உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
இந்தியா முதன்முறையாக ஆசிய பசிபிக் விபத்து புலனாய்வுக் குழு கூட்டம் மற்றும் பயிலரங்கை நடத்துகிறது
Posted On:
26 OCT 2025 10:55AM by PIB Chennai
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் சார்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பு , நான்கு நாள் ஆசிய பசிபிக் விபத்து புலனாய்வுக் குழு கூட்டத்தையும், பயிலரங்கையும் அக்டோபர் 28-31 வரை நடத்தவுள்ளது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு இந்த நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார்.
ஆசிய பசிபிக் விபத்து புலனாய்வுக் குழு கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மேலும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பான ஐசிஏஓ உறுப்பு நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றன. இந்தக் கூட்டம் பொதுவாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஐசிஏஓ உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒன்றால் நடத்தப்படுகிறது.
இந்தியா முதல் முறையாக இந்தக் கூட்டத்தை நடத்துகிறது. ஆசிய பசிபிக் நாடுகளின் விமான விபத்து புலனாய்வு அதிகாரிகள் மற்றும் ஐசிஏஓ-விலிருந்து சுமார் 90 பிரதிநிதிகள் இதில் பங்கேற்பார்கள்.
செயல்முறைகள் மற்றும் அறிக்கையிடல் உட்பட விமான விபத்து விசாரணைகளின் பல்வேறு அம்சங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும். விபத்து/சம்பவ விசாரணை அதிகாரிகளிடையே நிபுணத்துவம், அனுபவம் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதை ஊக்குவிப்பதையும், ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் விபத்து/சம்பவ விசாரணை திறனை மேம்படுத்துவதற்காக அவர்களிடையே ஒத்துழைப்பை வளர்த்து வலுப்படுத்துவதையும் இந்தக் குழுவின் கூட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
விமான விபத்து விசாரணைகள் தொடர்பான தலைப்புகளை உள்ளடக்கிய இந்தப் பயிலரங்கம் 2025 அக்டோபர் 28-29 தேதிகளில் நடைபெறும். இந்தப் பயிலரங்கில் சர்வதேச பங்கேற்பாளர்களுடன் விமான விபத்து புலனாய்வு பிரிவு (ஏஏஐபி), சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரக (டிஜிசிஏ) அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஐசிஏஓ உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஏஏஐபி அதிகாரிகள் அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கலந்துரையாடல்களை நடத்துவார்கள்.
***
(Release ID: 2182570)
AD/PKV/RJ
(Release ID: 2182602)
Visitor Counter : 10