பிரதமர் அலுவலகம்
ஜி20 உச்சிமாநாட்டின் முதல் அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
22 NOV 2025 4:36PM by PIB Chennai
மேன்மை தங்கிய தலைவர்களே,
வணக்கம்!
இந்த ஜி20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கும், வெற்றிகரமான தலைமைத்துவத்திற்கும் இந்த ஆண்டு தலைமைத்துவம் வகிக்கும் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் திரு ரமபோசாவுக்கும் எனது வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்னாப்பிரிக்காவின் தலைமையின் கீழ், சுற்றுலா, உணவுப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொருளாதாரம், புதுமைக் கண்டுபிடிப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற முக்கிய துறைகளில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
புதுதில்லி ஜி20 உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
நண்பர்களே,
கடந்த பல ஆண்டுகளாக, ஜி20 அமைப்பு, உலகளாவிய நிதி ஸ்திரத்தன்மைக்கும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகாட்டியுள்ளது. இருப்பினும், உலகம் பெரும்பகுதி வளங்களை இழந்துவிட்டது. இயற்கை அதிகமாக சுரண்டப்பட்டுள்ளது. இந்த விளைவுகளால் ஆப்பிரிக்கா மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இப்போது, ஆப்பிரிக்கா முதல்முறையாக ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் நிலையில், வளர்ச்சியின் அளவுகோல்களை மறுபரிசீலனை செய்வது இன்றியமையாதது.
இந்தியாவின் நாகரிக மதிப்புகளில் ஒரு பாதையாக, மனிதநேயத்தின் பாதை உள்ளது. இந்த அணுகுமுறை தனிநபர், சமூகம், இயற்கை ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்க நம்மை அழைக்கிறது. அப்போதுதான் முன்னேற்றத்திற்கும் இயற்கைப் பாதுகாப்புக்கும் இடையே உண்மையான இணக்கத்தை அடைய முடியும்.
நண்பர்களே,
உலகம் முழுவதும், தங்கள் பாரம்பரிய, சுற்றுச்சூழல் சமநிலை வாழ்க்கை முறைகளைப் பாதுகாத்து வரும் பல சமூகங்கள் உள்ளன. இந்த மரபுகள் நிலைத்தன்மையை மட்டுமல்லாமல், ஆழ்ந்த கலாச்சார ஞானம், சமூக ஒற்றுமை, இயற்கையின் மீதான ஆழ்ந்த மரியாதை ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன.
ஜி20 கூட்டமைப்பின் கீழ் ஒரு உலகளாவிய பாரம்பரிய அறிவு களஞ்சியத்தை உருவாக்க இந்தியா முன்மொழிந்துள்ளது. இந்தியாவின் சொந்த அறிவு அமைப்புகள் அதன் அடித்தளமாக செயல்பட முடியும். இந்த உலகளாவிய தளம் எதிர்கால சந்ததியினருக்கு மனிதகுலத்தின் அறிவைக் கடத்த உதவும்.
நண்பர்களே,
ஆப்பிரிக்காவின் வளர்ச்சியை மேம்படுத்துவதும் அதன் இளைஞர்களின் திறமையை மேம்படுத்துவதும் முழு உலகத்தின் நலனுக்கானது ஆகும். எனவே, 'ஜி20–ஆப்பிரிக்கா திறன் பெருக்க முயற்சி' என்ற முயற்சியை இந்தியா முன்மொழிகிறது. இந்த முயற்சியில் ஆப்பிரிக்காவுக்குப் பல்வேறு துறைகளில் பயிற்சி அளிக்க முடியும். அனைத்து ஜி20 நாடுகளும் இந்த முயற்சிக்கு நிதியளித்து ஆதரிக்க முடியும்.
அடுத்த பத்து ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் 10 லட்சம் சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர்களை உருவாக்குவதே எங்கள் இலக்கு. இந்த பயிற்சியாளர்கள், அடுத்து பல இளைஞர்களை தயார்படுத்த உதவுவார்கள். இந்த முயற்சி ஒரு சக்திவாய்ந்த விளைவை ஏற்படுத்தும். இது உள்ளூர் திறனை வலுப்படுத்துவதுடன் ஆப்பிரிக்காவின் நீண்டகால வளர்ச்சிக்குக் கணிசமாக பங்களிக்கும்.
நண்பர்களே,
சுகாதார அவசரநிலைகள், இயற்கை பேரிடர்கள் ஆகியவற்றைச் சமாளிப்பது நமது கூட்டுப் பொறுப்பாகும். எனவே, ஜி20 உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு குழுவை நிறுவ இந்தியா முன்மொழிகிறது. இந்தக் குழுவில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்கள் இருப்பார்கள். மேலும் எந்தவொரு உலகளாவிய சுகாதார நெருக்கடி அல்லது இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும் விரைவாக ஆதரவு அளிக்க அவர்கள் தயாராக இருப்பார்கள்.
நண்பர்களே,
மற்றொரு முக்கியமான பிரச்சினை போதைப்பொருள் கடத்தல் ஆகும். குறிப்பாக ஃபென்டானைல் போன்ற மிகவும் ஆபத்தான பொருட்களின் விரைவான பரவலைத் தடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினை பொது சுகாதாரம், சமூக ஸ்திரத்தன்மை, உலகளாவிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஒரு கடுமையான சவாலாக உருவெடுத்துள்ளது. பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க வழியாகவும் இது செயல்படுகிறது.
இந்த உலகளாவிய அச்சுறுத்தலை திறம்பட எதிர்கொள்ள, போதைப்பொருள்-பயங்கரவாத தொடர்புகளை எதிர்கொள்வதற்கான ஜி20 கூட்டு முன்முயற்சியை இந்தியா முன்மொழிகிறது. இந்த முயற்சியின் கீழ், நிதி, நிர்வாகம், பாதுகாப்பு ஆகியவை தொடர்பான பல்வேறு அம்சங்களை நாம் ஒன்றிணைக்க முடியும். அப்போதுதான் போதைப்பொருள்-பயங்கரவாத அச்சுறுத்தல்களைத் திறம்படக் கட்டுப்படுத்த முடியும்.
நண்பர்களே,
இந்தியா-ஆப்பிரிக்கா ஒற்றுமை எப்போதும் வலுவாக இருந்து வருகிறது. புதுதில்லி ஜி20 உச்சிமாநாட்டின் போது, ஆப்பிரிக்க யூனியன் இந்தக் குழுவில் நிரந்தர உறுப்பினராக மாறியது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும். இந்த ஒத்துழைப்பு உணர்வு ஜி20 க்கு அப்பால் தொடர்வது அவசியம். வளரும் நாடுகளின் (உலகளாவிய தெற்கு நாடுகள்) குரல் அனைத்து உலகளாவிய நிறுவனங்களிலும் ஒலிப்பதையும் வலுப்படுத்தப்படுவதையும் உறுதிசெய்ய நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மிக்க நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழி பெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
***
(Release ID: 2192878)
AD/PLM/RJ
(Release ID: 2193170)
Visitor Counter : 8
Read this release in:
English
,
हिन्दी
,
Gujarati
,
Urdu
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Kannada
,
Malayalam