பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற உத்தரப்பிரதேச சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 25 SEP 2025 1:15PM by PIB Chennai

உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, உத்தரப்பிரதேச  மாநில அமைச்சர்களே, உத்தரப்பிரதேச பிஜேபி மாநில தலைவர் திரு பூபேந்திர சௌத்ரி அவர்களே, தொழில்துறையைச் சேர்ந்த நண்பர்களே, பிற பிரமுகர்களே, பொதுமக்களே அனைவருக்கும் வணக்கம்.

உத்தரப் பிரதேச சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கு வந்துள்ள வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2200-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை இங்கே காட்சிப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தாண்டு இந்த  கண்காட்சி ரஷ்யாவின் ஆதரவுடன் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்த முதலமைச்சர் திரு யோகி அவர்கள், அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, இன்று நம் வழிகாட்டியான பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்தநாள். தீனதயாள் அவர்கள் நமக்கு அந்த்யோதயாவின் பாதையைக் காட்டினார். அந்த்யோதயா என்றால் கடைக்கோடியில் இருப்பவரின் எழுச்சி. வறுமையில் வாடுபவருக்கும் வளர்ச்சி சென்றடைய வேண்டும், அனைத்துப் பாகுபாடுகளும் முடிவுக்கு வர வேண்டும் என்பதே அந்த்யோதயாவில் தான் சமூக நீதியின் பலம் உள்ளது. இன்று, இந்தியா இந்த வளர்ச்சியின் மாதிரியை உலகிற்கு வழங்குகிறது.

நண்பர்களே, நான் உங்களுக்கு ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன். இன்று, நமது நிதி தொழில்நுட்பத் துறை உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்படுகிறது. இந்த நிதி தொழில்நுட்பத் துறையின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை கணிசமாக மேம்படுத்தி ஊக்குவித்துள்ளது. இந்தியா வளர்ச்சிப்பாதையில் அனைவரையும் அழைத்துச்செல்லும் வகையில் பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. யுபிஐ, ஆதார், டிஜி லாக்கர், ஓஎன்டிசி ஆகியவை அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்குகின்றன. அதாவது, அனைவருக்கும் வாய்ப்பு, அனைவருக்கும் முன்னேற்றம். இன்று அதன் தாக்கம் இந்தியாவின் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. வணிக வளாகத்தில் வர்த்தகம் செய்யும் நபரும் யுபிஐ-யை பயன்படுத்துகிறார், மேலும் சாலையில் தேநீர் விற்கும் நபரும் யுபிஐ யை பயன்படுத்துகிறார். ஒரு காலத்தில் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைத்த முறையான கடன் இப்போது பிரதமரின் ஸ்வநிதி திட்டம் மூலம் தெருவோர வியாபாரிகளையும் சென்றடைகிறது.

நண்பர்களே,

அத்தகைய தளங்களில் ஒன்றுதான் அரசு மின் சந்தை, அதாவது ஒரு காலத்தில், அரசு எந்தப் பொருட்களையும் விற்க வேண்டுமானால், அது பெரிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இன்று, சுமார் 25 லட்சம் விற்பனையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் அரசு மின் சந்தை வலைதளத்துடன் இணைக்கப்பட்டு அரசுப் பொருட்களை விநியோகிக்கின்றனர். இவர்கள் சிறு வர்த்தகர்கள், தொழில்முனைவோர், கடைக்காரர்கள் ஆவர். அவர்கள் இந்திய அரசின் தேவைக்கேற்ப தங்கள் பொருட்களை நேரடியாக இந்திய அரசுக்கு விற்பனை செய்கிறார்கள், மேலும் இந்திய அரசின் அவற்றை வாங்குகிறது. இதுவரை இந்திய அரசு மின் சந்தை மூலமாக ரூ.15 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்கள் அல்லது சேவைகளை வாங்கியுள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த வலைதளத்தில் நம்முடைய சிறு குறு நடுத்தர தொழில்களிடமிருந்து சுமார் ரூ.7 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன. இது முந்தைய அரசு காலத்தில் கற்பனை செய்ய முடியாத ஒன்று, ஆனால் இன்று நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள சிறு கடைக்காரர்கள் கூட மின் சந்தை போர்ட்டலில் தங்கள் பொருட்களை விற்கிறார்கள். மேலும் இதுதான் உண்மையான அர்த்தத்தில் அந்த்யோதயா, இதுவே வளர்ச்சியின் அடித்தளம்.

நண்பர்களே, இன்று, இந்தியா 2047-க்குள் வளர்ச்சியைந்த நாடாக மாறும் இலக்கை நோக்கி நகர்கிறது. உலகில் நடந்து வரும் இடையூறுகள் மற்றும் நிச்சயமற்ற தன்மை இருக்கும் போதிலும், இந்தியாவின் வளர்ச்சி நன்றாக உள்ளது. இடையூறுகள் நம்மைத் திசை திருப்புவதில்லை, ஆனால் அந்த சூழ்நிலைகளிலிருந்தே புதிய திசைகளை நாம் கண்டறிகிறோம், ஒரு புதிய திசைக்கான வாய்ப்புகளை நாம் காண்கிறோம். எனவே, இந்த இடையூறுகளுக்கு மத்தியில், இன்று இந்தியா வரவிருக்கும் தசாப்தங்களுக்கான அடித்தளத்தை வலுப்படுத்துகிறது. இதிலும் கூட, நமது உறுதிப்பாடு, நமது மந்திரம் - தற்சார்பு இந்தியா என்பதாகும். மற்றவர்களைச் சார்ந்து இருப்பதை விட பெரிய உதவியின்மை வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த மாறிவரும் உலகில், ஒரு நாடு மற்ற நாடுகளை எவ்வளவு அதிகமாகச் சார்ந்திருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அதன் வளர்ச்சி சமரசம் செய்யப்படும். எனவே, இந்தியாவைப் போன்ற ஒரு நாடு யாரையும் சார்ந்திருப்பது இனி ஏற்றுக்கொள்ள முடியாதது, அதனால் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும். இந்தியாவில் நம்மால் தயாரிக்க முடிந்த ஒவ்வொரு பொருளையும், நாம் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும். இன்று, இங்கு என் முன் அமர்ந்திருக்கும் ஏராளமான தொழில்முனைவோர், வர்த்தகர்கள் மற்றும் வணிகர்களை நான் பார்க்கிறேன். நீங்கள் இந்த தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தில் பங்களிப்பை அளிப்பவர்கள். தற்சார்பு இந்தியாவை வலுப்படுத்தும் விதத்தில் உங்கள் வணிக மாதிரியை வளர்க்க வேண்டும் என்று இன்று நான் உங்களை வலியுறுத்துகிறேன்.

நண்பர்களே, மத்திய அரசு 'உள்நாட்டு தயாரிப்பு' மற்றும் உற்பத்திக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். சிப் முதல் கப்பல்கள் வரை அனைத்தையும் இந்தியாவில் தயாரிக்க விரும்புகிறோம். அதனால்தான் நீங்கள் வணிகம் செய்வதை எளிதாக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அரசு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணக்க விதிகளை நீக்கியுள்ளது. வணிகத்தில் சிறிய தவறுகளுக்குக் கூட உங்கள் மீது வழக்குத் தொடர வழிவகுத்த நூற்றுக்கணக்கான விதிகளை அரசு குற்றமற்றதாக்கியுள்ளது. அரசு உங்களுடன் தோளோடு தோள் நின்று பயணிக்கிறது.

ஆனால் நண்பர்களே,

எனக்கு சில எதிர்பார்ப்புகளும் உள்ளன, அவற்றை உங்களுடன் நிச்சயமாகப் பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் உற்பத்தி செய்யும் எதுவாக இருந்தாலும், அது சிறந்த தரத்தில் இருக்க வேண்டும், மிகச் சிறந்தவற்றிலும் சிறந்ததாக இருக்க வேண்டும். உள்நாட்டுப் பொருட்களின் தரம் தொடர்ச்சியாக மேம்பட வேண்டும், அவை பயன்படுத்த எளிதானதாகவும் நீண்ட காலத்திற்குப் பயன்படக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று நாட்டு மக்களிடம் உள்ளது. எனவே, தரத்தில் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது. இன்று, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சுதேசியுடன் இணைகிறார், சுதேசிப் பொருட்களை வாங்க விரும்புகிறார், "இது சுதேசி" என்று பெருமையுடன் கூறுகிறார். இந்த உணர்வை இன்று நாம் எல்லா இடங்களிலும் அனுபவிக்கிறோம். நமது வர்த்தகர்களும் இந்த மந்திரத்தை கடைப்பிடிக்க வேண்டும். இந்தியாவில் கிடைக்கும் எதற்கும் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நண்பர்களே, ஆராய்ச்சி ஒரு முக்கியமான தலைப்பு ஆகும். நாம் ஆராய்ச்சியில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்; அதை நாம் பல மடங்கு அதிகரிக்க வேண்டும். புத்தாக்கம்  இல்லாவிட்டால் உலகம் ஸ்தம்பித்து விடும், வணிகம் ஸ்தம்பித்து விடும், வாழ்க்கை ஸ்தம்பித்து விடும். இதைச் சமாளிக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இப்போது, ஆராய்ச்சியில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க அனைவரும் முன்வர வேண்டும். இது காலத்தின் தேவை. உள்நாட்டு ஆராய்ச்சி, உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றின் முழு சுற்றுச்சூழல் அமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.

நண்பர்களே, நமது உத்தரப் பிரதேசமும் முதலீட்டிற்கான அற்புதமான ஆற்றல் நிறைந்ததாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இணைப்புப் புரட்சி, தளவாடச் செலவுகளை கணிசமாகக் குறைத்துள்ளது. உத்தரப் பிரதேசம் நாட்டின் அதிக எண்ணிக்கையிலான விரைவுச் சாலைகளைக் கொண்ட மாநிலமாக மாறியுள்ளது. உத்தரப் பிரதேசம் நாட்டின் அதிக எண்ணிக்கையிலான சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட மாநிலமாக உள்ளது; இது நாட்டின் இரண்டு முக்கிய சரக்கு வழித்தடங்களின் மையமாக உள்ளது. பாரம்பரிய சுற்றுலாவிலும் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 'நமாமி கங்கா' போன்ற பிரச்சாரங்கள் உத்தரப் பிரதேசத்தை 'சொகுசுகப்பல் சுற்றுலா' வரைபடத்தில் வைத்துள்ளன. "ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு" முயற்சி, உத்தரப் பிரதேசத்தின் பல மாவட்டங்களின் தயாரிப்புகளை சர்வதேச சந்தைக்குக் கொண்டு வந்துள்ளது. நான் வெளிநாட்டு விருந்தினர்களைச் சந்திக்கும் போது யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று நான் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. எங்கள் குழு "ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு" பட்டியலை ஆலோசிக்கிறது, மேலும் நான் அவற்றை உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு பரிசளிக்கிறேன்.

நண்பர்களே,

 உற்பத்தியிலும் உத்தரப் பிரதேசம் புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. எடுத்துக்காட்டாக, மின்னணுவியல் மற்றும் கைபேசி உற்பத்தித் துறையில், கடந்த தசாப்தத்தில் இந்தியா உலகில் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக மாறியுள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. இன்று, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து கைபேசிகளிலும், சுமார் 55 சதவீதம் இங்கு உத்தரப் பிரதேசத்தில் தயாரிக்கப்படுகின்றன. குறைக்கடத்தி துறையிலும் உத்தரப் பிரதேசம் இப்போது இந்தியாவின் தற்சார்பை வலுப்படுத்தும். இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஒரு பெரிய குறைக்கடத்தி ஆலை கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

நண்பர்களே, பாதுகாப்புத் துறையை சிலவற்றுக்கு உதாரணமாக காட்டலாம். நமது படைகள் சுதேசியை விரும்புகின்றன, மற்றவர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க விரும்புகின்றன. எனவே, நாம் இந்தியாவிலேயே ஒரு துடிப்பான பாதுகாப்புத் துறையை வளர்த்து வருகிறோம். ஒவ்வொரு பாகமும் "இந்தியாவில் தயாரித்தது" என்ற லேபிளைக் கொண்ட ஒரு சூழலை நாம் உருவாக்கி வருகிறோம். இதில் உத்தரப் பிரதேசம் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. ரஷ்யாவுடன் இணைந்து கட்டப்பட்ட தொழிற்சாலையில் இருந்து ஏ கே 203 ரக துப்பாக்கிகளின் உற்பத்தி மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது. உத்தப்பிரதேசத்தில் ஒரு பாதுகாப்புத் தொழில்தடம் கட்டப்பட்டு வருகிறது. அதில் பிரம்மோஸ் ஏவுகணைகள் உட்பட பல ஆயுதங்களின் உற்பத்தி ஏற்கனவே தொடங்கிவிட்டது. உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்வது உத்தப்பிரதேசத்தில் முதலீடு செய்யுங்கள், உத்தப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யுங்கள். இங்கு லட்சக்கணக்கான சிறு, குறு நடுத்தர நிறுவனங்களின் வலுவான வலையமைப்பு உள்ளது, மேலும் அது தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அவற்றின் திறனைப் பயன்படுத்திக் கொண்டு, இங்கு முழுமையான தயாரிப்பு ஒன்றை உற்பத்தி செய்யுங்கள். இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உத்தரப்பிரதேச அரசும் இந்திய அரசும் உங்களுக்கு வழங்கி வருகின்றன.

நண்பர்களே, இன்று, சீர்திருத்தம் செயல்படுத்துதல், மாற்றம் என்ற உறுதிப்பாட்டுடன் இந்தியா அதன் தொழில்துறையுடனும், அதன் வர்த்தகர்களுடனும், அதன் குடிமக்களுடனும் துணை நிற்கிறது. மூன்று நாட்களுக்கு முன்புதான், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த ஜிஎஸ்டி மாற்றங்கள், இந்தியாவின் வளர்ச்சிக் கதைக்குப் புதிய சிறகுகளை வழங்கும் கட்டமைப்புச் சீர்திருத்தங்களாகும். இந்தச் சீர்திருத்தங்கள் ஜிஎஸ்டி பதிவை எளிதாக்கும், வரித் தகராறுகளைக் குறைக்கும், மேலும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கான பணத்தைத் திரும்பப் பெறுவதை விரைவுபடுத்தும். இதனால் ஒவ்வொரு துறையும் பயனடையும். நீங்கள் அனைவரும் ஜிஎஸ்டி-யின் மூன்று சூழ்நிலைகளையும் அனுபவித்திருக்கிறீர்கள்: ஜிஎஸ்டிக்கு முன், ஜிஎஸ்டிக்குப் பின், இப்போது மூன்றாவது கட்டமான அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள். சில உதாரணங்கள் மூலம் எவ்வளவு பெரிய வித்தியாசம் வந்துள்ளது என்பதை நான் உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். 2014-க்கு முன், அதாவது நீங்கள் எனக்குப் பொறுப்பு கொடுப்பதற்கு முன் இருந்த நிலை பற்றிப் பேசுகிறேன். 2014-க்கு முன், பல வரிகள் இருந்தன, ஒரு வகையான வரிச் சிக்கல் இருந்தது, அதனால்தான் வணிகச் செலவுகளும் குடும்ப வரவுசெலவுகளும் ஒருபோதும் சமநிலையில் இருந்ததில்லை; அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. ரூ. 1000 மதிப்புள்ள சட்டைக்கு, நான் 2014-க்கு முன் உள்ளதைப் பற்றிப் பேசுகிறேன், உங்களிடம் பழைய பில் ஏதேனும் இருந்தால், அதை எடுத்துப் பாருங்கள், 2014-க்கு முன், ரூ.1000 மதிப்புள்ள சட்டைக்கு ரூ.170 வரி விதிக்கப்பட்டது. 2017-ல் நாங்கள் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியதற்குப் பின், ஜிஎஸ்டி விகிதம் ரூ.170-லிருந்து ரூ.50-ஆக குறைக்கப்பட்டது. அதாவது, முன்பு ரூ.1000 மதிப்புள்ள சட்டைக்கு வரி ரூ.170 ஆக இருந்தது, 2017-இல் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியபோது அது ரூ.50 ஆக மாறியது. மேலும், இப்போது செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட விகிதங்களுக்குப் பிறகு, அதே ரூ.1000 மதிப்புள்ள சட்டைக்கு வரித் தொகையாக ரூ.35 மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.

நண்பர்களே, 2014-ல், யாராவது பல் துலக்கும் பேஸ்ட், ஷாம்பு, தலை முடி எண்ணெய், ஷேவிங் கிரீம் போன்றவற்றுக்காக ரூ.100 செலவழித்தால், அவர்கள் ரூ.31 வரி செலுத்த வேண்டியிருந்தது, அதாவது ரூ.100-க்கு ரூ.31. இதன் பொருள் ரூ.100-க்கான பில் ரூ.131-ஆக வரும். இது 2014-க்கு முந்தைய காலகட்டம் பற்றி நான் பேசுகிறேன். 2017-இல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதே ரூ.100 மதிப்புள்ள பொருள் ரூ.131-லிருந்து ரூ.118-ஆக மாறியது. அதாவது, ஒவ்வொரு 100 ரூபாய் பில்லிலும் நேரடியாக ரூ.13 சேமிப்பு. இப்போது, அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி-ல், அதாவது இந்தக் காலத்தில் நடந்த ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில், இந்த பொருட்களின் விலை ரூ.100-க்கு ரூ.5 வரி மட்டுமே, ஆக ரூ.105 ஆகிறது. ரூ.131-லிருந்து ரூ.105. அதாவது, 2014-க்கு முன் இருந்ததை ஒப்பிடும்போது சாதாரண குடிமகனுக்கு ஒவ்வொரு ரூ.100-க்கும் நேரடியாக ரூ.26 சேமிப்பு, ஒவ்வொரு ரூ.100-க்கும் ரூ.26 சேமிப்பு. இந்த உதாரணத்திலிருந்து ஒரு சராசரி குடும்பம் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு சேமிக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஒரு குடும்பம் தங்கள் தேவைகளுக்காகச் செய்யும் வருடாந்தரச் செலவுகளைக் கணக்கிட்டால், அவர்கள் 2014-க்கு முன் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கியிருந்தால், அவர்கள் தோராயமாக ரூ.25,000 வரி செலுத்த வேண்டியிருந்தது. நான் முன், 2014-க்கு முன் ஒரு வருடத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கினால், வரி ரூ.25,000. ஆனால் இப்போது அடுத்த தலைமுறை ஜிஎஸ்டிக்குப் பிறகு, அதே குடும்பத்தின் ஆண்டு வரி வெறும் ரூ.25,000-லிருந்து சுமார் ரூ.5,000-6,000-ஆகக் குறைந்துள்ளது. ரூ.25,000-லிருந்து ரூ.5,000 ஆக, ஏனெனில் இப்போது அத்தியாவசியப் பொருட்களில் பெரும்பாலானவற்றிற்கு ஐந்து சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி உள்ளது.

நண்பர்களே, நமது கிராமப்புற பொருளாதாரத்தில் டிராக்டர்கள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. 2014-க்கு முன், ஒரு டிராக்டர் வாங்குவதற்கு எழுபதாயிரம் ரூபாய்க்கு மேல் வரி செலுத்த வேண்டியிருந்தது. இது 2014-க்கு முன் எழுபதாயிரம் ரூபாயாக இருந்தது, இப்போது அதே டிராக்டருக்கு முப்பதாயிரம் ரூபாய் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. அதாவது, ஒரு டிராக்டரில் விவசாயி நேரடியாக 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சேமிக்கிறார். அதேபோல, மூன்று சக்கர வாகனங்கள் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பின் ஒரு முக்கிய ஆதாரமாகும். 2014-ம் ஆண்டுக்கு முன், ஒரு மூன்று சக்கர வாகனத்திற்கு ரூ.55,000 வரி விதிக்கப்பட்டது. இப்போது அதே மூன்று சக்கர வாகனத்தின் ஜிஎஸ்டி சுமார் 35 ஆயிரமாகக் குறைந்துள்ளது, அதாவது ரூ.20,000 நேரடியாகச் சேமிக்கப்பட்டுள்ளது. அதேபோல, குறைந்த ஜிஎஸ்டி காரணமாக, ஸ்கூட்டர்கள் 2014-ஐ விடச் சுமார் ரூ.8,000 மலிவாகவும், மோட்டார் சைக்கிள்கள் சுமார் ரூ.9,000 மலிவாகவும் மாறியுள்ளன. இதன் பொருள், ஏழைகள், புதிய நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் என அனைவருக்கும் சேமிப்புகள் கிடைத்துள்ளன.

ஆனால் நண்பர்களே,

இருந்தபோதிலும், சில அரசியல் கட்சிகள் நாட்டின் மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன. 2014-க்கு முன் தாங்கள் நடத்திய அரசின் தோல்விகளை மறைப்பதற்காக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மக்களிடம் பொய் சொல்கின்றன. உண்மை என்னவென்றால், காங்கிரஸ் அரசின் போது, வரி ஏய்ப்பு அதிகமாக இருந்தது. நாட்டின் சாதாரண குடிமகன் வரிகளின் சுமையால் நசுக்கப்பட்டு வந்தான். நமது அரசு பெரிய அளவில் வரிகளைக் குறைத்துள்ளது மற்றும் பணவீக்கத்தைக் குறைத்துள்ளது. நாம் இந்த நாட்டின் மக்களின் வருமானத்தை அதிகரித்துள்ளோம், மேலும் அவர்களின் சேமிப்பையும் அதிகரித்துள்ளோம். 2014-ல் அவர்களின் அரசாங்கம் அதிகாரத்தில் இருந்தபோது, வருமான வரி விலக்கு ரூ.2 லட்சம் வரையிலான வருமானத்திற்கு மட்டுமே இருந்தது, வெறும் ரூ.2 லட்சம். இன்று, ரூ.12 லட்சம் வருமானத்திற்கு வரி விலக்கு அளிப்பதன் மூலமும், புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் மூலமும், இந்த ஆண்டு நாட்டின் மக்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்கப்படவுள்ளது. அதனால்தான் இன்று நாடு ஜிஎஸ்டியைப் பெருமையுடன் கொண்டாடுகிறது. ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழா கொண்டாடப்படுகிறது. மேலும், நாங்கள் இத்துடன் நின்றுவிடப் போவதில்லை என்று நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 2017-ல் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தினோம், பொருளாதாரத்தை வலுப்படுத்தப் பணியாற்றினோம். மேலும் 2025-ல் அதை மீண்டும் கொண்டு வருகிறோம், பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம், பொருளாதாரம் வலுப்பெறும்போது, வரிச் சுமை குறையும். நமது நாட்டு மக்களின் ஆசீர்வாதத்துடன், ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் செயல்முறை தொடரும்.

நண்பர்களே, இன்று இந்தியா சீர்திருத்தங்களுக்கான வலுவான விருப்ப சக்தியையும் ஜனநாயக மற்றும் அரசியல் நிலைத்தன்மையையும், கொள்கை முன்கணிப்புத் தன்மையையும் கொண்டுள்ளது. மிக முக்கியமாக, இந்தியா ஒரு மிக பெரிய இளைஞர்கள் மற்றும் திறமையான தொழிலாளர் படையையும் மற்றும் மாறும் இளம் நுகர்வோர் தளத்தையும்  கொண்டுள்ளது. இந்த விஷயங்கள் அனைத்தும் உலகில் உள்ள எந்தப் பிராந்தியத்திலும், அதாவது ஒரே இடத்தில், உலகில் உள்ள எந்த நாட்டிலும் ஒன்றாக இல்லை. இந்தியா எல்லாவற்றையும் கொண்டுள்ளது. தங்கள் வளர்ச்சியை விரைவுபடுத்த விரும்பும் உலகில் உள்ள எந்தவொரு முதலீட்டாளர் அல்லது நிறுவனத்திற்கும், இந்தியாவில் முதலீடு செய்வது ஒரு சிறந்த வாய்ப்பாகும். எனவே, இந்தியாவில், உத்தரப் பிரதேசத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு  வெற்றிக்கான சூழ்நிலை ஆகும். நமது முயற்சிகள் இணைந்து ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவையும் ஒரு வளர்ச்சியடைந்த உத்தரப் பிரதேசத்தையும் கட்டமைக்கும். சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கு மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.

***

(Release ID: 2171065)
SS/VK/PD


(रिलीज़ आईडी: 2212404) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam