ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

6-வது தேசிய நீர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன: தமிழ்நாட்டிற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளன

இந்த விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு நவம்பர் 18 அன்று வழங்குவார்

Posted On: 11 NOV 2025 1:50PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல், 6-வது தேசிய நீர் விருதுகள் பெறுவோரின் பட்டியலை வெளியிட்டார். 2024-ம் ஆண்டுக்கான இந்த விருதுகள், சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த ஊராட்சி, சிறந்த உள்ளாட்சி அமைப்பு, சிறந்த பள்ளி அல்லது கல்லூரி, சிறந்த தொழிற்சாலை, சிறந்த நீர்நிலைப் பயன்பாட்டாளர் சங்கம், சிறந்த நிறுவனம் (பள்ளி அல்லது கல்லூரி அல்லாத), சிறந்த சிவில் சமூகம், சிறந்த தனிநபர் என பத்து வகைகளில் வழங்கப்படுகின்றன.

விருதுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடும் நிகழ்ச்சியில், மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் திரு ராஜ்பூஷன் சவுத்ரி, நீர்வளத்துறை செயலாளர் திரு வி எல் காந்தாராவ், குடிநீர் மற்றும் துப்புரவுத்துறைச் செயலாளர் திரு அசோக் கே கே மீனா மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

சிறந்த மாநிலம் என்ற வகையில், மகாராஷ்டிரா முதல் பரிசையும், குஜராத் இரண்டாம் பரிசையும், அரியானா மூன்றாம் பரிசையும் பெறுகின்றன.

சிறந்த மாவட்டங்கள் பிரிவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலியும், சிறந்த கிராமங்கள் பிரிவில் திருவள்ளூர் மாவட்டம் பாலாபுரமும், சிறந்த நீர் பயன்பாட்டாளர் சங்கம் பிரிவில், கோயம்புத்தூரில் உள்ள வேட்டைக்காரன்புதூர் ஓடையகுளம் கிராமமும், சிறந்த தொழிற்சாலைப் பிரிவில் காஞ்சிபுரத்தில் உள்ள அப்போலோ டயர்ஸ் நிறுவனமும் விருது பெறுகின்றன.

விருது பெறும் ஒவ்வொருவருக்கும் பாராட்டுப் பத்திரமும், கோப்பையும் குறிப்பிட்ட வகைமைக்கு ஏற்ப  ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, புதுதில்லி விஞ்ஞான் பவனில் 2025 நவம்பர் 18 அன்று நடைபெறும். இந்த நிகழ்ச்சியில், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, தலைமை விருந்தினராக பங்கேற்று விருதுகளை வழங்குவார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188704

***

SS/SMB/KPG/KR

 


(Release ID: 2188855) Visitor Counter : 80