பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆறாவது ராம்நாத் கோயங்கா உரை நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 NOV 2025 9:54PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஆறாவது ராம்நாத் கோயங்கா உரை நிகழ்ச்சியில் உரையாற்றினார்.  இந்தியாவில் ஜனநாயகம், பத்திரிகை, சுதந்திரம் ஆகியவற்றின் சக்தியை உயர்த்திய ஒரு சிறந்த ஆளுமையை கௌரவிக்க நாம் கூடியுள்ளதாக என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஒரு தொலைநோக்கு பார்வையாளராக, ஒரு நிறுவனத்தை உருவாக்குபவராக, ஒரு தேசியவாதியாக, ஒரு ஊடகத் தலைவராக ராம்நாத் கோயங்கா, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தை நிறுவினார் என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். அவரது தலைமையின் கீழ், இந்தக் குழுமம் இந்தியாவின் ஜனநாயக விழுமியங்கள், தேசிய நலன்களுக்கான குரலாக மாறியது என்று பிரதமர் குறிப்பிட்டார். 21-ம் நூற்றாண்டின் இந்த சகாப்தத்தில், இந்தியா வளர்ச்சியடைய வேண்டும் என்ற உறுதியுடன் முன்னேறிச் செல்லும்போது, ராம்நாத் கோயங்காவின் அர்ப்பணிப்பு, உத்வேகத்தின் சிறந்த ஆதாரமாக செயல்படுகிறது என்று அவர் கூறினார். இந்த சொற்பொழிவை நிகழ்த்த அழைத்ததற்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் உலகளாவிய சவால்களால் நிறைந்திருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், 2020-ம் ஆண்டில், கொவிட்-19 தொற்றுநோய் உலக அளவில் பொருளாதாரங்களை சீர்குலைத்து, நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியது என்று கூறினார். இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்தியாவின் பொருளாதாரம் அதிக வளர்ச்சி விகிதத்தை அடைந்து மீள்தன்மையைக் காட்டியது என்ன பிரதமர் தெரிவித்தார்.  இந்த ஆண்டும், உலகளாவிய உறுதியற்ற தன்மைக்கு மத்தியில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஏழு சதவீதத்தை ஒட்டி உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் வளர்ச்சியை உலகம் நம்பிக்கையுடன் பார்ப்பதாக பிரதமர் கூறினார்.

தேசத்தின் வளர்ச்சிக்கு, அரசு திட்டப் பலன்கள் அனைவரையும் சென்றடைவது அவசியம் என்பதை வலியுறுத்திய பிரதமர், அரசின் திட்டங்கள் ஒடுக்கப்பட்டவர்கள், நலிவடைந்தவர்களை முழுமையாகச் சென்றடையும் போது, உண்மையான சமூக நீதி உறுதி செய்யப்படுகிறது என்றார். நாடு சமூக நீதியை நடைமுறையில் கொண்டு வந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். திறந்தவெளியில் கழிப்பிடங்கள் இல்லாமல் 12 கோடி கழிப்பறைகளைக் கட்டியதன் மூலம்  ஏழைகளுக்கும் பின்தங்கிய மக்களுக்கும் உண்மையான சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். 4 கோடி வீடுகள் கட்டப்பட்டு ஏழைகளின் வீட்டுக் கனவுக்கு  அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறை, கற்றல், திறன் மேம்பாடு ஆகிய இரண்டிற்கும் சமமான முக்கியத்துவம் அளித்ததாக திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஆனால் மெக்காலே அதை அகற்ற முயன்று அதில் வெற்றி பெற்றார் என்று பிரதமர் கூறினார். மெக்காலே இந்தியாவின் தன்னம்பிக்கையை உடைத்து, தாழ்வு மனப்பான்மையை விதைத்தார் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

எந்த நாடும் தனது தாய்மொழியில் ஒருபோதும் சமரசம் செய்யவில்லை என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். அதனால்தான் புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ளூர் மொழிகளில் கல்விக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று அவர் கூறினார். அரசு ஆங்கில மொழியை எதிர்க்கவில்லை எனவும் ஆனால் இந்திய மொழிகளை உறுதியாக ஆதரிக்கிறது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மெக்காலே விதைத்த அடிமைத்தன மனநிலையிலிருந்து அடுத்த பத்து ஆண்டுகளிக்குள் தங்களை விடுவித்துக் கொள்ள மக்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்.

ராம்நாத் கோயங்காவின் கொள்கைகளைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுவிற்கு அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

***

(Release ID: 2191047)

TV/PLM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2241275) வருகையாளர் எண்ணிக்கை : 31