பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் நடைபெற்ற வீர பாலர் பாலர் தின நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 26 DEC 2025 4:42PM by PIB Chennai

மத்திய அமைச்சரவையின் மதிப்பிற்குரிய சக அமைச்சர்களான—அன்னபூர்ணா தேவி, சாவித்திரி தாக்கூர், ரவ்நீத் சிங், ஹர்ஷ் மல்ஹோத்ரா அவர்களே, டெல்லி அரசின் மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே, இதர மரியாதைக்குரிய முக்கியப் பிரமுகர்களே, நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வருகை தந்துள்ள விருந்தினர்களே, மற்றும் எனது அன்பிற்குரிய குழந்தைகளே!

இன்று நாடு வீர பாலர் தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. சற்று முன்பாகத்தான், 'வந்தே மாதரம்' பாடலின் மிக அழகான கலைநிகழ்ச்சியை நாம் கண்டோம்—உங்கள் கடின உழைப்பு அதில் தெளிவாகத் தெரிந்தது.

நண்பர்களே,

இந்தியாவின் பெருமையாக விளங்கும் அந்த வீரமிக்க சாஹிப்ஸாதாக்களின் தியாகத்தை (10வது சீக்கிய குருவான ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜியின் மகன்கள்)  இன்று நாம் நினைவு கூர்கிறோம். இந்தியாவின் அடக்க முடியாத துணிச்சல், வீரம் மற்றும் தீரத்தின் உச்சமாக அவர்கள் விளங்குகிறார்கள். இந்த சாஹிப்ஸாதாக்கள் வயது மற்றும் சூழ்நிலைகளின் எல்லைகளை உடைத்து, கொடூரமான முகலாயப் பேரரசுக்கு எதிராக ஒரு பாறையைப் போல உறுதியாக நின்று, மதவெறி மற்றும் பயங்கரவாதத்தின் இருப்பையே உலுக்கினார்கள். இத்தகைய புகழ்பெற்ற கடந்த காலத்தைக் கொண்ட ஒரு தேசம், அதன் இளைஞர்கள் இத்தகைய உத்வேகத்தைப் பெறும்போது, எதையும் சாதிக்கும் திறன் கொண்டதாக விளங்குகிறது.

நண்பர்களே,

டிசம்பர் 26-ஆம் தேதியான இந்த நாள் வரும்போதெல்லாம், சாஹிப்ஸாதாக்களின் வீரத்தால் ஈர்க்கப்பட்டு, நமது அரசாங்கம் வீர பாலர் தினத்தை கொண்டாடத் தொடங்கியதில் நான் ஆழ்ந்த திருப்தி அடைகிறேன். கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த புதிய பாரம்பரியம் சாஹிப்ஸாதாக்களின் உத்வேகத்தை இளைய தலைமுறைக்குக் கொண்டு சென்றுள்ளது. வீர பாலர் தினம் துணிச்சலான மற்றும் திறமையான இளைஞர்களை வளர்த்தெடுப்பதற்கான ஒரு தளத்தையும் உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், தேசத்திற்காகப் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்யும் குழந்தைகளுக்கு பிரதமரின் தேசிய பாலர் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டும், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 20 குழந்தைகள் இந்த விருதைப் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் நம்மிடையே உள்ளனர், அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சிலர் அசாதாரணமான வீரத்தை வெளிப்படுத்தியுள்ளனர், சிலர் சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பாராட்டுக்குரிய பணிகளைச் செய்துள்ளனர். சிலர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமைகளைப் படைத்துள்ளனர், அதே நேரத்தில் பல இளம் நண்பர்கள் விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரத்தில் பங்களித்து வருகின்றனர். இந்த விருது வென்றவர்களிடம் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்—இந்த கவுரவம் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் பெற்றோர்களுக்கும், உங்கள் ஆசிரியர்களுக்கும், வழிகாட்டிகளுக்கும் உரியது. இது அவர்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமும் கூட. விருது வென்ற அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், ஒளிமயமான எதிர்காலத்திற்கான நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

வீர பாலர் தினம் உணர்ச்சி மற்றும் மரியாதையால் நிரம்பியது. சாஹிப்ஸாதா அஜித் சிங் ஜி, சாஹிப்ஸாதா ஜுஜார் சிங் ஜி, சாஹிப்ஸாதா ஜோராவர் சிங் ஜி மற்றும் சாஹிப்ஸாதா ஃபதே சிங் ஜி—மிகவும் பிஞ்சு வயதிலேயே அவர்கள் அந்த காலத்தின் மிக வலிமையான சக்தியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்தப் போர் இந்தியாவின் அடிப்படை விழுமியங்களுக்கும் மதவெறிக்கும் இடையிலான ஒரு போராக இருந்தது; அது உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான போராக இருந்தது. ஒரு பக்கம் பத்தாவது குருவான ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜி நின்றார், மறுபுறம் ஔரங்கசீப்பின் கொடூரமான ஆட்சி இருந்தது. அந்த நேரத்தில் நமது சாஹிப்ஸாதாக்கள் மிகவும் சிறியவர்களாக இருந்தனர். ஆனால் ஔரங்கசீப், தனது கொடூரமான குணத்தால், அவர்களின் வயதைப் பற்றி கவலைப்படவில்லை. இந்தியர்களை மதம் மாறும்படி அச்சுறுத்த வேண்டுமானால், முதலில் அவர்களின் மன உறுதியை உடைக்க வேண்டும் என்று அவன் அறிந்திருந்தான். அதனால்தான் அவன் சாஹிப்ஸாதாக்களை குறிவைத்தான்.

ஆனால் நண்பர்களே,

நமது குரு ஒரு சாதாரண மனிதர் அல்ல—அவர் தவம் மற்றும் தியாகத்தின் உருவம் என்பதை ஔரங்கசீப்பும் அவனது தளபதிகளும் மறந்துவிட்டார்கள். வீரமிக்க சாஹிப்ஸாதாக்கள் இந்த பாரம்பரியத்தை அவரிடமிருந்து பெற்றார்கள். அதனால்தான், ஒட்டுமொத்த முகலாயப் பேரரசும் அவர்களைத் துரத்திய போதிலும், நான்கு சாஹிப்ஸாதாக்களில் ஒருவர் கூட அஞ்சவோ அல்லது தடுமாறவோ இல்லை. சாஹிப்ஸாதா அஜித் சிங் ஜியின் வார்த்தைகள் இப்போதும் அவரது துணிச்சலின் கதையை எதிரொலிக்கின்றன: “என் பெயர் அஜித், நான் ஒருபோதும் வெல்லப்பட மாட்டேன். நான் வெல்லப்பட்டாலும் கூட, ஒருபோதும் அடிபணிய மாட்டேன்!”

நண்பர்களே,

சற்று முந்தைய சில நாட்களுக்கு முன்புதான், ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் 350-வது நினைவு தினமான அவரது உயரிய தியாகத்தை நாம் நினைவு கூர்ந்தோம். அன்றைய தினம் குருக்ஷேத்திரத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. குரு தேக் பகதூர் ஜியின் தியாகத்திலிருந்து உத்வேகம் பெற்ற சாஹிப்ஸாதாக்கள், முகலாயர்களின் அட்டூழியங்களைக் கண்டு பயப்படுவார்கள் என்று நினைத்ததே ஒரு பெரிய தவறு.

நண்பர்களே,

மாதா குஜ்ரி, ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜி மற்றும் நான்கு சாஹிப்ஸாதாக்களின் வீரம் மற்றும் விழுமியங்கள் இன்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் பலத்தை அளிக்கின்றன; அவர்கள் இன்றும் நமக்கு உத்வேகமாகத் திகழ்கிறார்கள். சாஹிப்ஸாதாக்களின் தியாகக் காவியம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் நாவிலும் ஒலித்திருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பிறகும், அடிமை மனோபாவமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. இந்த மனோபாவத்தின் விதை 1835-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசியல்வாதியான மெக்காலே என்பவரால் விதைக்கப்பட்டது, சுதந்திரத்திற்குப் பிறகும் கூட, அந்த மனோபாவத்திலிருந்து நாடு தன்னை விடுவித்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதனால்தான், சுதந்திரம் கிடைத்து பல தசாப்தங்களாக, இத்தகைய உண்மைகளை மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் நண்பர்களே,

இப்போது இந்தியா இந்த அடிமை மனோபாவத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள உறுதிபூண்டுள்ளது. நமது தியாகங்கள் மற்றும் வீரத்தின் நினைவுகள் இனி ஒருபோதும் மறையாது. நமது தேசத்தின் வீரர்களும் வீராங்கனைகளும் இனி ஒருபோதும் ஓரங்கட்டப்பட மாட்டார்கள். அதனால்தான் நாம் முழு பக்தியுடன் வீர பாலர் தினத்தை கொண்டாடி வருகிறோம். நாம் இத்துடன் நின்றுவிடவில்லை. மெக்காலே தீட்டிய சதித்திட்டம் 2035-ல் இன்னும் சரியாக 10 ஆண்டுகளில்—200 ஆண்டுகளை நிறைவு செய்யும். இந்த 10 ஆண்டுகளில், தேசம் அடிமை மனோபாவத்திலிருந்து முற்றிலும் விடுபடுவதை நாம் உறுதி செய்வோம். இது 140 கோடி இந்தியர்களின் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில், தேசம் இந்த மனோபாவத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும்போதுதான், அது தனது பூர்வீக அடையாளத்தைப் பற்றிப் பெருமிதம் கொள்ளும் மற்றும் சுயசார்புப் பாதையில் மேலும் முன்னேறும்.

நண்பர்களே,

அடிமை மனோபாவத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதற்கான இந்த இயக்கத்தின் ஒரு சிறு காட்சி சமீபத்தில் நமது நாடாளுமன்றத்தில் காணப்பட்டது. குளிர்காலக் கூட்டத்தொடரில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர்த்த பிற இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 160 உரைகளை நிகழ்த்தினர். சுமார் 50 உரைகள் தமிழிலும், 40-க்கும் மேற்பட்டவை மராத்தியிலும், சுமார் 25 உரைகள் வங்காள மொழியிலும் இருந்தன. இத்தகைய காட்சி உலகின் எந்தவொரு நாடாளுமன்றத்திலும் அரிதானது. இது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயமாகும். இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையை நசுக்க மெக்காலே முயன்றார், ஆனால் இப்போது, நமது தேசம் அடிமை மனோபாவத்திலிருந்து விடுபடும்போது, மொழிப் பன்முகத்தன்மை நமது பலமாக மாறி வருகிறது.

நண்பர்களே,

இங்கே நான் யுவ பாரத் சங்கதன் அமைப்பைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களைப் பார்க்கிறேன். ஒரு வகையில், நீங்கள் 'ஜென் இசட்' மற்றும் 'ஜென் ஆல்பா' தலைமுறையினர். உங்கள் தலைமுறைதான் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும். 'ஜென் ஜி' தலைமுறையினரின் திறன் மற்றும் தன்னம்பிக்கையை நான் காண்கிறேன் மற்றும் புரிந்து கொள்கிறேன், அதனால்தான் நான் உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். நமது பாரம்பரியம் கூறுகிறது: பாலாதபி க்ரஹீதவ்யம் யுக்தமுக்தம் மனிஷிபி:, அதாவது, ஒரு சிறிய குழந்தை புத்திசாலித்தனமாகப் பேசினாலும், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வயதால் யாரும் சிறியவர் அல்லது பெரியவர் இல்லை; ஒருவர் தனது செயல்கள் மற்றும் சாதனைகள் மூலமே சிறந்தவர் ஆகிறார். சிறிய வயதிலேயே உங்களால் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் விஷயங்களைச் சாதிக்க முடியும். நீங்கள் ஏற்கனவே இதை நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள். ஆனால் இந்தச் சாதனைகளை ஒரு தொடக்கமாக மட்டுமே பார்க்க வேண்டும். நீங்கள் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும். உங்கள் கனவுகளை வானத்தை எட்டும் அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும். தேசம் உங்கள் திறமைக்கு உறுதுணையாக நிற்கும் ஒரு தலைமுறையில் நீங்கள் பிறந்திருப்பது உங்கள் பாக்கியம்.

முன்பு, இளைஞர்கள் கனவு காணக்கூட பயந்தார்கள், ஏனென்றால் பழைய அமைப்புகள் நல்ல விஷயங்கள் எதுவும் சாத்தியமில்லை என்ற சூழலை உருவாக்கியிருந்தன. எங்கும் விரக்தி நிலவியது, மக்கள் 'கடினமாக உழைத்து என்ன பயன்?' என்று கூட உணரத் தொடங்கினர். ஆனால் இன்று, தேசம் திறமைகளைத் தேடிப் பிடிக்கிறது, அதற்கு ஒரு தளத்தை வழங்குகிறது, மேலும் உங்கள் கனவுகளுக்குப் பின்னால் 140 கோடி குடிமக்களின் பலத்தை நிறுத்துகிறது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வெற்றியால், உங்களிடம் இணையத்தின் வலிமை உள்ளது, கற்றலுக்கான ஆதாரங்கள் உள்ளன. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தொழில் உலகில் நுழைய விரும்புபவர்களுக்கு ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்கள் உள்ளன. விளையாட்டில் முன்னேறுபவர்களுக்கு கேலோ இந்தியா போன்ற திட்டங்கள் உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்புதான், நான் சன்சாத் கேல் மகோத்சவ் (நாடாளுமன்ற விளையாட்டுத் திருவிழா) நிகழ்ச்சியிலும் பங்கேற்றேன். நீங்கள் முன்னேற உதவ எண்ணற்ற தளங்கள் உள்ளன. நீங்கள் உங்கள் இலக்கில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். இதற்காக, குறுகிய கால புகழின் மினுமினுப்பில் நீங்கள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது அவசியம். உங்கள் சிந்தனை தெளிவாக இருக்கும்போது, உங்கள் கொள்கைகள் தெளிவாக இருக்கும்போது மட்டுமே இது நடக்கும். அதனால்தான் உங்கள் லட்சியங்களிலிருந்து, நமது தேசத்தின் சிறந்த ஆளுமைகளிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வெற்றியை உங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக நீங்கள் பார்க்கக் கூடாது. உங்கள் வெற்றி தேசத்தின் வெற்றியாக மாற வேண்டும் என்பதே உங்கள் இலக்காக இருக்க வேண்டும்.

நண்பர்களே,

இன்று, இளைஞர்களின் மேம்பாட்டை மையமாகக் கொண்டு புதிய கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. தேசத்தைக் கட்டமைப்பதில் இளைஞர்கள் மையப்புள்ளியாக வைக்கப்பட்டுள்ளார்கள். மேரா யுவ பாரத் (எனது இளைய இந்தியா) போன்ற தளங்கள் மூலம் இளைஞர்களை இணைப்பதற்கும், அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கும் மற்றும் அவர்களுக்குள் தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விண்வெளிப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக இருக்கட்டும், விளையாட்டை ஊக்குவிப்பதாக இருக்கட்டும், நிதித் தொழில்நுட்பம் (ஃபின்டெக்) மற்றும் உற்பத்தித் துறைகளை விரிவுபடுத்துவதாக இருக்கட்டும் அல்லது திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிப் பணிகளுக்கான (இன்டர்ன்ஷிப்) வாய்ப்புகளை உருவாக்குவதாக இருக்கட்டும்—இத்தகைய ஒவ்வொரு முயற்சியின் மையத்திலும் எனது இளைய தோழர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

நண்பர்களே,

இந்தியா இன்று முன்னோடியில்லாத சூழ்நிலைகளை எதிர்கொள்கிறது. உலகிலேயே மிக இளமையான நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. வரவிருக்கும் இருபத்தைந்து ஆண்டுகள் நமது நாட்டின் திசையைத் தீர்மானிக்கும். ஒருவேளை சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக, இந்தியாவின் திறன்கள், இந்தியாவின் விருப்பங்கள் மற்றும் இந்தியாவின் மீதான உலகின் எதிர்பார்ப்புகள் என அனைத்தும் ஒன்றாக இணைகின்றன. இன்றைய இளைஞர்கள், முன்னெப்போதையும் விட அதிக வாய்ப்புகள் உள்ள ஒரு காலத்தில் வளர்ந்து வருகிறார்கள். இந்திய இளைஞர்களின் திறமை, தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவப் பண்புகளுக்குச் சிறந்த வழிகளை வழங்க நாங்கள் உறுதியாக உள்ளோம்.

எனது இளைய நண்பர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியாவின் வலுவான அடித்தளத்தை அமைப்பதற்காக, நமது கல்விக் கொள்கையிலும் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய தேசியக் கல்விக் கொள்கை, 21-ம் நூற்றாண்டிற்கான புதிய கற்றல் முறைகளில் கவனம் செலுத்துகிறது. இன்று, செயல்முறை வழிக் கற்றலுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது—மனப்பாடம் செய்வதற்குப் பதிலாகச் சிந்திக்கும் பழக்கத்தை வளர்ப்பது, குழந்தைகளை கேள்வி கேட்கத் தூண்டுவது மற்றும் தீர்வுகளைத் தேட வைப்பது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. முதன்முறையாக, இந்தத் திசையில் அர்த்தமுள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பன்முகத் துறை ஆய்வுகள், திறன் சார்ந்த கற்றல், விளையாட்டை ஊக்குவித்தல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவை மாணவர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன. நாடு முழுவதும், லட்சக்கணக்கான குழந்தைகள் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் மூலம் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, நிலைத்தன்மை மற்றும் வடிவமைப்புச் சிந்தனை போன்றவை அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த முயற்சிகளுடன் இணைந்து, தேசியக் கல்விக் கொள்கையானது தாய்மொழியில் பயிலும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. இது குழந்தைகளின் கற்றலை எளிதாக்குவதுடன், பாடங்களை அவர்கள் சிறப்பாகப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

நண்பர்களே,

வீரமிக்க சாஹிப்ஸாதாக்கள் பாதை எவ்வளவு கடினமானது என்று பார்க்கவில்லை; அந்தப் பாதை சரியானது தானா என்று மட்டுமே பார்த்தார்கள். இன்று, அதே போன்ற மன உறுதி தேவைப்படுகிறது. இந்திய இளைஞர்கள் பெரிய கனவுகளைக் காண வேண்டும், கடினமாக உழைக்க வேண்டும் மற்றும் ஒருபோதும் தங்களின் தன்னம்பிக்கையைத் தளரவிடக் கூடாது என்று நான் எதிர்பார்க்கிறேன். இந்தியாவின் எதிர்காலம் அதன் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தின் மூலமே பிரகாசிக்கும். அவர்களின் துணிச்சல், அவர்களின் திறமை மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவை தேசத்தின் முன்னேற்றத்தை வழிநடத்தும். இந்த நம்பிக்கையுடன், இந்தப் பொறுப்புடன் மற்றும் இந்தத் தொடர்ச்சியான வேகத்துடன், இந்தியா தனது எதிர்காலத்தை நோக்கித் தொடர்ந்து முன்னேறும். மீண்டும் ஒருமுறை, சாஹிப்ஸாதாக்களுக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன். விருது வென்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

----

(Release ID 2208860)

AD/VK/KR

 

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2249633) வருகையாளர் எண்ணிக்கை : 14