பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தக் கட்டமைப்பை வரவேற்றுள்ள பிரதமர், இது 'மேக் இன் இந்தியா'வுக்கும் வேலைவாய்ப்புக்கும் ஊக்கமளிக்கும் என்று கூறியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 FEB 2026 8:59AM by PIB Chennai

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தக் கட்டமைப்பை இன்று வரவேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இது இரு நாடுகளுக்கும் ஒரு சிறந்த செய்தி என்று கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் டொனால்ட் டிரம்பின் தனிப்பட்ட உறுதிப்பாட்டிற்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தக் கட்டமைப்பு இந்திய-அமெரிக்கக் கூட்டாண்மையின் அதிகரித்து வரும் ஆழம், நம்பிக்கை மற்றும் ஆற்றலை பிரதிபலிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் விவசாயிகள், தொழில்முனைவோர், சிறு, குறு, நடுத்தரத் தொழில்  நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனக் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் மீனவர்களுக்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்து, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கட்டமைப்பு முதலீடு மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மைகளை ஆழப்படுத்தும், உறுதியான, நம்பகமான விநியோகத் தொடர்களை வலுப்படுத்தும், உலகளாவிய வளர்ச்சிக்குப் பங்களிக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், மக்களை மேம்படுத்துகின்ற, பகிரப்பட்ட வளத்தை ஊக்குவிக்கின்ற எதிர்கால நோக்குடைய உலகளாவிய கூட்டாண்மைகளுக்கு இந்தியா தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது என்றும்  கூறியுள்ளார்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயலின் எக்ஸ் தளப் பதிவிற்கு பதிலளித்து, திரு மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது;

“இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நல்ல செய்தி 

நமது இரு பெரிய நாடுகளுக்கு இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். நமது நாடுகளுக்கு இடையே வலுவான உறவுகளுக்கு அதிபர் டிரம்பின் தனிப்பட்ட உறுதிப்பாட்டிற்கு நான் நன்றி கூறுகிறேன்.

இந்தக் கட்டமைப்பு, அதிகரித்து வரும் நமது கூட்டாண்மையின் ஆழம், நம்பிக்கை மற்றும் ஆற்றலை பிரதிபலிக்கிறது . இது இந்தியாவின் கடின உழைப்பாளி விவசாயிகள், தொழில்முனைவோர், சிறு, குறு, நடுத்தரத் தொழில்  நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனக் கண்டுபிடிப்பாளர்கள், மீனவர்கள் மற்றும் பலருக்கு புதிய வாய்ப்புகளைத் திறப்பதன் மூலம் 'மேக் இன் இந்தியா'வை வலுப்படுத்துகிறது. இது பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும்.

இந்தியாவும் அமெரிக்காவும் புத்தாக்க ஊக்குவிப்புக்கான உறுதிப்பாட்டைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்தக் கட்டமைப்பு நம்மிடையே முதலீடு மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மைகளை மேலும் ஆழப்படுத்தும்.

இந்தக் கட்டமைப்பு உறுதியான, நம்பகமான விநியோகத் தொடர்களை வலுப்படுத்தும். உலகளாவிய வளர்ச்சிக்குப் பங்களிக்கும். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதை நோக்கி இந்தியா முன்னேறும்போது, எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்ட, நமது மக்களுக்கு அதிகாரம் அளிக்கின்ற, பகிரப்பட்ட வளத்திற்குப் பங்களிக்கின்ற  உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்."

@POTUS

@realDonaldTrump

***

(Release ID: 2224785)

TV/SMB/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2224855) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam