பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய-சவுதி அரேபியா உத்திசார் கூட்டுக்குழுவின் முதல் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 11 SEP 2023 3:34PM by PIB Chennai

மாண்புமிகு பட்டத்து இளவரசர் அவர்களே,

இரு நாடுகளின் மதிப்புமிக்க பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே!

இன்று நடைபெறும் இந்திய-சவுதி அரேபிய உத்திசார் கூட்டாண்மைக் குழுவின்  தலைவர்கள் இடையேயான முதல் கூட்டத்தில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

2019-ம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு நான் சென்றிருந்தபோது, இந்த கவுன்சில் நிறுவப்பட்டதாக நாங்கள் அறிவித்திருந்தோம்.

கடந்த நான்கு ஆண்டுகளில், இது நமது உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு பயனுள்ள கருவியாக உருவெடுத்துள்ளது.

இந்தக் குழுவின் கட்டமைப்பின் கீழ்பல்வேறு கூட்டங்கள் நடந்துள்ளன, அவை அனைத்துத் துறைகளிலும் எங்கள் ஒத்துழைப்பைத் தொடர்ந்து மேம்படுத்தியுள்ளன என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

வளர்ந்து வரும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, எங்கள் உறவுக்கு புதிய மற்றும் நவீன பரிமாணங்களைச் சேர்த்து வருகிறோம்.

பாரதத்தைப் பொறுத்தவரை, சவுதி அரேபியா எங்கள் மிக முக்கியமான உத்திசார் நட்பு நாடுகளில் ஒன்றாகும்.

உலகின் இரண்டு பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களாக, முழு பிராந்தியத்திலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எங்கள் பரஸ்பர ஒத்துழைப்பு மிக முக்கியமானது.

மேதகு பட்டத்து இளவரசருடனான எனது சந்திப்பில், எங்கள் நெருங்கிய கூட்டாண்மையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல பல முயற்சிகளை நாங்கள் அடையாளம் கண்டோம்.

இன்றைய சந்திப்பு எங்கள் உறவுகளுக்கு புதிய ஆற்றலையும்  பாதையையும் வழங்கும். மேலும், மனிதகுலத்தின் நலனுக்காக தொடர்ந்து இணைந்து பணியாற்ற எங்களுக்கு ஊக்கமளிக்கும்.

இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே ஒரு பொருளாதார வழித்தடத்தை நிறுவுவதில் ஒரு வரலாற்று தொடக்கத்தை நேற்று கூட்டாக மேற்கொண்டோம்.

இந்த வழித்தடம் நமது இரு நாடுகளையும் இணைப்பது மட்டுமல்லாமல், ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே பொருளாதார ஒத்துழைப்பு, எரிசக்தி மேம்பாடு மற்றும் டிஜிட்டல் இணைப்பையும் வலுப்படுத்தும்.

மேதகு பட்டத்து இளவரசர் அவர்களே, உங்கள் தலைமையின் கீழும், 2030-ம் ஆண்டுக்கான உங்கள் தொலைநோக்குப் பார்வை மூலமாகவும் சவுதி அரேபியா பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை அடைந்து வரும் குறிப்பிடத்தக்க வேகத்திற்காக நான் உங்களை மனதார வாழ்த்துகிறேன்.

சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களின் நலன்களைப்  பாதுகாப்பதில் நீங்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

பாரதத்திற்கும், சவுதி அரேபியாவிற்கும் இடையிலான நட்புறவு பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மை, செழிப்பு மற்றும் மனித நலனுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

மீண்டும் ஒருமுறை, ஜி-20 உச்சிமாநாட்டின் வெற்றிக்கு உங்கள் மதிப்புமிக்க பங்களிப்பிற்காக  உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடக்க உரையை வழங்குமாறு மேதகு பட்டத்து இளவரசரை  நான் அழைக்கிறேன்.

***

(Release ID 1956318)

SS/BR/EA


(रिलीज़ आईडी: 2206483) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam