பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 13 SEP 2025 2:34PM by PIB Chennai

பாரத் மாதா கி ஜே, பாரத் மாதா கி ஜே,  பாரத் மாதா கி ஜே. ஆளுநர் திரு அஜய் பல்லா அவர்களே, மாநில நிர்வாகத்தின் இதர அதிகாரிகளே, மணிப்பூர் மாநிலத்தின் சகோதர சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்!

இந்த மணிப்பூர் மாநிலம் வீரம் மற்றும் உறுதிப்பாட்டிற்கு பெயர் பெற்ற நிலமாகும். இங்கு உள்ள மலைகள் இயற்கையின் பொக்கிஷமாக விளங்கும் அதே வேளையில் உங்களது கடின உழைப்பின் சின்னமாகவும் இந்த மலைகள் உயர்ந்து நிற்கின்றன. மணிப்பூர் மக்களின் உணர்வை நான் வணங்குகிறேன்.  கன மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் இங்கு வந்திருப்பதற்காக உங்களது அன்பிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கனமழையினால் என்னால் ஹெலிகாப்டரில் வர முடியவில்லை அதனால் சாலை வழியாக இங்கு வந்தேன். இன்று வரும் வழியில் நான் கண்ட காட்சி, ஹெலிகாப்டர் இயங்காமல் போனது கடவுளின் நல்ல செயல் என்று சொல்லத் தோன்றியது. சாலை மார்க்கமாக நான் வந்த போது, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை மூவண்ணக் கொடியை ஏந்தி நீங்கள் காட்டிய அன்பைக் கண்டு நான் நெகிழ்ந்து போனேன். இந்த தருணத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது. மணிப்பூர் மக்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

நண்பர்களே,

மணிப்பூர் மாநிலம் நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இணைப்பு எப்போதுமே மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. நல்ல சாலைகள் இல்லாமல் நீங்கள் எதிர்கொண்ட சவால்களை நான் அறிவேன். அதனால்தான் கடந்த 2014-ம் ஆண்டு முதல் மணிப்பூரின் இணைப்பை மேம்படுத்துவதற்காக நான் தொடர்ந்து வலிமையாகக் குரல் கொடுத்து வருகிறேன். இதை அடைவதற்காக இந்திய அரசு இரண்டு நிலைகளில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. முதலாவதாக மணிப்பூரில் ரயில்வே மற்றும் சாலை மேம்பாட்டிற்கான பட்ஜெட்டை அண்மைக் காலங்களில் நாங்கள் கணிசமாக உயர்த்தி இருக்கிறோம். இரண்டாவதாக, நகரங்களுக்கு மட்டுமல்லாமல் கிராமங்களுக்கும் சாலைகளை விரிவுபடுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.

நண்பர்களே,

சமீப ஆண்டுகளில், இங்கு தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டிற்காக 3700 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும் 8700 கோடி ரூபாய் முதலீட்டுடன் புதிய நெடுஞ்சாலைகளை அமைக்கும் பணி விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு உள்ள கிராமங்களை அடைவது முன்னர் எவ்வளவு சிரமமாக இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். இன்று, இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு சாலை இணைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் மலைகளில் வசிக்கும் மக்களும், பழங்குடி கிராமவாசிகளும் பெருமளவில் பயனடைந்துள்ளனர்.

நண்பர்களே,

எங்கள் ஆட்சியின் போது மணிப்பூரில் ரயில் இணைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஜிரிபாம்–இம்பால் ரயில் வழித்தடம் வெகு விரைவில் தலைநகர் இம்பாலை தேசிய ரயில் இணைப்புடன் இணைக்கும். இந்த திட்டத்திற்காக அரசு 22 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. 400 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இம்பால் விமான நிலையம், விமான இணைப்பை புதிய உச்சங்களுக்கு முன்னெடுத்துச் செல்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து நாட்டின் இதர பகுதிகளுக்கும் ஹெலிகாப்டர் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் இணைப்பு பணிகள் மணிப்பூர் மாநில மக்களுக்கு  மேம்பட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவதுடன் இங்கு உள்ள இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

நண்பர்களே,

இன்று இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது. வெகு விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாம் மாறவிருக்கிறோம். வளர்ச்சியின் பயன்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைய வேண்டும் என்பதே எனது நோக்கம். ஒரு காலத்தில், தில்லியில் வெளியாகும் அறிவிப்புகள் இங்கு அமல்படுத்தப்பட பல தசாப்தங்கள் தேவைப்பட்டன. இன்று நமது சூரசந்த்பூர், நமது மணிப்பூர், நாட்டின் இதர பகுதிகளுடன் இணைந்து வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. உதாரணத்திற்கு, நாடு முழுவதும் ஏழைகளுக்கு நிரந்தரமான வீடு கட்டி தரும் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். இந்த திட்டத்தினால் மணிப்பூரில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து இருப்பதுடன் இங்கு சுமார் 60000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல ஒரு காலத்தில் இந்தப் பகுதி மின்சார விநியோகம் தொடர்பான ஏராளமான சவால்களை எதிர்கொண்டது.  இத்தகைய பிரச்சினைகளிலிருந்து உங்களை விடுவிக்கவும் எங்களது அரசு உறுதியேற்று இருப்பதுடன், இதன் விளைவாக மாநிலத்தில் ஒரு லட்சம் குடும்பங்கள் இலவச மின்சார இணைப்புகளைப் பெற்றுள்ளன.

நண்பர்களே,

தண்ணீரை பெறுவதில் நமது தாய்மார்களும் சகோதரிகளும் பெரும் இன்னல்களை சந்தித்து வந்தனர். இதற்காக இல்லந்தோறும் குழாய் மூலம் குடிநீர் திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தினோம். இந்தத் திட்டத்தின் கீழ் சமீப ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 கோடி மக்கள் குடிநீர் குழாய் வசதியைப் பெற்று பயனடைந்திருக்கிறார்கள். மணிப்பூரில் மட்டும் கடந்த 7-8 ஆண்டுகளுக்கு முன்பு 25,000-30000 வீடுகளில் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு இருந்தன. இன்று 3,50,000-க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த வசதியைப் பெற்றுள்ளன. வரும் நாட்களில் மணிப்பூரின் அனைத்து வீடுகளும் தண்ணீர் குழாய் இணைப்புகளைப் பெற்று பயனடையும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

முந்தைய காலங்களில் மலை சார்ந்த மற்றும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் நல்ல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் முதலியவை கனவாகவே இருந்தன. ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மிகவும் தாமதம் ஏற்பட்டது.  இந்திய அரசின் முயற்சிகளால் இன்று இந்த நிலை மாறி வருகிறது. சூரசந்த்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரி, தற்போது புதிய மருத்துவர்களையும், மேம்பட்ட சுகாதார சேவைகளையும் வழங்கத் தயாராகி வருகிறது. சுதந்திரம் அடைந்து பல தசாபங்களுக்கு பிறகும் மணிப்பூர் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் மருத்துவக் கல்லூரிகள் எதுவும் இல்லை. பிரதமரின் தெய்வீக திட்டத்தின் கீழ், எங்கள் அரசு 5 மலை மாவட்டங்களில் நவீன சுகாதார மையங்களை உருவாக்கி வருகின்றது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலமாக ஏழை மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையில் இலவச மருத்துவ சிகிச்சைகளை அரசு வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 2.5 லட்சம் பேர் இலவச சிகிச்சையைப் பெற்று பயனடைந்திருக்கிறார்கள். இந்தத் திட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால், எனது ஏழை சகோதர, சகோதரிகள் தங்களது சேமிப்பில் இருந்து ஏறத்தாழ 350 கோடி ரூபாயை மருத்துவ சிகிச்சைக்காக செலவிட நேர்ந்திருக்கும். ஒவ்வொரு ஏழை குடிமகனின் பிரச்சனைக்கும் தீர்வு காண எங்கள் அரசு முன்னுரிமை அளிப்பதன் காரணமாக, ஒட்டுமொத்த செலவையும் இந்திய அரசே ஏற்கிறது.

நண்பர்களே,

மணிப்பூர் மாநிலம், நம்பிக்கை மற்றும் வாக்குறுதியின் பூமி. துரதிருஷ்டவசமாக, இந்த பிரம்மாண்டமான பகுதியை வன்முறை சூழ்ந்துள்ளது. முகாம்களில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களை சற்று நேரத்திற்கு முன்பு நான் சந்தித்தேன். அவர்களுடன் உரையாடிய பிறகு, மணிப்பூருக்கு நம்பிக்கையின் புதிய விடியல் காத்துக் கொண்டிருக்கிறது என்று என்னால் கூற முடியும்.

நண்பர்களே,

எந்தவொரு இடத்திலும் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அமைதியை நிலை நாட்டுவது அவசியம். கடந்த 11 ஆண்டுகளில் வடகிழக்குப் பகுதிகளில் ஏராளமான நீண்ட கால மோதல்களும் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுள்ளன. அமைதியின் பாதையைத் தேர்ந்தெடுக்க மக்கள் முடிவு செய்திருப்பத்துடன் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்திருக்கிறார்கள். உடன்படிக்கை ஏற்படுவதற்காக மலைப்பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்குகளைச் சேர்ந்த ஏராளமான குழுக்களுடன் அண்மையில் பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதை வரவேற்கிறேன். பேச்சுவார்த்தை, மரியாதை மற்றும் பரஸ்பர புரிதலின் வாயிலாக அமைதியை ஏற்படுத்தும் இந்திய அரசின் உறுதிப்பாட்டின் ஓர் அங்கமாக இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அமைதியின் வழியில் முன்னேறி, தங்கள் கனவுகளை நனவாக்குமாறும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்குமாறும் அனைத்து அமைப்புகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கும், மணிப்பூர் மக்களுக்கும், இந்திய அரசும், நானும் துணையாக இருக்கிறோம் என்று நான் உறுதியளிக்கிறேன்.

நண்பர்களே,

மணிப்பூரில் இயல்பு நிலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இடம்பெயர்ந்திருந்த குடும்பங்களுக்கு 7000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கு எங்கள் அரசு உதவி வருகிறது. அண்மையில் சுமார் 3,000 கோடி ரூபாய்க்கான சிறப்பு தொகுப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இடம்பெயர்ந்த மக்களுக்கு  500 கோடி ரூபாய் சிறப்பு உதவித் தொகை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களே,

மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடி இளைஞர்களின் கனவுகள் மற்றும் போராட்டங்களை நான் நன்கு அறிவேன். உங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ஏராளமான தீர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தவும், அவற்றின் முன்னேற்றத்திற்காக நிதிகள் முறையாக ஒதுக்கப்படுவதை உறுதி செய்வதிலும் அரசு உறுதிப்பூண்டுள்ளது.

நண்பர்களே,

ஒவ்வொரு பழங்குடி சமூகத்தின் வளர்ச்சிக்கும் நாடு முன்னுரிமை அளிக்கிறது. மண்ணின் மைந்தன் பழங்குடியின கிராம வளர்ச்சி இயக்கத்தின் கீழ் பழங்குடியினர் பகுதிகளில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பணிகள் முதன் முறையாக நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் மணிப்பூரில் சுமார் 500 கிராமங்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழங்குடியின பகுதிகளில் ஏகலைவ மாதிரி உறைவிடப் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மணிப்பூரிலும் இதுபோன்ற 18 பள்ளிகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நவீனமயமாக்கல் பணிகள், இங்குள்ள மலை மாவட்டங்களில் கல்வி சார்ந்த வசதிகளை கணிசமாக மேம்படுத்தவிருக்கின்றன.

 

நண்பர்களே,

மணிப்பூரின் கலாச்சாரம் எப்போதுமே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை ஊக்குவித்து வருகிறது. இந்தப் பணியில் எங்கள் அரசும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மணிப்பூரில் வசிக்கும் பெண்களுக்கு ஆதரவளிப்பதற்காக பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளையும் அரசு கட்டமைத்து வருகிறது.

நண்பர்களே,

மணிப்பூரை அமைதி, வளம் மற்றும் முன்னேற்றத்தின் சின்னமாக மாற்றும் இலக்குடன் நாங்கள் முன்னேறி வருகிறோம். மணிப்பூரின் வளர்ச்சிக்கும், இடம்பெயர்ந்த மக்களை விரைவில் தகுந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கும், அமைதியை நிலைநாட்டுவதற்கும், மணிப்பூர் அரசுடன் இணைந்து மத்திய அரசு தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். மீண்டும் ஒருமுறை, வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். நீங்கள் காட்டிய அன்பு மற்றும் மரியாதைக்காக மணிப்பூர் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்து சொல்வோம்:

பாரத் மாதா கி ஜே,

பாரத் மாதா கி ஜே,

பாரத் மாதா கி ஜே,

மிக்க நன்றி.

--- 

(Release 2166246)

AD/VK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2250500) வருகையாளர் எண்ணிக்கை : 21