பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

22-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டின் போது பிரதமர் ஆற்றிய தொடக்க உரை

Posted On: 26 OCT 2025 4:39PM by PIB Chennai

மேதகு பிரதமரும், எனது நண்பருமான  அன்வர் இப்ராஹிம் அவர்களே,

மேன்மை தங்கிய தலைவர்களே,

வணக்கம்

மீண்டும் ஒருமுறை எனது ஆசியான் குடும்பத்தில் சேர வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆசியானின் வெற்றிகரமான தலைமைத்துவத்திற்காக பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய நாட்டின் ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றதற்காக பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் ஆசியானின் புதிய உறுப்பினராக கிழக்கு தைமூரை நான் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்திய மக்கள் சார்பாக, ராஜ மாதாவின் மறைவுக்கு அரச குடும்பத்தினருக்கும் தாய்லாந்து மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்தியாவும் ஆசியானும் சேர்ந்து உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கைக் குறிக்கின்றன. நாம் புவியியல் ரீதியாக மட்டுமல்லாமல், ஆழமான வரலாற்று உறவுகளாலும் பகிரப்பட்ட மதிப்புகளாலும் பிணைக்கப்பட்டுள்ளோம்.

உலகளாவிய தெற்கில் நாம் கூட்டாளிகள். நாம் வணிக பங்காளிகள் மட்டுமல்ல , கலாச்சாரப் பங்காளிகளும் கூட. ஆசியான், இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் ஒரு மூலக்கல்லாகும். இந்தோ-பசிபிக் பகுதியில் ஆசியான் மையத்தன்மை மற்றும் ஆசியானின் கண்ணோட்டத்தை இந்தியா எப்போதும் முழுமையாக ஆதரித்து வருகிறது.

நிச்சயமற்ற இந்த சகாப்தத்திலும் கூட, இந்தியா-ஆசியான் விரிவான உத்திசார் கூட்டாண்மை தொடர்ந்து நிலையான முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. மேலும் நமது இந்த வலுவான கூட்டாண்மை உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டிற்கான வலுவான அடித்தளமாக உருவாகி வருகிறது.

நண்பர்களே,

இந்த ஆண்டு ஆசியான் உச்சிமாநாட்டின் கருப்பொருள் "உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை." இந்த கருப்பொருள் டிஜிட்டல் உள்ளடக்கமாக இருந்தாலும் சரி அல்லது தற்போதைய உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மீள் விநியோகச் சங்கிலிகளை உறுதி செய்வதாக இருந்தாலும் சரி, நமது கூட்டு முயற்சிகளில் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. இந்தியா இந்த முன்னுரிமைகளை முழுமையாக ஆதரிப்பது மட்டுமின்றி, அவற்றை ஒன்றாக முன்னேற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளது.

நண்பர்களே,

ஒவ்வொரு பேரிடரிலும் இந்தியா தனது ஆசியான் நண்பர்களுடன் உறுதியாக நின்றுள்ளது. மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (எச்ஏடிஆர்), கடல்சார் பாதுகாப்பு மற்றும் நீலப் பொருளாதாரத்தில் நமது ஒத்துழைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, 2026- "ஆசியான்-இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டாக" அறிவிக்கிறோம்.

அதே நேரத்தில், கல்வி, சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம், பசுமை எரிசக்தி மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை சீராக மேம்படுத்தி வருகிறோம். நமது பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்தவும் நாம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டு நமது நூற்றாண்டு, இந்தியா மற்றும் ஆசியானின் நூற்றாண்டு. ஆசியான் சமூக தொலைநோக்கு பார்வை 2045 மற்றும் வளர்ச்சியடைந்த பாரதம் 2047-ன் இலக்கு ஆகியவை அனைத்து மனிதகுலத்திற்கும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் அனைவரையும் தவிர, இந்தத் திசையில் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது.

மிக்க நன்றி.

மறுப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. அசல் உரை  இந்தி மொழியில் வழங்கப்பட்டது.

***

(Release ID: 2182637)

AD/PKV/RJ


(Release ID: 2182714) Visitor Counter : 13