்கள் அனைவருக்கும் பரிசீலனை செயல்முறையில் பங்கேற்பதற்காக, தேதி, நேரம் மற்றும் இடம் குறித்து தெரிவிக்கப்பட்டது. பரிசீலனைக்குப் பிறகு, 23 ஏப்ரல் 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெற்ற 44,376 வாக்குச்சாவடிகளில் எந்தவொரு மறுதேர்தலுக்கும் பரிந்துரைக்கப்படவில்லை.
அதேபோல், தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்ற அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 2026 ஏப்ரல் 24 அன்று, தேர்தல் அதிகாரிகளால், பொதுப் பார்வையாளர்கள் மற்றும் 1,825 வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் ஆவணச் சரிபார்ப்பு சுமுகமாக நடத்தப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 4,023 வேட்பாளர்கள் அனைவருக்கும் பரிசீலனை செயல்முறையில் பங்கேற்பதற்காக, அதன் தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டன. பரிசீலனைக்குப் பிறகு, 2026 ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெற்ற 75,064 வாக்குச்சாவடிகளில் எந்தவொரு மறுதேர்தலுக்கும் பரிந்துரைக்கப்படவில்லை.
இரு மாநிலங்களிலும் முழு செயல்முறையும் வீடியோ பதிவு செய்யப்பட்டு, ஆய்வுக்குப் பிறகு, படிவம் 17ஏ மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் பிராந்திய அதிகாரியின் முத்திரையுடன் சீல் வைக்கப்பட்டன.
2026 ஏப்ரல் 23 அன்று, பொதுப் பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் சீல் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்ப்பு மாதிரிச் சீட்டுகள் (VVPATs) பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பு அறைகளின் பாதுகாப்பிற்காக, இரட்டைப் பூட்டு அமைப்பு, 24 மணி நேரமும் இரு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறைகளின் கதவுகள், பிற பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் அலுவலர்கள் (ROs) ஒரு நாளைக்கு இருமுறை பாதுகாப்பு அறைகளுக்குச் சென்று ஏற்பாடுகளைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . அதே சமயம், மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் (DEOs) தலைமையகத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளை ஒரு நாளைக்கு ஒரு முறையும், தலைமையகத்திற்கு வெளியே உள்ள அறைகளை 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறையும் பார்வையிட வேண்டும்.
பாதுகாப்பு அறைகளைக் கண்காணிப்பதற்காக, வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பாதுகாப்பு அறை கட்டட வளாகத்தில் முகாம்களை அமைக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2255471®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2255492)
வருகையாளர் எண்ணிக்கை : 21