உள்துறை அமைச்சகம்
குஜராத் தலைநகர் காந்திநகரில் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை அடிப்படையாகக் கொண்ட பொது விநியோக முறையை மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 FEB 2026 3:51PM by PIB Chennai
குஜராத்தின் காந்திநகரில் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை அடிப்படையாகக் கொண்ட வெளிப்படையான, நவீன மற்றும் எளிமையான பொது விநியோக முறையை மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடியால் ஊக்குவிக்கப்பட்டு, டிஜிட்டல் இந்தியா தற்போது உணவு மற்றும் விநியோக முறைக்கு விரிவடைந்துள்ளது என்றார். நாட்டின் வளங்கள் மீதான முதலாவது உரிமையை ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடி சமூகங்களுக்குப் பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என்று அவர் கூறினார். முன்பெல்லாம், இந்தியாவில் 60 கோடி மக்களின் முழு குடும்பங்களுக்கும் ஒரு வங்கிக் கணக்கு கூட இல்லை என்றும், ஆனால் பிரதமர் மோடி தலைமையில், உலகின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதி இப்போது இந்தியாவில் நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார். அதே டிஜிட்டல் இந்தியா இப்போது நாட்டின் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு தானியங்களை வழங்கும் களத்தில் நுழைகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நடைமுறை ஏழைகளுக்கு ரேஷன் வழங்குவதில் ஊழலை முற்றிலுமாக நீக்கும் என்று திரு ஷா கூறினார்.
35 நொடிகளில் 25 கிலோ கிராம் உணவு தானியங்களை விநியோகிக்கும் 'அன்னபூர்ணா' எந்திரமும் இன்று தொடங்கிவைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அடுத்த 3-4 ஆண்டுகளில் நாடு முழுவதும் இந்த முறை செயல்படுத்தப்படும் என்றும் இதனால் உணவு தானிய விநியோக முறை முற்றிலும் வெளிப்படையானதாக இருக்கும் என்றும், இது செயல்படுத்தப்பட்ட பின், நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழையும் 5 கிலோ கிராம் இலவச உணவு தானியங்களைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார். 'அன்னபூர்ணா' எந்திரம் சிறந்த தரம், துல்லியமான அளவு, வெளிப்படையான விநியோகத்தை உறுதி செய்ய உதவும் என்று அவர் மேலும் கூறினார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, துவாரகா முதல் காமாக்யா வரை - நமது பரந்து விரிந்த நாடு முழுவதும் படிப்படியாக இந்த முறை செயல்படுத்தப்பட வேண்டும் என்று திரு ஷா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2228387®=3&lang=1
***
TV/SMB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2228481)
வருகையாளர் எண்ணிக்கை : 9