உரங்கள் துறை
சவால்களுக்கு இடையிலும், தடையற்ற உர விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் திரு ஜே.பி. நட்டா
प्रविष्टि तिथि:
03 JAN 2026 6:19PM by PIB Chennai
விவசாயிகளை மையமாகக் கொண்டு கொள்கைகளை செயல்படுத்துதல், உரங்கள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்தல், மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, உரத் துறை இன்று (03.01.2026) புதுதில்லியில் சிந்தனை அரங்க விவாத நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் ஆகியோர் பங்கேற்றனர். மத்திய உரத்துறை அதிகாரிகள், மாநில அரசுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள்,உரத் தொழில்துறை பிரதிநிதிகள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உரத்துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா, பிரதமர் திரு நரேந்திர மோடி எப்போதும் விவசாயிகளை ஆட்சியின் மையமாக வைத்து செயல்படுவதாகக் கூறினார். அரசின் கொள்கைகளும் முடிவுகளும் விவசாயிகளின் வாழ்க்கையை எளிதாகவும் சிறப்பாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். உலக அளவில் பல்வேறு சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், விவசாயிகளின் உரத் தேவைகளை இந்தத் துறை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து வருகிறது என்று திரு நட்டா குறிப்பிட்டார். உரத் துறையால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, இந்த ஆண்டு நம் நாடு சாதனை அளவில் வேளாண் உற்பத்தியை எட்டியுள்ளது என்று அவர் எடுத்துரைத்தார்.
உலக நாடுகளில் உணவுப் பொருட்களின் மையமாக இந்தியா மாற வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் உரத் துறை செயலாற்றி வருவதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் குறிப்பிட்டார். இந்த சிந்தனை அரங்கத்தில் உரத்துறை தொடர்பான சிறந்த யோசனைகள் பரிமாறிக் கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
இந்த சிந்தனை அரங்க அமர்வில், அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் என அனைத்தும் இணைந்து விவசாயிகளை மையமாகக் கொண்ட செயல்பாடுகள் விவாதித்துள்ளதாக உரத் துறைச் செயலாளர் திரு ரஜத் குமார் மிஸ்ரா தெரிவித்தார். கூட்டு ஆலோசனைகளில் இருந்து சிறந்த முடிவுகள் கிடைக்கும் என்று அவர் கூறினார்.
புது தில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் நடைபெற்ற இந்த ஒரு நாள் நிகழ்வில், 15 வெவ்வேறு குழுக்கள் விரிவான ஆலோசனைகளில் ஈடுபட்டு அரசுக்குப் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கின. மத்திய அமைச்சர், இணையமைச்சர், உரத் துறைச் செயலாளர் ஆகியோர் ஒவ்வொரு குழுவுடனும் தனித்தனியாக அமர்ந்து அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டனர்.
(Release ID: 2211114)
****
AD/PLM/SH
(रिलीज़ आईडी: 2211175)
आगंतुक पटल : 16