மக்களவை செயலகம்
சட்டப்பேரவை செயல்பாடுகளில் தரநிலைகளை நிர்ணயிக்க வேண்டியது அவசியம் :மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா வலியுறுத்தல்
प्रविष्टि तिथि:
20 JAN 2026 8:23PM by PIB Chennai
லக்னோவில் நடைபெற்று வரும் 86-வது அகில இந்திய சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன. இந்த அமர்வுகளில் மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த நாளில், சட்டமன்றச் செயல்முறைகளில் தொழில்நுட்பத்தைப் புகுத்தி வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்திறனை மேம்படுத்த அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்குதல் மற்றும் மக்கள் நலனில் சட்டமன்றங்களுக்கு உள்ள பொறுப்புக்கூறல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மாநிலங்களவைத் துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் இந்த விவாதங்களை ஒருங்கிணைத்து நடத்தினார்.
அமர்வுகளில் உரையாற்றிய திரு ஓம் பிர்லா, உத்தரப் பிரதேச சட்டப்பேரவை சபாநாயகர் திரு சதீஷ் மகானா பணிகளை வெகுவாகப் பாராட்டினார். குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள சிறந்த சட்டமன்ற நடைமுறைகளைத் தனது மாநிலத்தில் ஒருங்கிணைத்ததற்கும், சட்டமன்ற உறுப்பினர்களின் கல்வி மற்றும் தொழில் அனுபவங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகளை திரு பிர்லா பாராட்டினார். மேலும், மாநில சட்டமன்றங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என்றும், இதற்காக ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு சட்டமன்ற நடைமுறைகளைத் தரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மாநிலங்களவைத் துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் அவர்கள், சட்டமன்றப் பணிகளில் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். நாடாளுமன்றத்திற்கும் மாநிலச் சட்டமன்றங்களுக்கும் இடையே முறையான ஒருங்கிணைப்பு இருந்தால் மட்டுமே இத்தகைய நவீன தொழில்நுட்பங்களைச் சரியாகப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மாநாட்டின் இறுதி நாளான நாளை, திரு ஓம் பிர்லா நிறைவுரையாற்றுகிறார். இந்த விழாவில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216577®=3&lang=1
வெளியீட்டு எண்: 2216577
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2216643)
आगंतुक पटल : 7