குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
15-வது குடியரசு துணைத்தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் திரு சி பி ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்
Posted On:
12 SEP 2025 1:13PM by PIB Chennai
நாட்டின் 15-வது குடியரசு துணைத்தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார். குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். திரு ராதாகிருஷ்ணன், ஏற்கனவே மகாராஷ்டிர ஆளுநராக இருந்தார்.
திரு சி பி ராதாகிருஷ்ணன் பதவியேற்றபின், ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். சதைவ் அடலில் முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாய்க்கும், தீன்தயாள் உபாத்யாயா மார்கில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவிடத்திலும் கிசான்காட் சென்று முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கிற்கும், அவர் அஞ்சலி செலுத்தினார்.
1957-ல் மே 4 அன்று, தமிழ்நாட்டின் திருப்பூரில் பிறந்த திரு சந்திரபூரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன், வணிக நிர்வாகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேவகராக பணியை தொடங்கிய அவர், 1974-ல் பாரதிய ஜனசங்கத்தின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக செயல்பட்டார். பொது வாழ்க்கையில் நுழைவதற்கு முன், நீண்டகாலம் வெற்றிகரமான ஆயத்த ஆடை ஏற்றுமதியாளராக இருந்தவர் திரு ராதாகிருஷ்ணன்.
1996-ல் தமிழ்நாடு பிஜேபி செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், 1998-ல் முதல் முறையாக கோயம்புத்தூரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999-ல் மீண்டும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவை உறுப்பினராக இருந்தபோது ஜவுளித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவராக அவர் பணியாற்றினார்.
2004-ல் நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற்று ஐநா பொதுச்சபையில் திரு ராதாகிருஷ்ணன் உரையாற்றினார். 2023 பிப்ரவரி 18 அன்று அவர் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் அவர் கூடுதல் பொறுப்பு வகித்தார். பின்னர், மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், துருக்கி, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா உட்பட பல நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தனிப்பட்ட விவரங்கள்
தந்தை பெயர் - திரு பொன்னுசாமி
தாயார் பெயர் - திருமதி சி பி ஜானகி
திருமண நாள் - 25 நவம்பர் 1985
மனைவியின் பெயர் - திருமதி சுமதி ஆர்
குழந்தைகள் - ஒரு மகன், ஒரு மகள்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.inPressReleasePage.aspxPRID=2165918
-----
AD/SMB/KPG/KR
(Release ID: 2166008)
Visitor Counter : 2