நிதி அமைச்சகம்
ரூ.645 கோடி போலி உள்ளீட்டு வரிக் கடன் மோசடி: முக்கிய நிர்வாகி கைது
Posted On:
13 NOV 2025 6:46PM by PIB Chennai
சரக்கு மற்றும் சேவை வரி நுண்ணறிவு இயக்குநரகம், தில்லி மண்டலப் பிரிவு, ஒரு பெரிய மோசடியைக் கண்டுபிடித்துள்ளது. தில்லியைச் சேர்ந்த ஒரு சிண்டிகேட் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்பட்ட 229 போலி ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் வலைப்பின்னல் வழியாக, சுமார் ரூ.645 கோடி மதிப்புள்ள உள்ளீட்டு வரிக் கடன் மோசடியாகப் பெறப்பட்டுப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நம்பகமான உளவுத் தகவலின் அடிப்படையில், நுண்ணறிவு இயக்குநரக அதிகாரிகள் தில்லியில் உள்ள பல வளாகங்களில் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அங்கு, பொருட்கள் அல்லது சேவைகளை உண்மையில் வழங்காமலேயே போலி ரசீதுகளை வழங்கிய நிறுவனங்களின் செயல்பாடுகளை உறுதிப்படுத்தும் பல ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் லெட்ஜர்கள் கைப்பற்றப்பட்டன. இதில் ஜிஎஸ்டி/வங்கித் தேவைகளுக்கான ஓடிபி-களைப் பெறப் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய 162 மொபைல் போன்கள், 44 டிஜிட்டல் கையொப்பங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட காசோலை புத்தகங்கள் ஆகியவை அடங்கும்.
இந்த போலி நிறுவனங்கள், எந்தவொரு உண்மையான பொருட்கள் அல்லது சேவைகளை வழங்காமல் ரசீதுகளை வழங்கியதன் மூலம், சுமார் ரூ.645 கோடி மதிப்பிலான தகுதியற்ற உள்ளீட்டு வரிக் கடனை மோசடியாகப் பரிமாறி, அரசு கருவூலத்திற்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விசாரணையில், இந்த போலி நிறுவனங்களின் வலையமைப்பை அமைத்துச் செயல்படுத்திய முக்கியக் குற்றவாளியான திரு முகேஷ் சர்மா அடையாளம் காணப்பட்டுள்ளார். போலி நிறுவனங்களின் ஜிஎஸ்டி பதிவுகள், ரிட்டர்ன்கள் மற்றும் பதிவுகளை நிர்வகிப்பது, வங்கிக் கணக்குகளைக் கையாளுவது மற்றும் பல அடுக்குகள் வழியாக சட்டவிரோத நிதியைப் பரிமாற்றம் செய்வது ஆகியவற்றில் இவரது செயல்பாடு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
திரு முகேஷ் சர்மாவின் குற்றங்கள் பிடியாணை இன்றி கைது செய்யக்கூடிய மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்கள் என்பதால், அவர் சிஜிஎஸ்டி சட்டம், 2017 இன் பிரிவு 132(1)(b) மற்றும் 132(1)(c) இன் கீழ் நவம்பர் 11, 2025 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த மோசடியில் பெறப்பட்ட பணம், ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் ஒரு அரசியல் அமைப்பு மூலம் சுழற்சி செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
***
SS/VK/SH
(Release ID: 2189874)
Visitor Counter : 6