PIB Headquarters
azadi ka amrit mahotsav

ஸ்ரீ ராமர் கோயிலின் கதை பழமையான புராண காலத்திலிருந்து மரபு வரை

Posted On: 24 NOV 2025 12:18PM by PIB Chennai

"இந்த பிரமாண்டமான ராமர் கோயில், இந்தியாவின் மலர்ச்சிக்கும் , எழுச்சிக்கும் சான்றாக உள்ளது. இந்த பிரமாண்டமான ராமர் கோயில், இந்தியாவின் வளமைக்கும், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கும் சான்றாக உள்ளது."

– பிரதமர் திரு நரேந்திர மோடி (அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் பிரதிஷ்டை விழாவில், ஜனவரி 22, 2024 அன்று கூறியது)

அறிமுகம்

பழமையான நகரமான அயோத்தியின் மீது விடியலின் முதலாவது சூரியக் கதிர்கள் பரவும்போது, அவை மணற்கல் தூண்களையும், செதுக்கப்பட்ட கோயில் விமானங்களையும் விட மேலான ஒன்றைப் பிரகாசமாக்குகின்றன. பல நூற்றாண்டுகளாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் கலாச்சார ஆன்மா குறித்த கதையை அவை வெளிப்படுத்துகின்றன. தற்போது முழுமையான பிரமாண்டத்துடன் உயர்ந்து நிற்கும் ராமர் கோயில், ஒரு கட்டிடக்கலையின் அதிசயமாக மட்டுமின்றி, நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டின் உச்சமாக அமைந்துள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு, அயோத்தி எப்போதும் ராமர் பிறந்த இடமாகவே கருதப்படுகிறது. இந்த புனிதமான பிறப்பிடத்தைக் குறிக்கும் ஒரு கோயில் என்ற எண்ணம், இந்தியாவின் கலாச்சார அடையாளத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. இது உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கு ஓர் ஆன்மீக வழிகாட்டியாக இந்தத் தலத்தை உருவாக்கியுள்ளது.

நவம்பர் 25, 2025 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி 22 அடி உயரமுள்ள ஒரு தர்மக்  கொடியை ஏற்றி வைத்து, புனிதமான இந்து மதச் சடங்காகக் கருதப்படும் "துவஜ ஆரோஹணம்" என்ற பூஜையை செய்கிறார். சாஸ்திர மரபில், கொடி ஏற்றுவது என்ற நிகழ்வு, அதர்மத்திற்கு எதிராக   தர்மத்தின் வெற்றியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அத்துடன், உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க இது ஒரு வெளிப்படையான அழைப்பாகவும் அமைந்துள்ளது.

ஒரு சுருக்கமான வரலாற்றுப் பின்னணி

இந்த பின்னணியில், ஆழமான நம்பிக்கை, நாகரிக வெற்றிக்கதைகளின் நினைவுகள், அத்துடன் சட்டத்தின் ஆட்சிமுறை வாயிலான வரலாற்று சிறப்புமிக்க வகையில், நீதியை மீட்டெடுத்தல் போன்ற கதைகள் அடங்கியுள்ளன.

அயோத்தியில் உள்ள ராம ஜன்மபூமி கோயில் குறித்த சரித்திர பயணம், இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் மூலம் தீர்வு காணப்பட்ட ஒரு நீண்ட சட்ட மற்றும் கலாச்சார சாதனையின் உச்சத்தை குறிக்கிறது. நவம்பர் 9, 2019 அன்று, இந்திய உச்ச நீதிமன்றம் ஒருமனதாக வழங்கிய  வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், ராமர் கோயில் கட்டுவதற்காக 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலம் முழுவதையும் அளித்தது. இது உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கு அந்த இடத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதாக அமைந்திருந்தது. நீதி, நல்லிணக்கம், அரசியலமைப்புக் கொள்கைகளுக்கான வெற்றியின் அடையாளமாக இந்த முடிவு கொண்டாடப்பட்டது. இதன் மூலம், பிப்ரவரி 5, 2020 அன்று மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டு, ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் மேற்பார்வையில், கோயில் கட்டுமானத்திற்கான வழி பிறந்தது.

இந்தக் கோயில் கட்டுமானத்திற்கானப் பணிகள் ஆகஸ்ட் 5, 2020 அன்று தொடங்கியது. பிரதமர் திரு நரேந்திர மோடி, அங்கு பூமி பூஜை செய்து, கோயில் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டினார். பல நூற்றாண்டுகால எதிர்பார்ப்பின் முடிவை, இந்த நிகழ்வு குறிப்பதாக உள்ளது என்று பிரதமர் அப்போது தெரிவித்திருந்தார். மேலும், இந்தக் கோயில் எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளிப்பதாக அமையும் என்றும், மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகள் மூலம் பிராந்திய வளர்ச்சியை அதிகரிக்க உதவிடும் என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193420 

***

SS/SV/SH


(Release ID: 2193734) Visitor Counter : 3