தேர்தல் ஆணையம்
2026 சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகளும் தேவையான உதவிகளும் உறுதி செய்யப்படும்
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAR 2026 11:54AM by PIB Chennai
தேர்தல் ஆணையம், அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்க சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல், 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் அட்டவணையை 2026 மார்ச் 15 அன்று வெளியிட்டுள்ளது.
இந்த தேர்தல்களுக்காக 2,18,807 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றிலும், உறுதிசெய்யப்பட்ட அடிப்படை வசதிகளும், வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
குறைந்தபட்ட வசதிகளில் குடிநீர், நிழலுடன் கூடிய காத்திருப்புப் பகுதி, தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை, போதுமான விளக்கு வசதி, மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்குச் சரிவுடன் கூடிய சாய்வுப்பாதை, தரமான வாக்குப்பதிவு அறை, முறையான வழிகாட்டிப் பலகைகள் ஆகியவை அடங்கும். வாக்காளர்கள் தங்கள் முறைக்காகக் காத்திருக்கும்போது அமர்வதற்காக, வரிசையில் சீரான இடைவெளியில் இருக்கைகளை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் .
வாக்காளர் விழிப்புணர்வை வலுப்படுத்தும் வகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நான்கு சீரான, தரப்படுத்தப்பட்ட வாக்காளர் குறித்த சுவரொட்டிகள் முக்கியமாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும். அவற்றில் வாக்குச்சாவடி விவரங்கள், வேட்பாளர் பட்டியல், செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களின் பட்டியல், வாக்களிக்கும் செயல்முறை ஆகியவை அடங்கியிருக்கும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்படும். வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி எண், வரிசை எண் ஆகியவற்றை அந்தந்த வாக்குச்சாவடியின் வாக்காளர் பட்டியலில் கண்டறிய உதவுவதற்காக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் /அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அங்கு இருக்கும். வாக்காளர் உதவி மையங்களில் தெளிவான அடையாளப் பலகைகள் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லும்போது, வழிகாட்டி சுவரொட்டிகள் எளிதில் கண்ணுக்குத் தெரியும்படி அமைக்கப்பட்டு இருக்கும்.
வாக்காளர்களின் வசதிக்காக தேர்தல் ஆணையம் எடுத்துள்ள பல முயற்சிகளில் ஒன்றாக, வாக்குச்சாவடி நுழைவாயிலுக்கு வெளியே வாக்காளர்களுக்கான கைப்பேசி பாதுகாப்பு வசதி வழங்கப்படும். வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்குள் நுழைவதற்கு முன்பு தங்களது கைபேசியை (அணைத்த நிலையில்), அதற்கென நியமிக்கப்பட்ட தன்னார்வலரிடம் ஒப்படைத்து, வாக்களித்த பிறகு அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
குறைந்தபட்ச வசதிகளை வழங்குவது கட்டாயமானது என்றும், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அவை கண்டிப்பாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பது கண்காணிக்கப்படும் என்றும் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது. அனைத்து வாக்காளர்களுக்கும் தடையற்ற, சிறந்த வாக்குப்பதிவு அனுபவத்தை உறுதி செய்வதற்காக, அனைத்து களப் பணியாளர்களும் வாக்குப்பதிவுத் தேதிகளுக்கு முன்பே தேவையான பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2243519®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2243543)
வருகையாளர் எண்ணிக்கை : 52