பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மும்பையில் இந்திய கடல்சார் வாரம் 2025-ல், கடல்சார் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்

இந்தியாவின் கடல்சார் துறை, அதிக வேகத்துடனும், ஆற்றலுடனும் முன்னேறுகிறது: பிரதமர்

இந்தியாவின் கப்பல் துறையை விரிவுபடுத்துவதற்கு இதுவே சரியான நேரம்: பிரதமர்

உலகளாவிய பதற்றங்கள், வர்த்தக இடையூறுகள் மற்றும் விநியோக சங்கிலி மாற்றங்களுக்கு இடையே, அமைதி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியின் சின்னமாக இந்தியா விளங்குகிறது: பிரதமர்

Posted On: 29 OCT 2025 5:58PM by PIB Chennai

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெறும் இந்திய கடல்சார் வாரம் 2025 இல் கடல்சார் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மேலும் உலகளாவிய கடல்சார் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்ற கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கப்பல் துறை சம்பந்தமான ஏராளமான திட்டங்கள்  விழாவில் தொடங்கப்பட்டிருப்பதுடன், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன என்று கூறினார். இந்தியாவின் கடல்சார் திறன்கள் மீது சர்வதேச நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

“21-வது நூற்றாண்டில் இந்தியாவின் கடல்சார் துறை அதிக வேகத்துடனும், ஆற்றலுடனும் முன்னேறுகிறது”, என்று குறிப்பிட்ட பிரதமர், 2025-ம் ஆண்டு, இந்தத் துறைக்கு மிக முக்கிய வருடமாக அமைந்திருப்பதாகக் கூறி, பல்வேறு முக்கிய சாதனைகளையும் பகிர்ந்து கொண்டார். கடல்சார் துறையில் அடுத்தத் தலைமுறை சீர்திருத்தங்களை நோக்கி இந்த ஆண்டு இந்தியா முக்கிய முன்முயற்சிகளை மேற்கொண்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். “நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த காலனித்துவ காலத்திய கப்பல் துறை சட்டங்கள், நவீன மற்றும் 21-வது நூற்றாண்டிற்கு உகந்த சட்டத்தால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன”, என்று பிரதமர் தெரிவித்தார். இத்தகைய புதிய சட்டங்கள்,மாநில கடல்சார் வாரியங்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்தி,துறைமுக மேலாண்மையில் டிஜிட்டல்மயமாக்கலை விரிவுபடுத்துகிறது என்றார்.

வணிக கப்பல் சட்டத்தின் கீழ், இந்திய சட்டங்கள் உலகளாவிய சர்வதேச விதிகளுடன் இணங்குகின்றன, என்று கூறிய திரு மோடி, இந்த இணக்கத்தால் பாதுகாப்பு தரநிலைகளில் மேம்பட்ட நம்பிக்கை, வர்த்தகம் மேற்கொள்வதை மேலும் எளிதாக்குதல் மற்றும் குறைவான அரசின் தலையீடு ஆகியவை உறுதி செய்யப்படுகின்றன என்று குறிப்பிட்டார். இத்தகைய முன்முயற்சிகள், பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

“கப்பல் கட்டுமானம், இந்தியாவின் முக்கிய முன்னுரிமைகளுள் ஒன்றாக தற்போது விளங்குகிறது”, என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தத் துறையில் இந்தியாவின் பாரம்பரிய முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்த திரு மோடி, ஒரு காலத்தில் கப்பல் கட்டுமானத்தில் முக்கிய உலகளாவிய மையமாக நாடு திகழ்ந்தது என்று குறிப்பிட்டார். பெரிய கப்பல்களுக்கு உள்கட்டமைப்பு சொத்து அந்தஸ்தை இந்தியா வழங்கியுள்ளது என்றும், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து கப்பல் கட்டுமான நிறுவனங்களுக்கும் புதிய பாதைகளுக்கு வித்திடும் ஒரு கொள்கை முடிவு இது, என்றும் அவர் குறிப்பிட்டார். இது புதிய நிதி வாய்ப்புகளை வழங்குவதுடன், வட்டி செலவுகளைக் குறைத்து, கடன் அணுகலை எளிதாக்கும் என்று அவர் தெரிவித்தார். இந்த சீர்திருத்தத்தை முன்னெடுப்பதற்காக, அரசு சுமார் 70,000 கோடி ரூபாயை முதலீடு செய்யும் என்று பிரதமர் அறிவித்தார்.

“இந்தியாவில் உற்பத்தி செய்தல், உலகிற்காக உற்பத்தி செய்தல்” முன்முயற்சியின் கீழ் ஊக்கத்தொகைகள் வழங்கப்படுவதுடன், முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்தியாவின் கப்பல் துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, அதை விரிவுபடுத்துவதற்கு இதுதான் சரியான நேரம் என்று குறிப்பிட்டு, பல்வேறு நாடுகளின் முதலீட்டாளர்கள் இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். உலகளாவிய பதற்றங்கள், வர்த்தக இடையூறுகள் மற்றும் விநியோக சங்கிலி மாற்றங்களுக்கு இடையே, அமைதி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியின் சின்னமாக இந்தியா விளங்குகிறது  என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:  

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183881

(Release ID: 2183881)

***

SS/BR/SH


(Release ID: 2184017) Visitor Counter : 9