நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி அடிப்படையிலான உணவு தானிய மானிய விநியோகத் திட்டத்தை மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி புதுச்சேரியில் தொடங்கி வைத்தார்

நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் பொதுவிநியோக திட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன – மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி

இடுகை இடப்பட்ட நாள்: 26 FEB 2026 6:28PM by PIB Chennai

 நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் பொதுவிநியோக திட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் (26.02.2026) இன்று பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி (CBDC - சிபிடிசி) அடிப்படையிலான உணவு தானிய மானிய விநியோக முன்னோடித் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒவ்வொரு தானியமும், ஒவ்வொரு ரூபாயும், ஒவ்வொரு உரிமையும் சரியான பயனாளியைச் சென்றடைய வேண்டும் என்பதே பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை என்று கூறினார். இந்த சீர்திருத்தம் முற்றிலும் வெளிப்படையான, கசிவு இல்லாத, தொழில்நுட்பம் சார்ந்த விநியோக முறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது என்று அவர் தெரிவித்தார்.

பிரதமரின் ஏழைகள் நல உணவுத்திட்டம் உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் எனவும், இது கோடிக்கணக்கான மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 25 கோடி மக்கள் பல பரிமாண வறுமையிலிருந்து வெளியேறியுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கிட்டத்தட்ட அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இப்போது மின்னணு விற்பனைப் புள்ளி இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் இது விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது எனவும் அவர் கூறினார்.

 

99 சதவிகித குடும்ப அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், மின்னணு விற்பனைப்புள்ளி இயந்திரங்கள் இப்போது எடை இயந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். கைரேகைகள் அல்லது கருவிழி ஸ்கேன்களைப் பயன்படுத்தி பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன், விநியோகிக்கப்படும் உணவு தானியங்களின் அளவு தானாகவே பதிவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்படுவதாகவும், இது செயல்முறையை வெளிப்படையானதாகவும் பொறுப்புணர்வுடனும் மாற்றியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சி (சிபிடிசி) அடிப்படையிலான உணவு தானிய மானிய விநியோகம் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தி, கசிவுகளை நீக்கி, மானியங்கள் தகுதியான பயனாளிகளை நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்யும் என்று அமைச்சர் கூறினார். இந்த முன்னோடித் திட்டம் முதலில் அகமதாபாத்தில் தொடங்கப்பட்டதாகவும், தற்போது புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இவற்றின் தாக்கத்தை ஆய்வு செய்த பிறகு, நாடு முழுவதும் இதை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று திரு பிரல்ஹாத் ஜோஷி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன், முதலமைச்சர் திரு என். ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ், உணவு தானியத்துக்கான மானியம் அடையாளம் காணப்பட்ட பயனாளிகளுக்கு, திட்டமிட்ட டோக்கன்கள் வடிவில் நேரடியாக அவர்களின் சிபிடிசி வாலெட்களில் (பணப்பை) வரவு வைக்கப்படும். இந்த டோக்கன்களை அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள், நியாய விலைக் கடைகளிலிருந்து உரிய உணவு தானியங்களை வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும், இது மானியங்களின் முறையான பயன்பாட்டையும் அதிக வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்யும்.

இந்திய ரிசர்வ் வங்கி, பொது நிதி மேலாண்மை அமைப்பு (PFMS- பிஎஃப்எம்எஸ்), புதுச்சேரி அரசு, கனரா வங்கி ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து புதுச்சேரியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

***

AD/PLM/RK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2233189) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Kannada