குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர்  மாண்புமிகு திருமதி திரௌபதி முர்மு ஆற்றிய உரை

இடுகை இடப்பட்ட நாள்: 28 JAN 2026 12:57PM by PIB Chennai

மாண்புமிகு உறுப்பினர்களே,

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது, மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் விரைவான வளர்ச்சி மற்றும் அதன் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடுவதில் கடந்த ஆண்டு மறக்க முடியாத வருடமாக இருந்தது. இந்தக் காலகட்டம், அதனுடன் ஏராளமான உந்துசக்திகளை வழங்கியுள்ளது. தற்போது, இந்தியா, வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டதன் 150-வது வருடத்தைக் கொண்டாடி வருகிறது. இந்த எழுச்சிக்கு ஆதாரமாக அமைந்த ரிஷி பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயாவிற்கு இந்திய மக்கள் மரியாதை செலுத்துகிறார்கள். இந்த உன்னதமான தருணத்தை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்பட்டதற்காக, மாண்புமிகு உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு உறுப்பினர் பெருமக்களே,

இந்தக் காலகட்டத்தில், ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்களின் 350-வது தியாக வருடத்தை நாட்டு மக்கள் மிகுந்த பக்தி சிரத்தையுடன் அனுசரித்தனர். பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தேசம் அவருக்கு மரியாதை செலுத்தியதுடன், பழங்குடி சமூக மக்களின் பங்களிப்புகளையும் நினைவு கூர்ந்தது.

 

சர்தார் படேலின் 150-வது பிறந்த ஆண்டுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தியுள்ளன. அதேபோல, பாரத ரத்னா விருது பெற்ற பூபன் ஹசாரிகாவின் நூற்றாண்டு பிறந்தநாள் நிகழ்ச்சிகளும் இசை மற்றும் தேச ஒற்றுமை உணர்வுடன் கொண்டாடப்பட்டன.

தங்களது ஒளிமயமான கடந்த காலத்தின் இத்தகைய மகத்தான சாதனைகளையும், தங்கள் முன்னோர்கள் வழங்கிய போற்றத்தக்க பங்களிப்புகளையும் நாட்டு மக்கள் நினைத்துப் பார்க்கும்போது, இவை புதிய தலைமுறையை ஊக்குவிக்கின்றன. இந்த ஊக்குவிப்பு, ‘வளர்ச்சியடைந்த பாரதத்தைநோக்கிய நாட்டின் பயணத்தைத் துரிதப்படுத்துகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

2026-ம் ஆண்டின் துவக்கத்துடன், இந்த நூற்றாண்டின் இரண்டாவது கட்டத்திற்குள் நாடு நுழைந்திருக்கிறது. இந்த நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகளில், எண்ணிலடங்காத வெற்றிகள், மகத்தான சாதனைகள் மற்றும் தன்னிகரில்லாத அனுபவங்களை இந்தியா சந்தித்திருக்கிறது. கடந்த 10-11 ஆண்டுகளில், ஒவ்வொரு துறையிலும் நாடு அதன் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தி உள்ளது. 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதை நோக்கிய இந்தியாவின் தீவிர முயற்சியில், இந்தக் காலகட்டம் ஆற்றல் வாய்ந்த ஆதார பகுதியாக மாறி உள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

சமத்துவம் மற்றும் சமூக நீதியை பாபா சாகேப் அம்பேத்கர் எப்போதுமே வலியுறுத்தி வந்தார். இந்த உணர்வினால் அரசியலமைப்பும் நம்மை ஊக்குவிக்கிறது. எந்தவிதமான ஏற்றத்தாழ்வுமின்றி, அனைத்துக் குடிமக்களும் தங்கள் முழு உரிமையை நிலைநாட்ட வழிவகை செய்வதே சமூக நீதி என்பதாகும். உண்மையான சமூக நீதியை நோக்கி எனது அரசு முழு உறுதிப்பாட்டுடன் செயல்படுகிறது. இதன் விளைவாக, கடந்த 10 ஆண்டுகளில், சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். எனது அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்தின் போது, ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கும் முன்முயற்சி மிகுந்த உத்வேகத்துடன் முன்னேற்றம் அடைந்துள்ளது.

  • கடந்த தசாப்தத்தில், ஏழைகளுக்காக, 4 கோடி உறுதியான வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, 32 லட்சம் புதிய வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • ஜல் ஜீவன் இயக்கத்தின் ஐந்து ஆண்டுகளில், 12.5 கோடி புதிய வீடுகளுக்குத் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கோடி புதிய வீடுகளை தண்ணீர் குழாய் இணைப்புகள் சென்றடைந்துள்ளன.
  • இலவச சமையல் எரிவாயு திட்டத்தின் மூலம், இதுவரை சுமார் 10 கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க வேகத்தை சந்தித்தது.
  • அமைப்புமுறைகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மையை எனது அரசு ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஓராண்டில், பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு சுமார் 6.75 லட்சம் கோடி ரூபாய் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர் பெருமக்களே,

தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், நலிவடைந்த பிரிவினர் மற்றும் பழங்குடி சமூகங்கள் உட்பட அனைத்துப் பிரிவினரின் நலனுக்காகவும் எனது அரசு பாடுபடுகிறது. அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தொலைநோக்குப் பார்வை, நாட்டு மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. 2014-ம் ஆண்டின் துவக்கத்தில், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் 25 கோடி குடிமக்களை மட்டுமே சென்றடைந்தன. எனது அரசின் தொடர் முயற்சிகளின் விளைவாக, இன்று ஏறத்தாழ 95 கோடி இந்தியர்கள், சமூகப் பாதுகாப்பு வரம்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

  • ஏழை மக்களின் நலனுக்காகக் கொண்டுவரப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு வரை, நாடு முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானோர் இலவசமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சைகளைப் பெற்று பயனடைந்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு மட்டும் 2.5 கோடி ஏழை நோயாளிகள், இலவச மருத்துவ சிகிச்சையைப் பெற்றிருக்கிறார்கள்.
  • கடந்த ஒன்றரை ஆண்டுகளில், மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் சேர்க்கை அடையாள அட்டைகள், ஒரு கோடி பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த அட்டைகளின் உதவியால் சுமார் 8 லட்சம் மூத்த குடிமக்கள் மருத்துவமனைகளின் உள் நோயாளிகள் பிரிவில் இலவச சிகிச்சையைப் பெற்றிருக்கிறார்கள்.
  • நாடு முழுவதும் நிர்மாணிக்கப்பட்டுள்ள 1 லட்சத்து 80 ஆயிரம் ஆயுஷ்மான் ஆரோக்கிய நிலையங்களின் வாயிலாக, நோயாளிகள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே மருத்துவ சிகிச்சையைப் பெற்றிருக்கிறார்கள்.

முக்கிய நோய்களுக்கு எதிராக எனது அரசு தீவிரமாகப் போராடியுள்ளது. அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு இயக்கத்தின் கீழ் 6.5 கோடி மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் இந்த முயற்சி பேருதவியாக இருந்துள்ளது.

 

இயக்க முறையில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த பலன்களை வழங்கியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஏராளமான குறைவான வளர்ச்சி அடைந்துள்ள மற்றும் ஊரகப் பகுதிகளில், இந்த நோயைத் திறம்பட தடுப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கண் நோயான டிராக்கோமா இந்தியாவிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருப்பது, பெருமைக்குரிய விஷயமாகும்

ஒவ்வொரு குடிமகனுக்கும் காப்பீட்டு வசதியை ஏற்படுத்தித் தருவதில் எனது அரசு உறுதிப்பூண்டுள்ளது. பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டம் முதலியவை, இந்த முயற்சியில் முக்கிய அங்கம் வகித்துள்ளன. இந்தத் திட்டங்களின் வாயிலாக ஆதரவு தேவை கோடிக்கணக்கான மக்கள் காப்பீட்டின் பயன்களை அடைந்திருக்கிறார்கள். இந்தத் திட்டங்களின் கீழ் 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான உரிமை கோரல்கள் வழங்கப்பட்டுள்ளன. நெருக்கடி நிலையில் உள்ள கோடிக்கணக்கான ஏழைகளுக்கு, இந்தத் திட்டங்கள் ஆபத்பாந்தவனாக இருந்து வருகின்றன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் நம் நாட்டின் இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர், தங்களது பங்களிப்பை தொடர்ந்து விரிவுபடுத்தி வருவது, எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது. கடந்த ஆண்டின் ஊக்கமளிக்கும் புள்ளியியல் விவரங்கள், இதற்கு உதாரணமாக விளங்குகின்றன.


 

  • கடந்த ஆண்டு, 350 மில்லியன் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து, இந்தியா சாதனை படைத்தது.
  • 150 மில்லியன் டன் உற்பத்தியுடன், உலக அளவில் அதிக அரிசியை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்ந்தது.
  • உலகின் இரண்டாவது மிகப்பெரிய மீன் உற்பத்தியாளராகவும் நமது நாடு மாறியது. கடல்சார் பொருளாதாரத்தில் நாட்டின் வளர்ச்சியை இது பிரதிபலிக்கிறது.
  • பால் உற்பத்தித் துறையிலும், உலக அளவில் சிறந்த நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. கூட்டுறவு இயக்கத்தின் வலிமையால் இது சாத்தியமானது.
  • இந்தக் காலகட்டத்தில், நாட்டின் உற்பத்தித் துறையும் சாதனை அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்தது. செல்பேசி தயாரிப்பு போன்ற துறையில் உலக அளவில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக விளங்குகிறது. 2025-26-ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இந்தியாவின் திறன்பேசி ஏற்றுமதி ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடந்தது. இந்த ஆண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மின்சார வாகனங்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

ஊழல் மற்றும் மோசடிகள் இல்லாத ஒரு அமைப்புமுறையை உருவாக்குவதில் எனது அரசு வெற்றி பெற்று வருகிறது. இதன் விளைவாக, வரி செலுத்துவோரின் ஒவ்வொரு ரூபாயும், நாட்டின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக செலவிடப்படுகிறது.

இன்று, நவீன உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா முதலீடு செய்து வருகிறது. நிலம், கடல் மற்றும் வான்வழித் துறைகளில் இந்தியாவின் விரைவான முன்னேற்றம், இப்போது உலகளாவிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

  • பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், அடல் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. கிராமப்புற சாலை இணைப்பில், கடந்த ஒரு வருடத்தில், இந்தியா சுமார் 18 ஆயிரம் கிலோமீட்டர் புதிய சாலைகளைச் சேர்த்துள்ளது. இப்போது, ​​இந்தியாவின் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த கிராமப்புற பகுதிகளும் சாலை மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
  • ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு சேவையாற்றும் இந்திய ரயில்வே, 100% மின்மயமாக்கல் இலக்கை அடைவதை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.
  • நேரடி ரயில் பாதை மூலம், மிசோரம் தலைநகர் ஐஸ்வாலும் புது தில்லியும் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, ஐஸ்வால் ரயில் நிலையத்திற்கு முதல் முறையாக ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது, ​​உள்ளூர் மக்கள் வெளிப்படுத்திய உற்சாகம், ஒட்டுமொத்த நாட்டிற்கும் மகிழ்ச்சியை அளித்தது.
  • ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலமான செனாப் பாலத்தையும், தமிழ்நாட்டில் புதிய பாம்பன் பாலத்தையும் நிர்மாணித்ததன் மூலம் உள்கட்டமைப்புத் துறையில் இந்தியா ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.
  • இன்று, ஜம்மு-காஷ்மீர் முதல் கேரளா வரை, 150க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்களின் வலையமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
  • சில நாட்களுக்கு முன்புதான், புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேற்கு வங்கம் மற்றும் அசாம் இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்திய ரயில்வேயின் முன்னேற்றத்தில் ஒரு புதிய சாதனையாகும்.
  • இந்தியாவின் மெட்ரோ வலையமைப்பைப் பற்றி குடிமக்களும் பெருமைப்படுகிறார்கள். 2025-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மெட்ரோ வலையமைப்பு ஆயிரம் கிலோமீட்டர் என்ற வரலாற்று அடையாளத்தைத் தாண்டியுள்ளது. இப்போது, இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ வலையமைப்பைக் கொண்டுள்ளது.
  • உள்நாட்டு நீர்வழிப் பாதைகளை மேம்படுத்துவதற்கு எனது அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முன்னதாக, இந்தியாவில் ஐந்து தேசிய நீர்வழிகள் மட்டுமே இருந்தன. இந்த எண்ணிக்கை, இப்போது 100 ஐக் கடந்துவிட்டன. இதன் மூலம், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் உள்ளிட்ட கிழக்கு இந்தியாவில் உள்ள மாநிலங்கள் தளவாட மையங்களாக வளர்ந்து வருகின்றன.
  • ஆறுகள் மற்றும் கடற்கரைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் சுற்றுலாவை அதிகரிக்க சொகுசு கப்பல் சுற்றுலா வழிவகுக்கிறது. இதன் மூலம் உள்ளூர் பொருளாதாரங்கள் வலிமையடைகின்றன.

மாண்புமிகு உறுப்பினர் பெருமக்களே,

இப்போது, ​​விண்வெளி சுற்றுலாவும் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது அல்ல. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்திய இளம் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் பயணம், வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. வரும் ஆண்டுகளில், நமது நாடு விண்வெளியில் ஒரு இந்திய நிலையத்தை நிறுவுவதை நோக்கி முன்னேறும். ககன்யான் திட்டத்திலும் நாடு உற்சாகமாக ஈடுபட்டு வருகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

பல தசாப்தங்களாக நிலுவையில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்தவும், ஒவ்வொரு பயனாளிக்கும் திட்டங்களின் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்யவும், எனது அரசு 'பிரகதி' என்ற புதிய முயற்சியைத் தொடங்கியது. டிசம்பர் 2025-ல், பிரகதியின் 50-வது கூட்டத்தின் வரலாற்று மைல்கல்லும் எட்டப்பட்டது. ஆண்டுவாக்கில், பிரகதி சுமார் 85 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை பிரகதி விரைவுபடுத்தியுள்ளது. மேலும் அடைமட்ட அளவில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை செயல்படுத்த உதவியுள்ளது. சீர்திருத்தம்-செயல்படுத்துதல்-மாற்றம் என்ற நாட்டின் தாரகமந்திரத்தின் வெற்றிக்குப் பிரகதி கூட்டங்கள் பெரிதும் உதவியுள்ளன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

கடந்த 11 ஆண்டுகளில், நாட்டின் பொருளாதார அடித்தளம் கணிசமாக வலுவடைந்துள்ளது. பல்வேறு உலகளாவிய நெருக்கடிகள் இருந்தபோதிலும், இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகத் தொடர்ந்து நீடிக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் இந்தியா தனது சாதனையை மேலும் மேம்படுத்தியுள்ளது. இது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு நேரடியாகப் பயனளிக்கிறது. எனது அரசின் கொள்கைகளின் விளைவாக, குடிமக்களின் வருமானம் உயர்ந்திருப்பதுடன், அவர்களின் சேமிப்பு அதிகரித்து, வாங்கும் திறனும் மேம்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததற்காக, அனைத்து குடிமக்களுக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது, இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்கு உத்வேகம் அளிப்பதுடன், இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

இன்று, எனது அரசு 'சீர்திருத்த எக்ஸ்பிரஸ்' பாதையில் முன்னேறி வருகிறது. எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப பழைய விதிகள் மற்றும் வாய்ப்புகள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

வரலாற்றுச் சிறப்புமிக்க அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம், குடிமக்களை எவ்வாறு உற்சாகத்தால் திளைக்கச் செய்தது என்பதை அனைவரும் கண்டிருக்கிறார்கள். இந்த சீர்திருத்தம், குடிமக்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் சேமிப்பை உறுதி செய்தது. ஜிஎஸ்டி குறைப்பைத் தொடர்ந்து, 2025-ம் ஆண்டில், இரு சக்கர வாகனங்களின் பதிவு, இரண்டு கோடியைத் தாண்டி, ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

வருமான வரிச் சட்டமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத நன்மைகளை வழங்குகின்றன. இது நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

மாண்புமிகு உறுப்பினர் பெருமக்களே,

நாட்டில் பல புதிய துறைகள் உருவாகி வரும் வேளையில், தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதும், சமமான முக்கியத்துவம் பெறுகிறது. புதிய தொழிலாளர் சட்டங்களை செயல்படுத்துவதன் பின்னணியில் உள்ள முதன்மை நோக்கமும் இதுதான். நீண்ட காலமாக, நாட்டின் தொழிலாளர்கள் ஏராளமான தொழிலாளர் சட்டங்களில் சிக்கித் தவித்தனர். இவை இப்போது நான்கு சட்டத் தொகுப்புகளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், தொழிலாளர்கள் நியாயமான ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் மற்றும் பிற நலத்திட்டங்களைப் பெறுவது எளிதாக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்களால், குறிப்பாக நாட்டின் இளைஞர்கள் மற்றும் பெண்கள் பெருமளவு பயனடைவார்கள்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

இந்தியாவை பசுமை வளர்ச்சி மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் ஆற்றல் மையமாக மாற்றுவதில் எனது அரசு தீவிரம் காட்டி வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மையங்களில் முதலீடுகள் பெருகி வருகின்றன. இந்தப் புதிய வடிவிலான பொருளாதாரமும் அதிக எரிசக்தி தேவைகளைக் கொண்டுள்ளது. இந்தப் பாதையில், அணுசக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபத்தில் இயற்றப்பட்ட சாந்தி சட்டம், 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி இலக்கை அடைய உதவும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தத்திற்காக, உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

அணுசக்தியைத் தவிர, சூரிய சக்தித் துறையிலும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. பிரதமரின் இலவச சூரிய வீடு திட்டம் மூலம், சாதாரண நுகர்வோர் கூட இப்போது மின்சார உற்பத்தியாளர்களாக மாறி வருகின்றனர். இதுவரை, கிட்டத்தட்ட 20 லட்சம் கூரை மீதான சூரிய சக்தி அமைப்புமுறைகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் விளைவாக மின்சார உற்பத்தி அதிகரித்திருப்பதுடன், லட்சக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரக் கட்டணங்கள் குறைந்துள்ளன.

இது போன்ற அனைத்து முயற்சிகளாலும், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் இந்தியா 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் என்ற இலக்கை நிச்சயமாக அடையும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

எந்தவொரு நீதி முறையின் உண்மையான வெற்றியும், குடிமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக பாதுகாப்பு, எளிதான மற்றும் அதிகாரமளித்தல் உணர்வை ஏற்படுத்தும் அம்சத்தைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. இந்தக் கொள்கையை மனதில் கொண்டு இந்திய நியாயச் சட்டம் (பிஎன்எஸ்) விரைவாக அமல்படுத்தப்படுகிறது. அத்துடன் மக்கள் நம்பிக்கை (ஜன் விஸ்வாஸ்) சட்டத்தின் புதிய பகுதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 300-க்கும் அதிகமான  சட்டங்கள் குற்றப்பிரிவுகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப்  பார்வையை அடைய எனது அரசு இந்த சீர்திருத்த விரைவை தொடர்ந்து விரைவுப்படுத்தும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி சில நகரங்கள் மற்றும் பிராந்தியங்களிலிருந்து விரைவு பெற்றது.  இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் போதிய வாய்ப்புகளைப் பெறமுடியாமல் இருந்தனர். தற்போது எனது அரசு பின்தங்கிய பிராந்தியங்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் திறனை வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சக்தியாக மாற்றுகிறது.

பூர்வக் குடிமக்கள் மீது  தற்போது சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. இது கிழக்கு இந்தியப் பகுதியின் விரைவான வளர்ச்சியாகும். தற்போது மேற்கு வஙக்ம் மற்றும் ஒடிசா மாநிலங்களின் கடல்சார் பிராந்தியங்களில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகின்றன. தற்போது வடகிழக்குப் பிராந்தியமும் வளர்ச்சியின் மைய நீரோட்டத்தில் ஒருங்கிணைந்துள்ளது. வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள அசாம், ஸ்ரீமந்தா சங்கர்தேவ் போன்ற சிறந்த மனிதர்களின் பூமியாகும். விரைவில்,  அசாமில் தயாரிக்கப்படும் செமிக்கண்டக்டர் சிப்ஸ் உலக அளவில் மின்னணு பொருட்களுக்கான முக்கிய பகுதியாக அமையும். இப்பகுதியின் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு முன்னெப்போதும் இல்லாத கவனம் செலுத்தப்படுகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

கடந்த 11 ஆண்டுகளில் வடகிழக்குப் பிராந்தியத்தில் 7,200 கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது ஊரகப் பகுதி, மலைப்பகுதி, பழங்குடியின மற்றும் எல்லைப்பகுதிகளை எளிதாக சென்றடைய வகை செய்யும்.

பிரதமரின் கிராமச் சாலைத் திட்டத்தின் கீழ்,  சுமார் 50,000 கிமீ தொலைவிற்கு ஊரகப் பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது சந்தைகள், மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு எளிதாக செல்ல வழிவகுத்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் வடகிழக்குப் பிராந்தியத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக 80,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது. அருணாசலப்பிரதேசம், திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களின் தலைநகரங்கள் தற்போது அகல ரயில் வழித்தடங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இது இப்பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் தொழில்துறைக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பத்தாண்டு காலம் வடகிழக்குப் பிராந்தியத்தில் சுகாதார வசதிகளையும் உறுதி செய்வதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இட்டா நகரில், மாநிலப் புற்றுநோய் நிறுவனம் அசாமின், சிவசாகரில் மருத்துவக் கல்லூரி ஆகியவை கோடிக்கணக்கான குடும்பத்தினருக்கு சிகிச்சை அளிக்கும். அதேபோல், சிக்கிமின் சிச்சேயில் மருத்துவக் கல்லூரி, அகர்தலாவின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனை சுகாதார வசதிகளை பெருமளவில் மேம்படுத்தும். இது போன்ற முயற்சிகள் வடகிழக்குப் பிராந்தியத்தில் வலுவான சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

பின்தங்கிய மக்களுக்கு எனது அரசு முன்னுரிமை அளிக்கிறது. பிரதமரின் ஜன்மான் திட்டம், இந்த முன்னிரிமையிலேயே செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மிகவும் பின்தங்கிய பழங்குடியின மக்கள் வசிக்கும் 20,000-க்கும்  அதிகமான கிராமங்கள் மேம்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 2.5 லட்சம் வீடுகள் ஏழை மக்களுக்காக கட்டப்பட்டுள்ளன. தர்தி அபா பழங்குடியினர் கிராம மேம்பாட்டு இயக்கமும், பழங்குடியின பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை விரைவுபடுத்துகிறது. இந்த இரண்டு திட்டங்களில் எனது அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடுகிறது.

கடந்த 11 ஆண்டுகளில் எஸ் சி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 42,000 கோடி ரூபாய்க்கும் மேலான தொகை அளவில், மெட்ரிக் படிப்புக்குப் பிந்தைய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் சுமார் 5 கோடி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். பழங்குடியின பகுதிகளில் 400-க்கும் அதிகமான  ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளையும் அரசு உருவாக்கியுள்ளது. இது பழங்குடியின குழந்தைகளுக்கு தரமான கல்வியையும், சிறந்த எதிர்காலத்தையும் அளிக்கிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விளக்கியுள்ள திருவள்ளுவர் பெருந்தகை, சமூகத்தில் எவர்களுடைய தொழில்களிலும் ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கையும் கடினமாக உழைக்கும் விவசாயின் உழைப்பைச் சார்ந்துள்ளது.

இந்தக் கருத்தின் அடிப்படையில் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்காக வளமையான விவசாயி என்ற முதல் முன்னுரிமையை எனது அரசு அளிக்கிறது. இந்த உணர்வுடன், பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி போன்ற திட்டங்களை அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை அவர்களுடைய வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனது அரசின் சிறந்த கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகள் நாட்டில் வேளாண் உற்பத்தியில் விரைவான வளர்ச்சியை அடைய முக்கியப் பங்காற்றுகிறது. 2024-25-ம் ஆண்டில் உணவு தானியங்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தி சாதனை அளவாக இருந்தது. நமது வேளாண் துறையில் பின்தங்கியுள்ள பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் எனது அரசு பணியாற்றுகிறது.

அரசின் இந்த முயற்சி வேளாண் பொருட்களின் இறக்குமதியைக் குறைப்பது நோக்கமாகும். சமையல் எண்ணெய்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்புவகைகள் தொடர்பான தேசிய இயக்கங்கள் மூலம் நாடு இத்துறைகளில் தற்சார்பை நோக்கி முன்னேறுகிறது. இதன் விளைவாக 2024-25-ல் எண்ணெய் வித்துப் பயிர்களின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயை அளிப்பதற்கு எனது அரசு உலக அளவில், தானியங்கள் அல்லது சிறுதானியங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

தற்போது உணவு தானிய உற்பத்தியுடன் விவசாயிகளும் கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு, தேனீ வளர்ப்பு ஆகிய புதிய பொருளாதார வளர்ச்சிக்கான வகைகளில் இணைக்கப்பட்டு வருகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பயன்களை வழங்குவதற்காக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களுக்காக புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. 2024-25-ல் நாட்டின் மீன் உற்பத்தி சுமார் 200 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 105 சதவீத அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

வேளாண் துறையை நவீனப்படுத்தவும் சிறந்த சரக்குப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தவும் வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தையும் எனது அரசு உருவாக்கியுள்ளது. இந்த முன்முயற்சியின் காரணமாக இதுவரை 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான தொகை தனியார் முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது என்பதை நான் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது இளைஞர்களுக்காக லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. எனது அரசின் தொலைநோக்குப் பார்வை காரணமாக நாட்டின் உணவுப் பதப்படுத்துதல் திறன், 20 மடங்கு அதிகரித்து விவசாயிகள் தங்களுடைய பயிர்களுக்கு சிறந்த விலைகளைப் பெறுகின்றனர்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

ஊரகப் பகுதிகளில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்காக வளர்ச்சியடைந்த இந்தியா ஜிராம்ஜி என்று பெயரிடப்பட்ட சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தப் புதியச் சட்டம் கிராமங்களில் 125 நாட்கள் உறுதி செய்யப்பட்ட வேலைவாய்ப்பை உறுதி செய்யும். அதே நேரத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதையும் இது உறுதி செய்யும். இதற்காக எனது அரசு நீண்டகாலமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டம் ஊரகப் பகுதியின் வளர்ச்சிக்குப் புதிய விரைவை ஏற்படுத்தி விவசாயிகள் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு புதிய வசதிகளை உருவாக்கும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகளில் எனது அரசு கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது. தற்போது திரிபுவன் சக்காரி பல்கலைக்கழகம் மூலம் கூட்டுறவுடன் தொடர்புடைய தனிநபர்கள், கற்றுக் கொள்ளவும், முன்னேறவும் வாய்ப்புகளைப் பெறுகின்றனர். அத்துடன் 10,000-க்கும் அதிகமான வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் வேளாண் துறை அதிகாரம் அளிக்கப்பட்டு வருகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

அனைத்துக் குடிமக்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் மட்டுமே நாட்டின் வளர்ச்சி சாத்தியம் என்று எனது அரசு உறுதியாக நம்புகிறது. அதனால் மகளிர் தலைமையிலான வளர்ச்சி என்ற மந்திரத்துடன் நாடு தற்போது முன்னேறுகிறது.

எனது அரசு மகளிர்களுக்காக சிறப்புத் திட்டங்களை அர்ப்பணிக்கத் தொடங்கியுள்ளது. மகளிர், இதரத்திட்டங்களிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.  பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் முதல் ஜல்ஜீவன் இயக்கம் வரை ஒவ்வொரு திட்டத்திலும் மகளிர் பயனாளிகளுக்கு உயர் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சியில் மகளிர் பங்களிப்பை அதிகரிக்க எனது அரசு  10 கோடி மகளிரை சுயஉதவிக்குழுக்களுடன் இணைத்துள்ளது. தற்போது இரண்டு கோடிக்கும் அதிகமான லட்சாதிபதி சகோதரிகள் உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 60 லட்சத்துக்கும் அதிகமான மகளிர் லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர். 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற இலக்கை அரசு விரைவில் அடைய உள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

நாட்டின் தொலைதூரப் பகுதிகளில், நமோ ட்ரோன் சகோதரி என்ற முன்முயற்சி மகளிருக்கும் அதிகாரமளித்தலில் அடையாளமாக  உருவெடுத்துள்ளது. பயிற்சி பெற்றுள்ள இந்த ட்ரோன் சகோதரிகள், தற்போது வேளாண் துறையில் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.

மகளிர் பொருளாதார மேம்பாட்டுடன் அவர்களுடைய ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி போன்ற இதரத் துறைகளிலும் எனது அரசு கவனம் செலுத்துகிறது. 2025 செப்டம்பரில் தொடங்கப்பட்ட ஆரோக்கியமான மகளிர், வலிமையான குடும்பங்கள் இயக்கத்தின் கீழ், சுமார் 7 கோடி மகளிருக்கு உடல்நலப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இயக்கம்  மகளிர் தங்களுடைய சிகிச்சையை விரைவாகத் தொடங்க உதவியுள்ளது.  எனது அரசின் முற்போக்கு கண்ணோட்டத்தாலும், கொள்கையாலும், நாட்டின் ஒவ்வொரு விருப்பமான  துறையிலும் மகளிர் விரைவாக முன்னேறுகின்றனர். இதே திசையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நாடு மற்றொரு மைல்கல்லை எட்டியது. தேசிய பாதுகாப்பு அகாடமியைச் சேர்ந்த மகளிர் கேடட்டைச் சேர்ந்த முதலாவது பிரிவினர் பட்டம் பெற்றனர். இது நாட்டின் வளர்ச்சி மற்றும் அதிகாரமளித்தலின் முன்னணியில் மகளிர் சக்தி உள்ளது என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

நாம் மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவும் கூடாது, மற்றவர்களுக்காக அச்சத்துடன் வாழவும் கூடாது என்று ஸ்ரீகுரு தேக் பகதூர் நமக்கு கற்றுத்தந்துள்ளார்.

இந்த அச்சமற்ற உணர்வால் மட்டுமே நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும். அதிகாரத்தைப் பொறுப்புடனும் அறிவுடனும் பயன்படுத்த முடியும் என்பதை இந்திய நிரூபித்துள்ளது. ஆபரேஷ்ன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்புத் துறையினரின் திறன்களையும், துணிச்சலையும் உலக நாடுகள் கண்டன. நமது நாட்டின் சொந்த வளங்களைப் பயன்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்தியா மீதான எந்தவொரு  தீவிரவாதத் தாக்குதலுக்கும் உறுதியான மற்றும் திடமான  பதிலடி கொடுக்கப்படும் என்ற வலிமையான செய்தியை எனது அரசு கூறியுள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய போராட்டத்தின் ஒரு பகுதியாகும். நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் மிஷன் சுதர்சன் சக்ரா திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

எனது அரசின் கொள்கையின்படி, மாவோயிஸ்ட்  பயங்கரவாதத்திற்கு எதிராகவும், பாதுகாப்புப் படையினர் திடமாக செயல்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக நாட்டின் 126 மாவட்டங்களில் பாதுகாப்பற்ற, அச்சமுடைய, அவநம்பிக்கையுடைய சூழல் இருந்தது.  மாவோயிஸ்டுகளின் சிந்தனை பல தலைமுறையினரின் எதிர்காலத்தை  இருளில் விட்டது. நமது இளைஞர்கள், பழங்குடியினர், தலித் சகோதர சகோதரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

தற்போது மாவோயிஸ்ட் பயங்கரவாத சவால்கள், 126 மாவட்டங்களிலிருந்து வெறும் 8 மாவட்டங்களாக குறைந்துள்ளன. இவற்றில், 3 மாவட்டங்கள் மட்டுமே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் மாவோயிஸ்டுடன் தொடர்புடைய சுமார் 2,000 பேர் சரணடைந்துள்ளனர். இதில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் அமைதியை திரும்ப ஏற்படுத்தியுள்ளது.

மாவோயிஸசத்தால் பாதிக்கப்பட்டுள்ள  பகுதிகள் மாற்றமடைந்து வருவதை நாடே கண்டு வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிஜாப்பூர்  கிராமத்தை சென்றடைந்த போது அதைக் கிராமத்தினர் திருவிழாவாகக் கொண்டாடினார்கள். பஸ்கார் ஒலிம்பிக்கில் இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்கின்றனர். ஆயுதங்களைக் கைவிட்டவர்கள் தற்போது சிக்தால்பூரில் பேண்டம் கஃபேயில் பணியாற்றி வருகின்றனர்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

ஆயுதங்களை கைவிட்ட பிறகு சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இணைந்து அவர்கள் இயல்பான மற்றும் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதை எனது அரசு உறுதி செய்கிறது. நாட்டில்  மாவோயிஸ்ட் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில்  இல்லை.

மாண்புமிகு உறுப்பினர்களே,

தற்சார்பு இல்லாத வாழ்க்கை சுதந்திரம் முழுமையடையாது என்று குருதேவ் ரபீந்தர்நாத் தாகூர் தெரிவித்துள்ளார். இந்தியாவை தற்சார்புடையதாக மாற்றுவதற்கான  தொடர்ச்சியான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எமது அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது மேக் இன் இந்திய தொலைநோக்குப் பார்வையுடன் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்  பல்வேறு உலகளாவிய சந்தைகளை அடைகின்றன. சுதேசி மீதும் மக்களுக்கு பெரும் உற்சாகம் நிலவுகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், இதுவரை சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் 17 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் மின்னணு துறை முன்னெப்போதும் இல்லாத அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.  கடந்த 11 ஆண்டுகளில் மின்னணு பொருட்களின் உற்பத்தி 6 மடங்கு அதிகரித்துள்ளது.  தற்போது இது 11 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

2025 இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி 1.5 லட்சம் கோடி ரூபாயைக் கடந்தது. பாதுகாப்புத்தளவாட பொருட்களின் ஏற்றுமதியும் சாதனை அளவாக 23,000 கோடி ரூபாயைக் கடந்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் தளங்களின் நம்பிக்கை வலிமையுடன் வளர்ச்சியடைந்துள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

உலகளாவிய முதலீடு மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு சீராக அதிகரித்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா 750 பில்லியன் அமெரிக்க டாலரை வெளிநாட்டு நேரடி முதலாகப் பெற்றுள்ளது.

இந்தியாவில் புதிய துறைகளை எனது அரசு ஊக்குவித்து வருகிறது. நவீன பொருள் உற்பத்தி மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு முக்கியமான மைக்ரோ சிப்கள், தயாரிப்பில் தற்சார்பு அவசியமாகும். 2025-ல் மேலும் நான்கு செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. வெகு விரைவில் இத்தகைய மொத்தம் 10 தொழிற்சாலைகள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

சிப்கள் தவிர மேலும் சில முக்கிய பிரிவில் எனது அரசு இயக்க கதியில் பணியாற்றத் தொடங்கியுள்ளது. தேசிய முக்கிய கனிமங்கள் இயக்கத்தின் மூலம் அத்தியாவசியமான கனிமங்களுக்கு மற்ற நாடுகளை சார்ந்திருப்பது குறைந்துள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

கடந்த காலத்தில் கடல் வணிகத்தில் இந்தியா வல்லரசாக இருந்துள்ளது. இருப்பினும், பல பத்தாண்டுகளுக்கு புறக்கணிக்கப்பட்டதால் காலனிய காலத்திற்குப் பின், இன்று 95 சதவீத இந்திய வணிகத்திற்கு வெளிநாட்டு கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு ஆண்டுதோறும் 6 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்படுகிறது.

இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு எனது அரசு தீர்க்கமாக செயல்படுகிறது. கப்பல் போக்குவரத்து துறைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒதுக்கீடாக சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் என்பதை எனது அரசு அறிவித்துள்ளது. மேலும் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்ய பழைய கடல்சார் சட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

கல்வியின் மூலம் ஞானத்தைப் பெற்று அமைப்பு மூலம் சக்தி பெறுங்கள் என்று கேரளாவின் மகத்தான துறவி ஸ்ரீநாராயண குரு கூறியுள்ளார். ஏனெனில், ஒரு நாடு கனவு காணும் போது, அந்த கனவுகளை இளைஞர்களால் மட்டுமே நிறைவேற்ற முடியும்.

கடந்த 11 ஆண்டுகளில் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி துறையில் மட்டும் 25 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதை அறியும் போது நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். எனது அரசின் திறன்மிகு கொள்கைகளால் நாட்டில் புதிய தொழில்கள் உருவாகியுள்ளன. செமிகண்டக்டர்கள், பசுமை எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் போன்ற துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

கடந்த 10 ஆண்டுகளில் நவீன உள்கட்டமைப்பு மேம்பாட்டில் எனது அரசு 50 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடு பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

இந்திய இளைஞர்களிடம் இப்போது ஆக்கப்பூர்வமான மாற்றத்தை நாம் காண்கிறோம். தற்சார்பு, சுதேசி, இந்தியாவில் உற்பத்தி ஆகியவற்றை தேசத்தின் இளைஞர்கள் தங்களின் பொறுப்பாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

முத்ரா திட்டம் போன்ற முன்முயற்சிகள் இளைஞர்களிடையே தொழில்முனைவையும், சுய வேலை உணர்வையும் வளர்த்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், சிறுதொழில் முனைவோருக்கு 38 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. முதல்முறை சுய வேலைவாய்ப்பை தொடங்கியோருக்கு 12 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், 20 லட்சத்திற்கும் அதிகமான கைவினைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, வங்கி நிதியுதவி செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ், 72 லட்சம் சாலையோர வியாபாரிகள் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி பெற்றுள்ளனர்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

அண்மையில் ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம் பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தப் பத்தாண்டுகளில் ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்பின் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது. தற்போது சுமார் 2 லட்சம் புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றில் கடந்த ஆண்டு மட்டும் பதிவு செய்தவை ஐம்பதாயிரம் நிறுவனங்களாகும். இந்தியாவின் புத்தொழில் நெட்வொர்க்கில் 20 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பணி புரிகின்றனர். இவற்றில் 45 சதவீத நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநராக உள்ளார்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

கடந்த ஆண்டு பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் எனது அரசு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர வேலைகளை வழங்கியுள்ளது. தனியார் துறையிலும் கூட பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம் 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.  இந்தத் திட்டத்தின் கீழ், 3.5 கோடிக்கும் அதிகமாக புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

எனது அரசின் முயற்சிகளால் தகவல் தொழில்நுட்ப சேவைகள், மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றிலும் ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

கடந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான செல்பேசி கோபுரங்கள் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் 4-ஜி, 5-ஜி நெட்வொர்க் சேவைகள் கிடைத்துள்ளன. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள படைப்பாக்கப் பொருளாதாரத்தின் உலகளாவிய மையமாக இந்தியா மாறியுள்ளது. இந்தப் பொருளாதாரத்தை மேலும் துரிதப்படுத்த வேவ்ஸ் என்று அழைக்கப்படும் புதிய தளத்தை எனது அரசு தொடங்கியுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

தொழில்நுட்பம் இன்று வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் விளைவாக வேலைவாய்ப்பின் தன்மையும் வேகமாக மாறி வருகிறது. எனவே நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான தேவைகளை சந்திக்கும் வகையில், தேசிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, பள்ளிக்கூட நிலையிலேயே தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மனநிலையுடன் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். இதில், அடல் புத்தாக்க இயக்கம் சிறப்பாக பங்களிப்பு செய்கிறது. இதுவரை நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் அடல் ஆய்வகங்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர். இதுதவிர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கலாச்சாரம், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மூலம் ஊக்குவிக்கப்படுகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

நாட்டில் ஐடிஐ வலைப்பின்னலை மேம்படுத்துவதற்கு எதிர்காலத்திற்கு தயாரான 1,000 ஐடிஐகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதமரின் சேது திட்டத்தின் கீழ் இதற்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்திற்கான பணியாளர்களை எனது அரசு உருவாக்கி வருகிறது. இதுவரை செமிகண்டக்டர் தொழிற்சாலைக்காக 60 ஆயிரம் இளைஞர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவுத்துறையில் 10 லட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகிறது. வதந்திகள், தவறான தகவல், போலியான  உள்ளடக்கம் போன்றவை ஜனநாயகம், சமூக நல்லிணக்கம், பொதுமக்களிடம் உள்ள நம்பிக்கை ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இந்த கடுமையான பிரச்சனையில் நீங்கள் அனைவரும் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் எனது அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் விளையாட்டுத் துறையில் முன் எப்போதும் இல்லாத வளர்ச்சியை நாடு கண்டுள்ளது.

நமது மகள்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் செயல்பாடு மேம்பட்டுள்ளது. இது உண்மையில் பாராட்டத்தக்கது ஆகும். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது. இதேபோல், பார்வை மாற்றுத்திறன் கொண்ட மகளிர் கிரிக்கெட் அணியும் உலகக் கோப்பையை வென்றுள்ளது. எனது மகள்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

கடந்த பத்தாண்டில் விளையாட்டுகள் தொடர்பான அனைத்து பிரிவிலும் இந்தியாவில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. எனது அரசு கேலோ இந்தியா கொள்கையை உருவாக்கி விளையாட்டுகள் தொடர்பான அமைப்புகளை வெளிப்படைத்தன்மை உள்ளதாக மாற்றியுள்ளது.

இவற்றில் தயார்நிலை மற்றும் நம்பிக்கையின் காரணமாக காமன்வெல்த் விளையாட்டுகள் 2030-ஐ நடத்துவதற்கு இந்தியா பொறுப்பேற்றுள்ளது.

வளர்ச்சியடைந்த இந்தியா கட்டமைப்பில் தீர்க்கமான பங்களிப்பை செய்யும் திறன் நாட்டின் இளைஞர்களிடம் உள்ளது என்று நான் நம்புகிறேன்.

இளைஞர்களையும் தேச கட்டமைப்பிற்கான சிந்தனையையும் இணைக்க எனது அரசு வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் தளத்தை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு இந்த தளத்தில் சுமார் 50 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் மை பாரத் தளத்தில் இதுவரை சுமார் 2 கோடி இளைஞர்கள் இணைந்துள்ளனர்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

உலகம் சிக்கலான கட்டத்தில் இருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். உலகளாவிய சமநிலைகள் மாற்றம் பெற்று வருகின்றன. தற்போதைய மோதல்களால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையும், உலகளாவிய நிலைத்தன்மை மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கிறது. இத்தகைய சவாலான சூழ்நிலையிலும் கூட இந்தியா வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறுகிறது. இந்த வெற்றிக்குப் பின்னால் இருப்பது எனது அரசின் சமச்சீரான வெளிநாட்டு கொள்கையும், தொலைநோக்குப் பார்வையும் காரணமாகும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

தற்போது நிலவுகின்ற சிக்கலான உலக சூழ்நிலைகளுக்கு இடையே உலகின் பாலமாக இந்தியா தனது பங்களிப்பை செய்கிறது. மோதல்களில் ஈடுபட்டுள்ள நாடுகள் கூட முக்கியமான பிரச்சனைகளில் இந்தியாவிடம் நம்பிக்கைக் கொண்டுள்ளன. இந்தியா தொடர்ந்து சமநிலைக்கும், பாகுபாடுமின்மைக்கும், மனிதாபிமானத்திற்கும் முன்னுரிமை அளித்து வருவது திருப்தி தரும் விஷயமாகும். அதேநேரம் இந்தியா முதலில் என்ற தீர்மானத்திலும் அது உறுதியாக உள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

உலகளாவிய தெற்கின் குரலை உலகம் முழுவதும் இந்தியா உயர்த்தி வருகிறது. ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நீண்டகால உறவுகளை உறுதியுடன் பராமரித்து வரும் இந்தியா புதிய கூட்டாண்மைகளை ஏற்படுத்தி பழைய உறவுகளை வலுப்படுத்துகிறது. பிம்ஸ்டெக், ஜி-20, பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகளையும் இந்தியா தொடர்ந்து வலுப்டுத்தி வருகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

மனிதகுலத்திற்கான சேவை உலகளாவிய அரசியல் மற்றும் ஒத்துழைப்பின் இறுதி நோக்கம் என்பதில் இந்தியா எப்போதும் நம்பிக்கைக் கொண்டுள்ளது. தனது செயல்பாடுகள் மூலம் இதற்கு ஊக்கமூட்டும் உதாரணங்களை இந்தியா அளித்துள்ளது. லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, பசுபிக் தீவுகள் மற்றும் அண்டை நாடுகளில் நெருக்கடிகள் ஏற்பட்ட போது, சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு இந்தியா முன்வந்துள்ளது. நவம்பர் 2025-ல் இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயலின் போது எனது அரசு ஆபரேஷன் சாகர்பந்து மூலம் உதவி செய்தது. மியான்மர் மற்றும் ஆஃப்கானிஸ்தானுக்கும் முதலாவது உதவியாளராக இந்தியா தனது பங்கினை செய்துள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

உலகளாவிய பல அமைப்புகளில் தனது ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டின் மூலம் பல பொறுப்புகளை இந்தியா ஏற்றுள்ளது. இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா பெற்றுள்ளது. எதிர்கால வாய்ப்புகள் மற்றும் சவால்களை மனதில் கொண்டு சர்வதேச சமூகத்தை பொது தளத்திற்கு கொண்டு வரும் வகையில், உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சிமாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது.  இதுவும் கூட உலகத்திற்கு முக்கியமான நிகழ்வு என்பதை நிரூபிக்கும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கு தேசிய சுயமரியாதை மற்றும் கலாச்சார பெருமிதத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது தேவையாக உள்ளது.  கலாச்சார கண்ணோட்டத்தில் இந்தியா உலகின் வளமான நாடுகளின் ஒன்றாக உள்ளது. இந்தப் பாரம்பரியத்தை நாட்டிற்கு வலுவான ஆதாரமாக மாற்ற எனது அரசு பாடுபட்டு வருகிறது.

மெக்காலேயின் சதிகளால் காலனிய காலத்தில் இந்திய மக்களிடம் தாழ்வு மனப்பான்மை உணர்வு திணிக்கப்பட்டது. தற்போது சுதந்திரத்திற்குப்பின் முதல்முறையாக எனது அரசு அதற்கு பலத்த அடிகொடுக்கும் துணிவை வெளிப்படுத்தியுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

நாட்டின் ஒவ்வொரு முனையிலும் தனது சொந்த கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், செழுமைப்படுத்தவும் நாடு இன்று பணியாற்றி வருகிறது. இந்த திசையில் எனது அரசின் முயற்சிகள் மூலம் 125 ஆண்டுகளுக்குப் பின் பகவான் புத்தரின் புனிதமான நினைவுச் சின்னங்கள் திரும்ப கொண்டு வரப்பட்டுள்ளன. இவை இப்போது பொதுமக்கள் பார்வையிட காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சௌராஷ்டிராவில் உள்ள சோமநாதர் ஆலயம் மறுகட்டுமானம் செய்யப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவடைவதையும் இந்த ஆண்டு குறிக்கிறது. சோமநாதர் ஆலயத்தின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிந்தைய பயணம் இந்தியாவின் சமய வழிபாடு, சனாதன கலாச்சாரம், நீடித்த நம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாக விளங்குகிறது. சோமநாத் சுயமரியாதை விழாவில் நாடு முழுவதிலுமிருந்து மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றது உண்மையில் ஒப்பில்லாதது ஆகும்.

சிறிது காலத்திற்கும் முன், ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரத்தின் ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்த நிகழ்வும் கூட தங்களின் புகழ்மிக்க கடந்த காலத்தின் மீது பெருமித உணர்வு கொள்ள கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

தொன்மையான கற்றல் மையமாக நமது நாடு உள்ளது. பண்டைய ஓலைச்சுவடிகள் வடிவில் தலைமுறை தலைமுறைகளகா பல்லாயிரம் ஆண்டுகளுக்கு இந்த
ஞானம் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் அந்நியர் ஆக்கிரமிப்பு, சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட  புறக்கணிப்பு காரணமாக விலைமதிக்க முடியாத இந்தப் பாரம்பரியம் கடுமையான இழப்புக்கு ஆளானது. தற்போது இந்த அறிவுக்கடலைப் பாதுகாக்க எனது அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஞான பாரத இயக்கம் மூலம் நாடு முழுவதும் உள்ள பண்டைய ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் இந்திய அறிவு பாரம்பரியத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதோடு, எதிர்கால மக்களுக்கு கிடைக்கச் செய்யும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

நாட்டின் வளமான பழங்குடியினர் பாரம்பரியத்தைப் பாதுகாக்க அருங்காட்சியகங்களையும் எனது அரசு நிறுவியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சத்தீஸ்கரில் ஷாஹீத் வீர் நாராயண் சிங் பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகம் அண்மையில் திறக்கப்பட்டது. அரசியல் சட்டம் சந்தாதி மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டதன் மூலம் எனது அரசு பழங்குடி சமூகத்தின் பெருமையை விரிவாக்கியுள்ளது என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

நமது மரபுகளையும் கலாச்சாரத்தையும் நாம் மதிக்கும்போது, ​​உலகமும் அவற்றை மதிக்கிறது. கடந்த ஆண்டு, நமது தீபாவளிப் பண்டிகையை மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியங்களின் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது. உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை பிரபலமடைந்து வரும் வேளையில், யுனெஸ்கோவின் இந்த அங்கீகாரம் அனைத்து இந்தியர்களுக்கும்  பெருமைக்குரிய விஷயமாகும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

பல்வேறு கருத்துகளும் மாறுபட்ட பார்வைகளும் இருப்பினும், தேசத்தை விட மேலானது எதுவும் இல்லை என்பதில் ஒருமித்த கருத்து நிலவுகிறது. மரியாதைக்குரிய மகாத்மா காந்தி, நேருஜி, பாபாசாகேப், சர்தார் படேல், ஜெயபிரகாஷ் நாராயண், லோஹியா, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா, வாஜ்பாய் ஆகியோர், ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை என்றாலும், அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு சில விஷயங்கள் உள்ளன என நம்பிக்கைக் கொண்டிருந்தனர். வளர்ச்சியடைந்த இந்தியா தீர்மானம், நாட்டின் பாதுகாப்பு, தற்சார்பு, சுதேசி இயக்கம், தேசிய ஒற்றுமைக்கான முயற்சிகள், தூய்மை மற்றும் தேசம் தொடர்பான இது போன்ற அனைத்து விஷயங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இதுவே நமது அரசியலமைப்பின் ஆன்மா ஆகும். எனவே, இன்று உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தேசத்தின் வளர்ச்சியில் பங்கேற்று, தேச நலன் சார்ந்த விஷயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டை மேற்கொண்டு, இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் புதிய ஆற்றலை அளிக்க வேண்டும். 

மாண்புமிகு உறுப்பினர்களே,

இன்று, இந்தியா தனது எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது என்பதை அனைத்து குடிமக்களும் காண முடிகிறது. இன்று மேற்கொள்ளப்படும் முடிவுகளின் தாக்கத்தை இனி வரும் ஆண்டுகளிலும் காண முடியும்.

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கு ஓர் அரசுக்கு அல்லது ஒரு தலைமுறைக்கு மட்டுமே உரியது அல்ல. இது ஒரு தொடர்ச்சியான பயணம். இந்தப் பயணத்தில், நம் அனைவரின் முயற்சிகள், ஒழுக்கம், தொடர்ச்சி ஆகியவை முக்கியமானவை. வரும் காலங்களில், நாட்டின் முன்னேற்றம் அதன் கூட்டுத் தீர்மானத்தால் வடிவமைக்கப்படும்.

நாடாளுமன்றமும், அரசும் மற்றும் குடிமக்களும் ஒன்றிணைந்து, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற லட்சியத்தை நிறைவேற்றுவோம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்தியக் குடிமக்கள், தேசத்தின் நலனுக்கு முதன்மை முக்கியத்துவம் அளித்து, அரசியல் சட்ட விழுமியங்களைக் கடைப்பிடித்து முன்னேறிச் செல்வார்கள் என்பதிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அனைத்துக் குடிமக்களும் நாட்டின் நலனுக்காக தங்கள் கடமைகளை நிறைவேற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையுடன், வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வெற்றிகரமாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

ஜெய்ஹிந்த்!

ஜெய்பாரத்!

-----

TV/SMB/IR/BR/PD/KPG/EA


(Release ID: 2219510)

 


(வெளியீட்டு அடையாள எண்: 2220290) வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam