தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026

இடுகை இடப்பட்ட நாள்: 20 APR 2026 3:02PM by PIB Chennai

அசாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை பொதுத்தேர்தல்கள் மற்றும் ஆறு மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் மார்ச் 15, 2026 அன்று அறிவித்தது.

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் (முதற்கட்டம்) வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி (புதன்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 4-ம் தேதி (திங்கட்கிழமை) அன்று நடைபெறும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 135சி-ன்படி, வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு முந்தைய 48 மணிநேரத்திலிருந்து எந்தவொரு விடுதி, உணவகம், மதுக்கடைகள், கடைகள் அல்லது தனியார், பொது இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் மதுபானங்கள் அல்லது போதைப்பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்யவோ கூடாது.

மேற்கூறிய சட்ட விதிமுறையின் அடிப்படையில், பொதுத்தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில், வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் அதற்கான நேரம் நிறைவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முந்தைய 48 மணி நேரக் காலத்தை, தொடர்புடைய மாநில/யூனியன் பிரதேச சட்டங்களின் கீழ் மதுவிலக்கு தினமாக அறிவித்து அதற்கான அறிவிக்கை வெளியிடப்படும். மறுவாக்குப்பதிவு தேவைப்படும் வாக்குச் சாவடிகளில் இதே விதிமுறை பொருந்தும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 4-ம் தேதி திங்கட்கிழமையன்று, சம்பந்தப்பட்ட மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் தொடர்புடைய சட்டங்களின் கீழ், மதுவிலக்கு தினமாக அறிவிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்துகிறது.

மேற்கூறிய நாட்களில், மது விற்பனை அல்லது பார்கள், மதுக்கடை, தங்கும் விடுதி, உணவகம் மற்றும் பிற நிறுவனங்களும், மது விற்பனை செய்யவோ, விநியோகிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டாது.

மதுபானங்களை இருப்பு வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் பல்வேறு வகையான உரிமங்களின் கீழ் செயல்படும் தனியார் அல்லாத மன்றங்கள், நட்சத்திரத் தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள், இந்த நாட்களில் மது விநியோகிக்க அனுமதிக்கப்பட மாட்டாது.

மேற்கூறிய காலகட்டத்தில், தனிநபர்கள் மதுபானங்களை இருப்பு வைத்துக் கொள்வது கட்டுப்படுத்தப்பட வேண்டும், உரிமம் பெறாத வளாகங்களில் மதுபானங்களை இருப்பு வைப்பது தொடர்பாக மத்திய கலால் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.

***

(Release ID: 2253728)

SS/SV/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2253842) வருகையாளர் எண்ணிக்கை : 72