பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்கான பிரதமரின் விருதுகள் அதிகரித்துள்ளன: 18வது குடிமைப் பணிகள் தினத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பேச்சு
இடுகை இடப்பட்ட நாள்:
21 APR 2026 3:50PM by PIB Chennai
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்கான பிரதமரின் விருதுகள்,750-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கணிசமாக உயர்ந்துள்ளதாக மத்திய பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற 18வது குடிமைப் பணிகள் தின விழாவில் பேசிய அவர், 2023 ஆம் ஆண்டில் 1,216 ஆக இருந்த இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் 2024-ல் 1,588 ஆகவும், 2025-ல் 2,035 ஆகவும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஐகாட் கர்மயோகி தளம் 88 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளை இணைத்துள்ளதாகவும், இதன் மூலம், அவர்கள் 2,000-க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளைப் பயன்படுத்தியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புமுறை (CPGRAMS) மூலமான குறைதீர்ப்பு, 2014-ல் ஆண்டுக்குச் சுமார் 2 லட்சம் புகார்களிலிருந்து தற்போது 25-30 லட்சமாக விரிவடைந்துள்ளது. இதில் 95%-க்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்க்கப்பட்டு, சராசரி தீர்வு நேரம் 60 நாட்களிலிருந்து சுமார் 12 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
வளர்ந்து வரும் நிர்வாக சவால்களுக்கு அரசு ஊழியர்களைத் தயார்படுத்துவதில் கவனம் செலுத்தி, கர்மயோகி இயக்கம் மற்றும் “கர்மயோகி பிராரம்பம்” போன்ற முன்முயற்சிகள் மூலம் பயிற்சி மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை விரிவுபடுத்துவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். மாலத்தீவுகள், மொரிஷியஸ், பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் சிபிஜிஆர்ஏஎம்எஸ் போன்ற அமைப்புமுறைகளை ஆய்வு செய்வதால், இந்திய நிர்வாக மாதிரிகளின் மீது உலகளாவிய ஆர்வம் அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். 2047-ல் அடுத்த தலைமுறை அரசு ஊழியர்களைத் தயார்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட “வளர்ச்சியடைந்த இந்தியா: குடிமக்களை மையமாகக் கொண்ட நிர்வாகம் மற்றும் கடைசி மைல் வளர்ச்சி” என்ற கருப்பொருளுடன் இந்த முன்முயற்சி ஒத்துப்போகிறது என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். பிரதமரின் முதன்மைச் செயலாளர்கள் டாக்டர் பி. கே. மிஸ்ரா, திரு சக்திகாந்த தாஸ், அமைச்சரவைச் செயலாளர் டாக்டர் டி. வி. சோமநாதன் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறைச் செயலாளர் திருமிகு நிவேதிதா சுக்லா வர்மா ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2254123&v=53432423gdfgfdgf®=3&lang=2
***
TV/BR/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2254348)
வருகையாளர் எண்ணிக்கை : 13