பாதுகாப்பு அமைச்சகம்
தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வட்ஸ் பொறுப்பேற்றார்
Posted On:
01 OCT 2025 9:59AM by PIB Chennai
லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வட்ஸ், அக்டோபர் 01, 2025 அன்று தேசிய மாணவர் படையின் (என்சிசி) தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் பணியிலிருந்து ஓய்வு பெறுவதையடுத்து, லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வட்ஸ் இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார். உலகின் மிகப்பெரிய சீருடை அணிந்த இளைஞர் அமைப்பான என்சிசி, 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் அதன் எண்ணிக்கை 20 லட்சமாக விரிவடைந்துள்ள குறிப்பிடத்தக்க தருணத்தில் அவர் இப்பொறுப்பை ஏற்றுள்ளார். ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் என்ற அதன் குறிக்கோளுடன், என்சிசி, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளுடன் இணைந்து, புதுமை, டிஜிட்டல் திறன் மற்றும் உலகளாவிய விழிப்புணர்வை ஒருங்கிணைத்து, அதன் பாரம்பரிய குணநலன் மேம்பாடு மற்றும் தேசபக்தியில் கவனம் செலுத்துகிறது.
டிசம்பர் 17, 1988 அன்று இந்திய இராணுவத்தின் 19-வது குமாவோன் படைப்பிரிவில் நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வட்ஸ், 37 ஆண்டு காலம் சிறப்பான சேவையாற்றியுள்ளார். கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்ற சவாலான சூழல்களில் அவர் திறம்படப் பணியாற்றியுள்ளார். மேலும் அருணாச்சலப் பிரதேசம், காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் இராணுவத் தலைமையகத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளார். காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐ.நா. சபையின் காலாட்படைப் பிரிவுக்கும் அவர் தளபதியாக பொறுப்பு வகித்துள்ளார். இந்த பணி நியமனத்திற்கு முன்பு, அவர் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகளுக்கான இராணுவக் கல்லூரியில் தளபதியாக பணி புரிந்தார்.
கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி, டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி, செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி மற்றும் புது தில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவரான லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வட்ஸ், சிறப்பான செயல்பாடு மற்றும் தலைமைத்துவ அனுபவம் பெற்றுள்ளார். அவரது துறை சார்ந்த நிபுணத்துவம் மற்றும் தொலை நோக்குப் பார்வை என்சிசி அமைப்பை புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் வழிநடத்தும் என்றும், தேசத்திற்காக ஒழுக்கமான, பொறுப்பான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் இளைஞர்களின் பண்புகளை வடிவமைப்பதில் அவரது பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
(Release ID: 2173448)
******
SS/SV/SH
(Release ID: 2173554)
Visitor Counter : 5