குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2025 6:32PM by PIB Chennai

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

"தேசப்பிதா மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாளில், அனைத்து குடிமக்களின் சார்பாகவும், அவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் லட்சியங்கள் மற்றும் மதிப்புகளுக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள இது ஒரு சந்தர்ப்பம்.

காந்திஜி வழங்கியுள்ள அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் உண்மை தொடர்பான செய்தி, முழு மனிதகுலத்திற்கும் ஒரு உத்வேகமாக உள்ளது. தீண்டாமை, கல்வியறிவின்மை மற்றும் பிற சமூக தீமைகளை ஒழிப்பதற்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அசைக்க முடியாத உறுதியுடன், சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்கு வலிமையையும் ஆதரவையும் வழங்கினார்.

அவரது வாழ்நாள் முழுவதும் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளில் அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் கொண்டிருந்தார், அந்தப் பாதையைப் பின்பற்ற மக்களை ஊக்குவித்தார். தற்சார்பு, தன்னிறைவு மற்றும் கல்வியறிவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, தனது ராட்டை மூலம் தற்சார்பின் செய்தியை வழங்கினார். அவர் எப்போதும் தனது நடத்தை மற்றும் போதனைகள் மூலம் உழைப்பின் கண்ணியத்தை ஊக்குவித்தார். அவரது வாழ்க்கை மாண்புகள் இன்றும் பொருத்தமாக இருப்பதுடன், எதிர்காலத்திலும் நம்மைத்  தொடர்ந்து வழிநடத்தும்.

காந்தி ஜெயந்தியின் இந்த புனிதமான தருணத்தில், உண்மை மற்றும் அகிம்சையின் பாதையைப் பின்பற்றவும், நாட்டின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் உறுதியுடன் இருக்கவும், தூய்மையான, திறமையான, முழுமையாக அதிகாரம் பெற்ற மற்றும் வளமான இந்தியாவை உருவாக்குவதன் மூலம் காந்திஜியின் கனவை நனவாக்கவும் மீண்டும் உறுதி ஏற்போம்.”

(Release ID: 2173777)

***

SS/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2174200) வருகையாளர் எண்ணிக்கை : 81
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Telugu , Malayalam