பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவிமும்பை சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைத்து, மும்பையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

உடான் திட்டத்தினால் கடந்த 10 ஆண்டுகளில் லட்சக்கணக்கான மக்கள் முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்து, தங்கள் கனவுகளை நனவாக்கியுள்ளார்கள்: பிரதமர்

நம் நாடு மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பை விட எங்களுக்கு வேறு எதுவும் முக்கியமல்ல: பிரதமர்

प्रविष्टि तिथि: 08 OCT 2025 5:44PM by PIB Chennai

மகாராஷ்டிராவில், நவிமும்பை சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைத்து, மும்பையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள விமான நிலையம், ஆசியாவின் மிகப்பெரிய இணைப்புக்கான மையங்களில் ஒன்றாக இந்தப் பகுதியை நிலைநிறுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் கூறினார். முழுமையாக நிலத்தடியில் பயணிக்கும் மெட்ரோ சேவையை மும்பை தற்போது பெற்றிருப்பதாகவும், இதன் மூலம் மக்களுக்கு சுமூகமான பயணம் கிடைப்பதுடன், நேரமும் சேமிக்கப்படும் என்று அவர் கூறினார்.

நாட்டின் இளைஞர்களுக்கு அபரிமிதமான வாய்ப்புகளை இந்தியா வழங்குவதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், நாடு முழுவதும் உள்ள தொழில்துறைகளுடன் ஏராளமான தொழிற்பயிற்சி நிறுவனங்களை இணைக்கும் நோக்கத்துடன் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பி எம் சேது திட்டம் பற்றி பேசினார். நூற்றுக்கணக்கான தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பப் பள்ளிகளில் இன்று முதல் புதிய திட்டங்களை மகாராஷ்டிர அரசு அறிமுகப்படுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இத்தகைய முன் முயற்சிகளின் மூலம் ட்ரோன்கள், மின்சார வாகனங்கள், சூரிய சக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்று திரு மோடி தெரிவித்தார்.

“வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இன்று ஒட்டுமொத்த தேசமும் உறுதி பூண்டுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியா என்பது வேகம் மற்றும் முன்னேற்றத்தால் வரையறுக்கப்படுகிறது. அங்கு மக்கள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன், அரசின் திட்டங்கள் குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகின்றன” என்று  பிரதமர் கூறினார். இந்த உணர்வு தான், கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் மூலை முடுக்குகளிலும் கூட வளர்ச்சிக்கான முயற்சிகளை எடுத்துச் செல்ல வழிநடத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

சிறிய நகரங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விமானப் பயணத்திற்கு புதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். சாமானிய மக்களும் அணுகக் கூடிய வகையில் விமானக் கட்டணத்தை வழங்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட உடான் திட்டத்தின் கீழ், கடந்த தசாப்தத்தில், லட்சக்கணக்கான மக்கள் முதன் முறையாக விமானத்தில் பயணம் செய்து தங்களது நீண்ட கால கனவைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார். புதிய விமான நிலையங்களின் கட்டமைப்பும், உடான் திட்டமும் குடிமக்களுக்கு வசதியை ஏற்படுத்தித் தந்திருப்பதுடன், உலகளாவிய உள்நாட்டு விமான சந்தையில் இந்தியா மூன்றாவது இடம் வகிக்க வழிவகை செய்திருக்கிறது என்பதை பெருமிதத்துடன் பிரதமர் குறிப்பிட்டார்.

விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அவற்றின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு செயல்பாடுகளுக்கான தேவையும் அதிகரிப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இதை எதிர்கொள்வதற்கான புதிய மையங்களை இந்தியா உருவாக்கி வருகிறது என்று கூறினார். இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தலின் முக்கிய மையமாக இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். இந்த முன்முயற்சியால் இந்தியாவின் இளைஞர்களுக்கு ஏராளமான புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார். “உலகிலேயே மிகவும் இளமையான நாடாக இந்தியா திகழ்கிறது. அதன் ஆற்றல், நாட்டின் இளைஞர்களை சார்ந்துள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இன்றைய இந்தியா மிகுந்த ஆற்றலுடன் பதிலளிப்பது மட்டுமின்றி, எதிரியின் கூடாரத்திற்குள் நுழைந்து தாக்குதலை நடத்துகிறது என்றும், ஆபரேஷன் சிந்தூரின் போது இதை உலக நாடுகள் உணர்ந்தன என்று கூறிய பிரதமர், “நாடு மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை விட எங்கள் அரசுக்கு வேறு எதுவுமே முக்கியமில்லை”, என்று உறுதிப்பட தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர் திரு ஆச்சாரிய தேவ்ரத், முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய அமைச்சர்கள் திரு ராம்தாஸ் அதவாலே, திரு ராம்மோகன் நாயுடு கிஞ்சரப்பு, திரு முரளிதர் மோஹோல், இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் திரு கெய்ச்சி ஓனோ மற்றும் இதர பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176402

(Release ID: 2176402)

***

SS/BR/SH


(रिलीज़ आईडी: 2176580) आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam