மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை அடைய பெண்களின் தலைமைத்துவம் மற்றும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது- மக்களவை சபாநாயகர்

Posted On: 15 SEP 2025 4:10PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற குழுக்களின் முதல் தேசிய மாநாட்டில் உரையாற்றிய மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா, பெண்களுக்கு நிலையான அதிகாரம் அளித்தலின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது, சமூக ரீதியாக கட்டாயம் மட்டுமல்ல, பொருளாதார தேவைக்கும் உரியது என்று அவர் குறிப்பிட்டார். பெண்களின் சுகாதாரம், கல்வி, திறன் மற்றும் தொழில்முனைவு உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதன் மூலம் இந்தியா சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரியை உருவாக்க முடியும் என்று கூறினார்.

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை அடையும் பயணத்தில் பெண்களின் தலைமைத்துவமும், பங்களிப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் எடுத்துரைத்தார்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் அனுபவம் வாய்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, எண்ணங்களை பகிர்ந்துகொள்ள இதுபோன்ற மாநாடுகள் ஒரு தளமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச ஜனநாயக தினம் பற்றி குறிப்பிட்ட மக்களவை சபாநாயகர், இந்தியாவில் ஜனநாயகம் என்பது ஒரு அரசியல் ரீதியான ஏற்பாடு அல்ல என்றும் அது ஒரு நாகரீக மதிப்பு மற்றும் வாழ்க்கை முறையை கொண்டது என்றும் எடுத்துரைத்தார். ஜனநாயகத்தின் தாயாக இந்தியா மதிக்கப்படுவதாகவும், பல நூற்றாண்டுகளாக சமத்துவம், கலந்துரையாடல் மற்றும் பங்கேற்பு கொள்கைகளை நிலைநிறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் கலாச்சாரம் மற்றும் சமூக கட்டமைப்பில் ஜனநாயகம் ஆழமாக ஊடுருவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கிராமப்புற மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்களின் சாதனைகளை எடுத்துரைத்த சபாநாயகர், கல்வி மூலம் பெண் விடுதலைக்கு பாடுபட்ட சாவித்ரி பாய் புலே போன்ற சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பை குறிப்பிட்டார்.

கிராமப்புறங்களில் வசிக்கும் வயதான பெண்கள் நூறு சதவீதம் கல்வியறிவு பெற உதவிய மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளின் முயற்சிகளை குறிப்பிட்ட அவர், இத்தகைய முயற்சிகள் பெண் முன்னேற்றக் கொள்கைகளுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

கல்வி, தொழில் மற்றும் சமூக ரீதியில் தலைமைத்துவம் பெற்று பெண்கள் சிறந்து விளங்குவதாகவும், வாய்ப்புகள் வழங்கப்படும்போது மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் நிகழ்வதாகவும் சபாநாயகர் கூறினார். இந்தியாவின் முன்னேற்றத்தில் பெண்களும் சமமான பங்களிப்பை வழங்கும் வகையில் இதுபோன்ற வாய்ப்புகளை சமூகத்தின் அனைத்து பிரிவிற்கும் விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சபாநாயகர் திரு. ஓம்பிர்லா கேட்டுக்கொண்டார்.

***

 

AD/GK/LDN/KR/SH


(Release ID: 2166966) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Marathi , Hindi