உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, அசாமின் காம்ரூப்பில் 10வது அசாம் காவல்துறை பட்டாலியன் தலைமையகத்திற்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார்
நாடு நக்சலிசத்திலிருந்து விடுபட்டு வருகிறது - அதேபோல் அசாமும் முழு தேசமும் ஊடுருவல்களிலிருந்து விடுபடும் : திரு அமித் ஷா
இடுகை இடப்பட்ட நாள்:
21 FEB 2026 5:49PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (21.02.2026) அசாமின் காம்ரூப்பில் 10- வது அசாம் காவல்துறை பட்டாலியன் தலைமையகத்திற்கு அடிக்கல் நாட்டினார் . இந்த நிகழ்ச்சியில், அசாம் ஆளுநர் திரு லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய உள்துறை செயலாளர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையில், பிரதமர் திரு நரேந்திர மோடி அசாமின் அனைத்துத் துறைகளையும் மேம்படுத்தியுள்ளார் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில், கிழக்கு, வடகிழக்கு இந்தியாவின் தொழில்துறை மையமாக அசாம் மாறும் என்றும் கூறினார். எதிர்க்கட்சிகள் ஆட்சியின் போது, ஊடுருவல்காரர்கள் அசாமை ஆக்கிரமித்தனர் என்றும், தற்போதைய அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா ஊடுருவலை தடுத்து ஆக்கிரமிப்பு நிலங்களை விடுவித்துள்ளதாகவும் திரு அமித் ஷா கூறினார்.
துப்ரி, பார்பேட்டா, மோரிகான், தர்ராங், போங்கைகான், நாகோன் போன்ற அசாமின் பல பகுதிகள் ஊடுருவல்காரர்களின் ஆதிக்கத்திற்கு ஆளாகியதற்கு எதிர்க்கட்சியே நேரடிப் பொறுப்பாகும் என்று அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சி செய்த தவறுகளின் விளைவுகளிலிருந்து அசாமினை விடுவிக்க இந்த அரசு பாடுபடுகிறது என்று திரு அமித் ஷா கூறினார்.
நாட்டின் நிலத்தை ஊடுருவல்காரர்களிடமிருந்து விடுவிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதியான நிலையைக் கொண்டுள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். ஊடுருவல்காரர்களை அகற்ற மாநில அரசின் ஆதரவு அவசியம் என்றும், எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் அது ஒருபோதும் சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஊடுருவல்காரர்கள் எதிர்க்கட்சியின் வாக்கு வங்கியாக மாறிவிட்டதாகவும் திரு அமித் ஷா குற்றம் சாட்டினார். தங்களது அரசின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஊடுருவல்காரர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து மட்டுமல்லாமல், நாட்டிலிருந்தும் வெளியேற்றப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
ஊடுருவல்காரர்களை அடையாளம் காண உதவும் என்பதால் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி வருவதாக திரு அமித் ஷா கூறினார். நாடு நிச்சயமாக ஊடுருவல்காரர்களிடமிருந்து விடுவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த அரசின் கீழ், நாடு நக்சலிசத்திலிருந்து விடுபட்டு வருவதுபோல், அசாமும் முழு தேசமும் ஊடுருவல்காரர்களிடமிருந்து விடுபடும் என்றும் அவர் கூறினார்.
கிளர்ச்சி, வறுமை, வேலையின்மை இல்லாத, வளர்ச்சியடைந்த அசாமை உருவாக்க, இந்த அரசு பாடுபட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231259®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2231349)
வருகையாளர் எண்ணிக்கை : 9