PIB Headquarters
பரிக்ஷா பே சர்ச்சா: தேர்வு தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை வழிநடத்தும் ஒரு இதயப்பூர்வமான இணைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
06 FEB 2026 3:47PM by PIB Chennai
பிரதமர் நரேந்திர மோடியால் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பரிக்ஷா பே சர்ச்சா எனப்படும் தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்வு, தேர்வு அழுத்தத்தைக் குறைத்து மாணவர்களிடையே முழுமையான கற்றலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நாடு தழுவிய முயற்சியாகும். கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்படும் இது, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருடன் பிரதமர் நேரடியாகத் தொடர்புகொண்டு, தேர்வுகள் குறித்த நம்பிக்கையான அணுகுமுறையை ஊக்குவிக்கிறார். இந்தத் திட்டம் ஒரு மக்கள் இயக்கமாக உருவாகியுள்ளது.
பரிக்ஷா பே சர்ச்சாவின் 9-வது பதிப்பு பங்கேற்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து 4.5 கோடிக்கும் அதிகமான பதிவுகள் வந்தன. முன்னதாக, நாடு தழுவிய மாணவர் பங்கேற்பு நிகழ்வுகள் 12 ஜனவரி 2026 (தேசிய இளைஞர் தினம்) முதல் 23 ஜனவரி 2026 (பராக்கிரம தினம்) வரை ஏற்பாடு செய்யப்பட்டன. மாணவர்களிடையே தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள், வினாடி வினா, எழுத்துப் போட்டிகள் போன்றவை இதில் நடைபெற்றன.
இந்த முயற்சி புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முக்கிய கொள்கைகளை பிரதிபலிக்கிறது. இது மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக மன அழுத்தமில்லாத, அனுபவ கருத்தியல் கற்றலை ஊக்குவிக்கிறது. பயனுள்ள நேர மேலாண்மை, நினைவாற்றலைப் பராமரித்தல், உணர்ச்சி ரீதியான மீட்சித் தன்மையை உருவாக்குதல் போன்ற முக்கியமான அம்சங்களை பிரதமர் எடுத்துக்காட்டுகிறார். அதே நேரத்தில் மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்களுக்கும் நடைமுறை வழிகாட்டுதலை வழங்குகிறார்.
பரிக்ஷா பே சர்ச்சா 2026, புதுதில்லியின் 7 லோக் கல்யாண் மார்க்கில் நடந்த உரையாடல் பல மறக்கமுடியாத தருணங்களைக் கொண்டிருந்தது. 2026 பதிப்பில் 4.5 கோடிக்கும் அதிகமான பதிவுகள் வந்தன. இதுதவிர 2.26 கோடி பங்கேற்பாளர்கள் இது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு 6.76 கோடிக்கும் அதிகமான நபர்களாக உயர்ந்துள்ளது.
பிரதமர் காலை உணவின் போது மாணவர்களை ஆச்சரியப்படுத்தினார். அவர்களின் உற்சாகத்தையும் ஆற்றலையும் கணிசமாக அதிகரித்தார். மாணவர்கள் தேர்வுகள் தொடர்பான தங்கள் அச்சங்களை பகிர்ந்து கொண்டனர். அவற்றைச் சமாளிப்பதற்கான உத்திகளைப் பற்றி விவாதித்தனர். பல பங்கேற்பாளர்கள் பிரதமர் எழுதிய பரீட்சைக்கு பயமேன் என்ற புத்தகத்திலிருந்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
2026 பதிப்பில் முதல் முறையாக, கோயம்புத்தூர் (தமிழ்நாடு), ராய்ப்பூர் (சத்தீஸ்கர்), தேவமோக்ரா (குஜராத்), குவஹாத்தி (அசாம்), புது தில்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய வகையில் பல இடங்களில் தொடர்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
மிகவும் தனித்துவமான கலந்துரையாடல்களில் ஒன்று அசாமில் நடைபெற்றது. அங்கு இந்த அமர்வு பிரம்மபுத்திரா நதியில் ஒரு கப்பலில் நடத்தப்பட்டது.
* 2018-ம் ஆண்டு புது தில்லியில் உள்ள தல்கதோரா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் 2,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரில் பங்கேற்றனர்,
* 2019-ம் ஆண்டில் , இந்த நிகழ்வு விரிவடைந்து, 90 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.
* பின்னர் இந்த நிகழ்ச்சி கொவிட்-19 தொற்றுநோய் காலத்தில் மாற்றியமைக்கப்பட்டது. 2021-ம் ஆண்டில், இது ஏப்ரல் 7 ஆம் தேதி முழுவதுமாக இணையதளம் மூலம் நடத்தப்பட்டது.
* 2022-ம் ஆண்டில் புது தில்லியின் தல்கதோரா மைதானத்தில் நேரடி நிகழ்ச்சி வடிவத்திற்குத் திரும்பியது.
* 2023 ஜனவரி 27 அன்று நடைபெற்ற நிகழ்வை பல லட்சக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்கள் நேரலையில் கண்டுகளித்தனர்.
* 2024-ம் ஆண்டில் இது பாரத் மண்டபத்திற்கு மாறியது. இதில் பங்கேற்க 2.26 கோடி பதிவுகள் பெறப்பட்டன.
* 2025 பதிப்பு 3.53 கோடி பதிவுகளுடன் கின்னஸ் ஒரு சாதனையைப் படைத்தது.
* இப்போது 2026-ம் ஆண்டில் அதன் 9வது பதிப்பில் 4.5 கோடி பதிவுகளைத் தாண்டியுள்ளது.
ஆயிரக்கணக்கில் இருந்து கோடிகளாக மாறியுள்ள இந்த அதிவேக வளர்ச்சி, இளம் திறமையாளர்களை வளர்ப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கிறது. பிரதமர் அலுவலகத்திற்கும் வகுப்பறைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் மூலம், இளைஞர்களிடையே ஒரு நம்பிக்கையை இது உருவாக்கியுள்ளது.
***
(Release ID: 2224442)
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2224833)
வருகையாளர் எண்ணிக்கை : 10