உரங்கள் துறை
ரயில்வேயின் சீரான செயல்பாடுகள், உரங்களை உரிய நேரத்தில் கொண்டு சேர்ப்பதை உறுதி செய்கின்றன
प्रविष्टि तिथि:
30 JAN 2026 1:47PM by PIB Chennai
விவசாயிகளுக்கு உரங்கள் குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதில் மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. 2025 - ம் ஆண்டின், காரிஃப் மற்றும் தற்போதைய ரபி பருவத்தில், மத்திய ரயில்வே அமைச்சகம் - உரத்துறைக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது, அது சார்ந்த நடவடிக்கைகள் வாயிலாகத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. உரங்களைக் கொண்டு செல்லும் சரக்கு ரயில்களின் விரைவான மற்றும் சீரான இயக்கம், மாநிலங்களுக்கு குறித்த நேரத்தில் அவை விவசாயிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்துள்ளது. இதன் மூலம், பயிர் சாகுபடி செய்யும் தருணங்களில், எவ்விதத் தட்டுப்பாடுமின்றி உரங்கள் விவசாயிகளுக்குக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. உரங்கள் துறை, ரயில்வே அமைச்சகத்தின் இத்தகைய ஒத்துழைப்பைப் பாராட்டியதுடன், இதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள், நாடு முழுவதும் உரங்கள் போதிய அளவில் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய உதவியுள்ளன என்று தெரிவித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில், சராசரி சரக்கு ரயில் ஏற்றுமதி ஜூலை 2025-ல் நாளொன்றுக்கு 72 ரயில்களாகவும், ஆகஸ்ட் 2025-ல் நாளொன்றுக்கு 78 ரயில்களாகவும் உயர்ந்து, செப்டம்பர் 2025-ல் நாளொன்றுக்கு 80 சரக்கு ரயில் சேவைகள் என்ற எண்ணிக்கையை எட்டியது.
2025-26 - ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் 2025 வரை, அனைத்து விதமான முக்கிய உரங்களும், மாநிலங்களுக்கு போதிய அளவிலும், திருப்திகரமான அளவிலும் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. யூரியா உரத்தைப் பொறுத்தவரை, 312.40 லட்சம் மெட்ரிக் டன் என்ற தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 350.45 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவிலான கையிருப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், பல்வேறு வகையான உரங்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்து, மதிப்பீடு செய்யப்பட்டத் தேவையைக் காட்டிலும் கூடுதலான உரங்களுக்கான தடையற்ற விநியோக நடைமுறைகளையும் உறுதி செய்தது. மாநிலங்களும், தொலைதூர பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்கும் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220752®=3&lang=1
***
TV/SV/KPG/RK
(रिलीज़ आईडी: 2220817)
आगंतुक पटल : 17