குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்றும் அடித்தள ஜனநாயகத்தின் முன்மாதிரியாக ‘லட்சாதிபதி சகோதரி ’ முன்முயற்சி உள்ளது என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டினார்

Posted On: 05 NOV 2025 6:19PM by PIB Chennai

சத்தீஷ்கரின் ராஜ்நந்த்கானில் இன்று நடைபெற்ற "லட்சாதிபதி சகோதரி சம்மேளனத்தில்" குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

இதில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய அவர், லட்சாதிபதி சகோதரி முன்முயற்சி, இந்தியப் பெண்களின் வலிமை மற்றும் உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பு என்று பாராட்டினார்.

சவால்களை வாய்ப்புகளாக மாற்றும் பெண்களின் - சகோதரிகளின் - உறுதியை இந்த முன்முயற்சி பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். "லட்சாதிபதி சகோதரி" என்ற சொல் வருவாய் பற்றியது மட்டுமல்ல, சுதந்திரம், கண்ணியம் மற்றும் நம்பிக்கையை உள்ளடக்கியது என்று அவர் குறிப்பிட்டார்.

கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் ஒற்றுமை எவ்வாறு வாழ்க்கையை மாற்றும் என்பதை இந்தியா முழுவதும், பெண்கள் தலைமையில் உள்ள  ஆயிரக்கணக்கான சுய உதவிக் குழுக்கள் நிரூபித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்தப் பெண்களின் சாதனைகள் கிராமப்புற இந்தியாவின் முதுகெலும்பான இந்திய சகோதரிகளின் மாற்றும் சக்தியை எடுத்துக்காட்டுகின்றன என்று குடியரசு துணைத்தலைவர் உறுதிபட தெரிவித்தார்.

அரசின் முன்முயற்சிகளைப் பாராட்டிய அவர், மூன்று கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியைக் கட்டமைப்பதற்கான நடவடிக்கையாகும். இது சத்தீஷ்கரில் தெளிவான வெளிப்பாட்டைக் காணும் ஒரு இயக்கம் என்றார்.

இதுபோன்ற முயற்சிகள் பெண்கள் வீடுகளுக்குள் தங்களை அடைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை மாற்றியுள்ளன என்றும்,  அவர்கள் இன்று நிர்வாகிகளாக உருவாகி, பொருளாதார சுதந்திரத்தை அடைந்து, எதிர்காலத் தலைவர்களை ஊக்குவிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

அண்மையில் உலகக் கோப்பையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின்  வெற்றியைக் குறிப்பிட்ட திரு சி.பி.ராதாகிருஷ்ணன், சத்தீஷ்கர் பெண்கள் தலைமையிலான சமூக மாற்றத்தை இதனுடன் ஒப்பிட்டு ஊக்கபடுத்தினார். அவர்களின் தைரியம், உறுதி மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கான பங்களிப்புக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

சத்தீஷ்கர் ஆளுநர் திரு ராமன் தேகா; முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய்; சத்தீஷ்கர் சட்டப்பேரவைத் தலைவர் டாக்டர் ரமன் சிங் ஆகியோர் ராஜ்நந்த்கானில் நடந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

முன்னதாக சத்தீஷ்கர் மாநிலம் உருவாக்கப்பட்ட 25-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நவ ராய்ப்பூரில் நடைபெற்ற இந்திய விமானப்படையின்  புகழ்பெற்ற சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழுவின் கண்கவர் விமான சாகச நிகழ்ச்சியையும் குடியரசு துணைத்தலைவர் கண்டுகளித்தார். திறமை மற்றும் துல்லியத்தின் மெய்சிலிர்க்கும் காட்சி தேசபக்தி சூழலை அதிகரித்து, பார்வையாளர்களைக் கவர்ந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186687

****

AD/SMB/SH


(Release ID: 2186716) Visitor Counter : 11