பிரதமர் அலுவலகம்
ரஷ்ய அதிபருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது போது பிரதமர் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 DEC 2025 3:33PM by PIB Chennai
மேதகு அதிபர் அவர்களே, எனது நண்பரே, அதிபர் புதின் அவர்களே, இரு நாடுகளின் பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே,
வணக்கம்!
டூப்ரி டேன்! (Dobryy den - ரஷ்ய மொழியில் 'வணக்கம்')
23-வது இந்திய-ரஷ்ய உச்சிமாநாட்டிற்காக அதிபர் புதினை இன்று வரவேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களின் இருதரப்பு உறவுகள் பல வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கற்களைக் கடந்து வரும் நேரத்தில் இவரது வருகை அமைந்துள்ளது.
சரியாக 25 ஆண்டுகளுக்கு முன், அதிபர் புதின் அவர்கள்தான் எங்களின் உத்திசார் கூட்டு ஒத்துழைப்புக்கு அடிக்கல் நாட்டினார். 15 ஆண்டுகளுக்கு முன், 2010-ம் ஆண்டில், எங்களின் கூட்டு ஒத்துழைப்பு "தனிச்சிறப்பு மற்றும் சலுகை பெற்ற உத்திசார் கூட்டு" என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக, அவர் தனது தலைமை மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் இந்தக் கூட்டு ஒத்துழைப்பை தொடர்ந்து பேணி வளர்த்துள்ளார். அவரது தலைமையின் கீழ், எங்கள் பரஸ்பர உறவுகள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் புதிய உயரங்களை எட்டியுள்ளன. இந்தியாவுடனான அவரது ஆழமான நட்புக்காகவும், அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காகவும், எனது நண்பர் அதிபர் புதின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
கடந்த 80 ஆண்டுகளாக, உலகம் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டிருக்கிறது. மனிதகுலம் எண்ணற்ற சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ளது. இருப்பினும், இவை அனைத்தின் மூலமும், இந்திய-ரஷ்ய நட்பு ஒரு வழிகாட்டும் நட்சத்திரத்தைப் போல நிலைத்து நிற்கிறது. பரஸ்பர மரியாதை மற்றும் ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நமது உறவு காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கிறது.
இன்று, இந்த அடித்தளத்தை மேலும் வலுப்படுத்த நமது ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் பற்றி விவாதித்தோம். நமது பொருளாதார ஒத்துழைப்பை புதிய உயரத்திற்கு உயர்த்துவது ஒரு பகிரப்பட்ட முன்னுரிமையாகும். இதைச் செயல்படுத்த, 2030 வரையிலான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். இது நமது வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிக பல்வகைப்படுத்தப்பட்ட, சமநிலையான மற்றும் நிலையானதாக மாற்றும்; மேலும் நமது ஒத்துழைப்புத் துறைகளுக்கு புதிய பரிமாணங்களையும் சேர்க்கும்.
இன்று, அதிபர் புதினும் நானும் இந்தியா-ரஷ்யா வர்த்தக மன்றத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். இந்தப் பொதுவான தளம் நமது வணிக உறவுகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன். இது ஏற்றுமதி, கூட்டு உற்பத்தி மற்றும் கூட்டு புத்தாக்கம் ஆகியவற்றுக்கும் புதிய வழிகளைத் திறக்கும்.
யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக முடிப்பதற்கான முயற்சிகளை இரு தரப்பினரும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். விவசாயம் மற்றும் உரங்கள் துறையில் நமது நெருக்கமான ஒத்துழைப்பு உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலனுக்கு இன்றியமையாதது. இந்த ஒத்துழைப்பைக் கொண்டு, இப்போது யூரியா உற்பத்தியிலும் இரு தரப்பினரும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
நண்பர்களே,
நமது இரு நாடுகளுக்கும் இடையேயான இணைப்பை மேம்படுத்துவது எங்களுக்கு ஒரு முக்கிய முன்னுரிமையாகும். சர்வதேச வடக்கு - தெற்கு போக்குவரத்து வழித்தடம், வடக்கு கடல் வழித்தடம், மற்றும் சென்னை-விளாடிவோஸ்டாக் வழித்தடங்களில் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடன் நாங்கள் முன்னோக்கிச் செல்வோம். துருவப் பகுதிகளில் செயல்பாடுகளுக்காக இந்தியாவின் கடற்பயணிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் இப்போது நாங்கள் ஒத்துழைக்கப் போவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஆர்க்டிக் பகுதியில் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
அதேபோல், கப்பல் கட்டும் துறையில் நமது வலுவான ஒத்துழைப்பு 'இநதியாவுக்கான உற்பத்தி இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் திறன் கொண்டது. வேலைகள், திறன்கள் மற்றும் பிராந்திய இணைப்பை மேம்படுத்தும் நமது 'வெற்றி-வெற்றி கூட்டாண்மைக்கு' இது மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஆற்றல் பாதுகாப்பு என்பது இந்திய-ரஷ்ய கூட்டாண்மையின் ஒரு வலுவான மற்றும் இன்றியமையாத தூணாக உள்ளது. அணுசக்தி துறையில் பல தசாப்தங்களாக நீடிக்கும் நமது ஒத்துழைப்பு, பகிரப்பட்ட சுத்தமான எரிசக்தி முன்னுரிமைகளை முன்னேற்றுவதில் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்த வெற்றி-வெற்றி ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.
முக்கிய கனிமங்களில் நமது ஒத்துழைப்பு, உலகெங்கிலும் பாதுகாப்பான மற்றும் பல்வகைப்பட்ட விநியோகச் சங்கிலிகளை உறுதி செய்வதற்கு மிக அவசியம். இது சுத்தமான எரிசக்தி, உயர் தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் புதிய காலத் தொழில்களில் நமது கூட்டுறவுக்கு வலுவான ஆதரவை வழங்கும்.
நண்பர்களே,
கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகள் இந்திய-ரஷ்ய உறவுகளில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளன. பல தசாப்தங்களாக, இரு நாடுகளின் மக்களும் ஒருவருக்கொருவர் ஆழமான பாசம், மரியாதை மற்றும் அரவணைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்த பல புதிய நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.
சமீபத்தில், ரஷ்யாவில் இரண்டு புதிய இந்தியத் தூதரகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இது நமது குடிமக்களுக்கு இடையேயான தொடர்பை மேலும் எளிதாக்கி, அவர்களின் பரஸ்பர உறவுகளை ஆழமாக்கும். இந்த ஆண்டு அக்டோபரில், 'கல்மைகியா'வில் நடைபெற்ற சர்வதேச பௌத்த மன்றத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் புத்த பகவானின் புனித நினைவுச்சின்னங்களின் ஆசிகளைப் பெற்றனர்.
ரஷ்ய குடிமக்களுக்காக விரைவில் 30 நாள் இலவச இ-சுற்றுலா விசா மற்றும் 30 நாள் குழு சுற்றுலா விசா ஆகியவற்றை நாங்கள் அறிமுகப்படுத்தவிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
மனிதவள நடமாட்டம் நமது மக்களை இணைப்பது மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் புதிய பலத்தையும் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும். இந்த ஒத்துழைப்பை ஊக்குவிக்க இன்று இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தொழிற்கல்வி, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி ஆகியவற்றில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். மேலும், நமது மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இடையேயான பரிமாற்றங்களையும் மேம்படுத்துவோம்.
நண்பர்களே,
இன்று நாங்கள் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தோம். உக்ரைனில் நிலவும் நிலைமையைப் பொறுத்தவரை, இந்தியா ஆரம்பத்திலிருந்தே அமைதியைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அமைதியான மற்றும் நீடித்த தீர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இந்தியா எப்போதும் பங்களிக்கத் தயாராக இருந்தது, எப்போதும் இருக்கும்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் நீண்ட காலமாக தோளோடு தோள் நின்றுள்ளன. பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலாக இருந்தாலும் சரி, அல்லது க்ரோகஸ் சிட்டி ஹாலில் நடந்த கோழைத்தனமான தாக்குதலாக இருந்தாலும் சரி, இதுபோன்ற அனைத்து சம்பவங்களின் வேரும் ஒன்றே. பயங்கரவாதம் என்பது மனிதநேய விழுமியங்கள் மீதான நேரடித் தாக்குதல் என்றும், அதற்கு எதிரான உலகளாவிய ஒற்றுமையே நமது மிகப் பெரிய பலம் என்றும் இந்தியா உறுதியாக நம்புகிறது.
இந்தியா மற்றும் ரஷ்யா ஐ.நா., ஜி20, பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, மற்றும் பிற தளங்களில் நெருங்கிய ஒத்துழைப்பைப் பேணி வருகின்றன. அதே நெருங்கிய ஒருங்கிணைப்புடன் முன்னோக்கிச் சென்று, இந்த அனைத்து மன்றங்களிலும் நமது உரையாடலையும் ஒத்துழைப்பையும் தொடர்வோம்.
மேதகு புதின் அவர்களே,
வரும் காலங்களில், நமது நட்பு உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நமக்கு அதிகாரம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும் இந்த நம்பிக்கை நமது பகிரப்பட்ட எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும்.
இந்தியாவுக்கு நீங்கள் வருகை தந்தமைக்காக, உங்களுக்கும் உங்களது முழுப் பிரதிநிதிக் குழுவுக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்பசிபா! (Spasiba - ரஷ்ய மொழியில் 'நன்றி')
பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் உத்தேச
மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் வழங்கப்பட்டது.
***
(Release ID: 2199373)
SS/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2250114)
வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam