பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மனதின் குரல் நிகழ்ச்சியின் 125-வது அத்தியாயத்தில், 31.08.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 31 AUG 2025 11:44AM by PIB Chennai

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். பருவமழையின் இந்த வேளையில் இயற்கைப் பேரிடர்கள் தேசத்தை சோதித்துப் பார்க்கின்றன. கடந்த சில வாரங்களில் நாம் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலநடுக்கம் ஆகியவற்றின் பெரும் தாண்டவத்தைப் பார்த்தோம். சில இடங்களில் வீடுகள் பிடுங்கி எறியப்பட்டன, சில இடங்களில் வயல்கள் நீரில் மூழ்கின, பல குடும்பங்கள் நிர்கதியாக்கப்பட்டார்கள், நீரின் பெருவெள்ளத்தில் சில இடங்களில் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, சாலைகள் காணாமல் போயின, மக்களின் வாழ்க்கை பெரும் சங்கடத்தில் சிக்கியது. இந்தச் சங்கடங்கள் இந்தியர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தங்களுடைய உறவுகளை இழந்த குடும்பங்களின் துக்கம் நம்மனைவரின் துக்கம். எங்கெல்லாம் சங்கடங்கள் வந்தனவோ, அங்கெல்லாம் மக்களைக் காப்பாற்ற நமது என் டி ஆர் எஃப்-எஸ் டி ஆர் எஃப், தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்பு வீரர்களும், பிற பாதுகாப்புப் படையினரும் இரவுபகலாகப் பாடுபட்டார்கள். வீரர்கள் தொழில்நுட்பத்தையும் துணைக்கொண்டார்கள். வெப்பஞ்சார் கேமிராக்கள், உடனடியாகக் கண்டறியும் கருவிகள், மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன்கள் கண்காணிப்பு போன்ற பல நவீன சாதனங்களின் உதவியோடு நிவாரணப் பணிகளில் வேகத்தைக் கூட்ட முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சமயத்தில் ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டன, காயமடைந்தவர்கள் வான்வழி கொண்டு செல்லப்பட்டார்கள். பேரிடர்க்காலங்களில் இராணுவத்தின் உதவிகளும் கொஞ்சநஞ்சமல்ல. வட்டாரத்தில் வசிப்பவர்கள், சமூக சேவகர்கள், மருத்துவர்கள், நிர்வாகம் என, இந்தச் சங்கட காலத்தில் அனைவரும் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்கள். குடிமக்கள் அனைவருக்கும் நான் என் இதயம்கனிந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

 

          எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, வெள்ளம், மழை ஆகியவற்றின் இந்த அழிவிற்கு இடையே ஜம்மு-கஷ்மீரத்தில் இரண்டு மிகப்பெரிய சாதனைகள் படைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் மீது அதிகமானோரின் கவனம் செல்லவில்லை என்றாலும், நீங்கள் இந்தச் சாதனைகளைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள் என்றால் உங்களுக்கும் பெருமகிழ்ச்சி ஏற்படும். ஜம்மு கஷ்மீரத்தின் புல்வாமாவின் ஒரு விளையாட்டு அரங்கிலே, சாதனை அளவிலான எண்ணிக்கையில் மக்கள் குவிந்தார்கள். இங்கே புல்வாமாவிலே முதல் பகல்-இரவு கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டது. முன்பெல்லாம் இது சாத்தியமில்லாததாக இருந்தது ஆனால், இப்போது என்னுடைய தேசம் மாறி வருகிறது இல்லையா?! இந்தப் போட்டி ‘ராயல் ப்ரீமியர் லீகின்’ ஒரு பகுதி தான், இதிலே ஜம்மு கஷ்மீரத்தின் பல்வேறு அணிகள் விளையாடி வருகின்றன. இத்தனை பேர், குறிப்பாக இளைஞர்கள் புல்வாமாவின் இரவிலே, ஆயிரக்கணக்கான எண்ணிக்கையிலே கிரிக்கெட்டின் ஆனந்தத்தைப் பருகினார்கள், இந்தக் காட்சி உண்மையிலேயே கண்கொள்ளாக் காட்சி!!

 

  • நண்பர்களே, கவனத்தை ஈர்த்த இரண்டாவது ஏற்பாடு என்னவென்றால், அது தேசத்தில் நடந்த முதலாவது கேலோ இண்டியா நீர் விளையாட்டுக்கள் கொண்டாட்டம். அதுவும் ஸ்ரீநகரின் டல் ஏரியிலே நடந்தது. உண்மையிலேயே, இப்படிப்பட்டக் கொண்டாட்டத்தை அரங்கேற்ற இது எத்தனை சிறப்பான இடம்!! ஜம்மு கஷ்மீரத்திலே நீர் விளையாட்டுக்களை வெகுஜனங்களுக்குப் பிரியமானவையாக ஆக்குவதுதான் இதன் நோக்கம். இதிலே நாடெங்கிலுமிருந்தும் 800க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்கெடுத்தார்கள். பெண் வீராங்கனைகள் எண்ணிக்கையும் குறைவல்ல, ஆண் வீரர்களுக்கு இணையாகவே இருந்தது. இதிலே பங்கெடுத்த அனைத்து விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகளுக்கு நான் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக அதிகமான பதக்கங்களை வென்ற மத்திய பிரதேச அணிக்கும், அடுத்து வந்த ஹரியாணாவுக்கும், அடுத்த இடம் பிடித்த ஒடிஷாவிற்கும் குறிப்பாக நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். ஜம்மு கஷ்மீர் அரசாங்கம், அங்கிருக்கும் மக்களின் இனிமையான இயல்பு, விருந்தோம்பல் ஆகியவற்றை நான் முழுமையான வகையிலே பாராட்டுகிறேன்.

 

          நண்பர்களே, இந்த ஏற்பாட்டோடு தொடர்புடைய அனுபவங்களை உங்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நான் நினைத்த போது, சரி, இரண்டு விளையாட்டு வீரர்களோடு பேசிப் பார்க்கலாமே என்று தோன்றியது, இவர்கள் இந்த விளையாட்டுக்களில் கலந்து கொண்டவர்கள், இவர்களில் ஒருவர் ஒடிஷாவின் ரஷ்மிதா சாஹூ, மற்றொருவர் ஸ்ரீநகரின் மொஹ்சின் அலி. வாருங்கள் இவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று செவி மடுப்போம்.

 

பிரதமர் – ரஷ்மிதா அவர்களே, வணக்கம்!!

ரஷ்மிதா – வணக்கம் சார்.

பிரதமர் – ஜய் ஜகன்னாத்!!

ரஷ்மிதா – ஜய் ஜகன்னாத் சார்!!

பிரதமர் – ரஷ்மிதா அவர்களே, விளையாட்டுக்கள்ல உங்களோட வெற்றிகளுக்கு நான் முதல்ல என் வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்.

ரஷ்மிதா – தேங்க்யூ சார்.

பிரதமர் – ரஷ்மிதா, உங்களைப் பத்தியும், உங்க விளையாட்டுத்துறைப் பயணத்தைப் பத்தியும் தெரிஞ்சுக்க எல்லோரும் ஆர்வமா இருக்காங்க, நானும் கூட ஆர்வமா இருக்கேன், சொல்லுங்களேன்.

ரஷ்மிதா – சார், என் பேர் ரஷ்மிதா சாஹு. நான் ஒடிஷாவிலேர்ந்து வர்றேன். நான் canoeing அப்படீங்கற சிறுபடகோட்டுதல் வீராங்கனை. நான் 2017ஆம் ஆண்டு தான் விளையாட்டுக்களோடு என்னை இணைச்சுக்கிட்டேன், சிறு படகு ஓட்டுதலைத் தொடங்கினேன். நான் தேசிய அளவுல, தேசியப் போட்டிகள்ல, தேசிய விளையாட்டுக்கள்ல பங்கெடுத்திருக்கேன். 41 பதக்கங்களை ஜெயிச்சிருக்கேன். 13 தங்கம், 14 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்கள் சார்.

பிரதமர் – அடேங்கப்பா!! சரி, இந்த விளையாட்டுல உங்களுக்கு ஆர்வம் எப்படி ஏற்பட்டிச்சு? யாராவது இதில ஈடுபட உங்களுக்கு உத்வேகம் கொடுத்தாங்களா? உங்க குடும்பத்தில விளையாட்டு தொடர்பா என்ன சூழல் நிலவிச்சு?

 

ரஷ்மிதா – இல்லை சார். என்னோட கிராமத்தில இந்த விளையாட்டுக்கான எந்தச் சூழலும் கிடையாது, நதியில படகுகள் போகும், நான் முதல்ல நீச்சலடிக்கத் தான் போனேன், என் நண்பர்களும் நீச்சல் அடிச்சுக்கிட்டு இருந்தாங்க, அப்ப ஒரு படகு கடந்து போச்சு, அப்ப எல்லாம் இந்த canoeing- kayaking பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாது. நான் என் நண்பர்கள்கிட்ட, ஆமா இது என்னன்னு கேட்டேன். அப்ப தோழி சொன்னா, இங்க ஜகத்பூர்ல SAI Sports Centre இருக்கு, அங்க விளையாட்டுக்கள்லாம் கத்து தர்றாங்க, நானும் அங்க போக இருக்கேன்னு சொன்னா. எனக்கு இது ரொம்ப சுவாரசியமா இருந்திச்சு. தண்ணியில பசங்க என்ன எல்லாம் செய்யறாங்க, எனக்கு ஒண்ணுமே தெரியலையேன்னு நினைச்சேன். நாம படகுசவாரி போகலாமான்னு அவ கேட்க, நான் உடனே, நானும் அங்க போகணும்னு சொன்னேன். அதில எப்படி சேர்றதுன்னு எனக்கும் சொல்லுன்னு கேட்டேன். நீயே அங்க போய் கேட்டுக்கயேன்னு அவ சொன்னா. அப்புறம் அப்பா கிட்ட சொன்ன போது, அவரும் சரின்னு என்னை அங்க கூட்டிக்கிட்டு போனாரு. அப்ப எல்லாம் ட்ரயல்லாம் இல்லை, கோச்சு சொன்னாரு ட்ரயல் பிப்ரவரில தான் இருக்கும், பிப்ரவரி மார்ச் மாசங்கள்ல, ட்ரயல் டைம்ல வந்து பாருங்கன்னாரு, நாங்களும் அந்த வேளையில வந்தோம்.

பிரதமர் – சரி ரஷ்மிதா, கஷ்மீர்ல இந்த கேலோ இண்டியா நீர் விளையாட்டுக்கள் கொண்டாட்டத்தில உங்களோட அனுபவம் எப்படி இருந்திச்சு? முத முறையா கஷ்மீர் வந்திருக்கீங்க இல்லையா?

  • – ஆமாம் சார். நான் முதமுறையா கஷ்மீருக்கு போயிருந்தேன். அங்க முதமுறையா கேலோ இண்டியா, முத கேலோ இண்டியா நீர் விளையாட்டுக்கள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தாங்க. அதில நான் ரெண்டு போட்டியில கலந்துக்கிட்டேன். சிங்கில்ஸ் 200 மீட்டர், 500 மீட்டர் டபுள்ஸ். இரண்டுலயும் நான் தங்கப் பதக்கங்களை ஜெயிச்சிருக்கேன் சார்.

பிரதமர் - சபாஷ்! ரெண்டுலயுமா?

ரஷ்மிதா – ஆமா சார்.

பிரதமர் – பலப்பல பாராட்டுக்கள்.

ரஷ்மிதா – தேங்க்யூ சார்.

பிரதமர் – சரி ரஷ்மிதா, நீர் விளையாட்டுக்களைத் தவிர, உங்களுடைய பொழுதுபோக்குகள் வேற என்ன?

ரஷ்மிதா – சார், நீர் விளையாட்டுக்களைத் தவிர, எனக்கு ஓட்டப்பந்தயம் ரொம்பப் பிடிக்கும். எப்ப எல்லாம் எனக்கு விடுமுறை கிடைக்குதோ, நான் ஓடப் போயிருவேன், எங்க ஊர்ல ஒரு பழைய மைதானம் உண்டு, அங்க முன்ன எல்லாம் கொஞ்சம் கால்பந்தாட்டம் விளையாட கத்துக்கிட்டேன், அங்க தான் நான் போவேன், நிறைய ஓடுவேன், ஓரளவுக்கு கால்பந்தாட்டமும் விளையாடுவேன்.

 

பிரதமர் – அப்படீன்னா உங்க உடம்புபூரா விளையாட்டு ஊறிப் போயிருக்கு இல்லை!?

ரஷ்மிதா – ஆமா சார், நான் ஒண்ணாப்புலேர்ந்து, பத்தாம் வகுப்பு வரை பள்ளியில படிக்கும் போது, நான் எதில எல்லாம் பங்கெடுத்தேனோ, அதில எல்லாத்திலயும் முதலாவதா வருவேன், நான் தான் சேம்பியனா இருந்தேன்.

பிரதமர் – ரஷ்மிதா, யாரெல்லாம் உங்களை மாதிரியே விளையாட்டுக்கள்ல முன்னேற நினைக்கறாங்களோ, அவங்களுக்கு ஒரு செய்தி சொல்லணும்னு நினைச்சீங்கன்னா, நீங்க என்ன சொல்லுவீங்க?

  • – சார், நிறைய குழந்தைங்களால வீட்டை விட்டு வெளியகூட வர முடியாது, நீ பொம்பள புள்ளை, எப்படி வெளிய போவேன்னு கேப்பாங்க. சிலர் கிட்ட பணம் இருக்காது, அதனால விளையாட்டுக்களை நிறுத்த வேண்டியிருக்கும். ஆனா இந்த கேலோ இண்டியா திட்டம் வந்த பிறகு, பல பசங்களுக்கு பண உதவியும் கிடைக்குது, நிறைய பேத்துக்கு வேற பல உதவிகளும் கிடைச்சு வருது. இது காரணமா பல பசங்களால முன்னேற முடியுது. எல்லார் கிட்டயும் நான் சொல்லிக்கறது என்னென்னா, விளையாட்டுக்களை விட்டுறாதீங்க, விளையாட்டுக்கள் மூலமா நிறைய முன்னேற முடியும். விளையாட்டுன்னா விளையாட்டு மட்டுமில்லை, அதனால உடலோட ஒவ்வொரு உறுப்பும் ஆரோக்கியமா இருக்குது, மேலும் இந்த விளையாட்டுக்கள்ல நல்லா முன்னேறினா, இந்தியாவுக்கு பதக்கங்களை பெற்றுத் தரலாம், இப்படி செய்யறதுங்கறது நம்மோட கடமை சார்.

பிரதமர் – சரி ரஷ்மிதா அவர்களே, உங்களோட பேசறது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு உங்களுக்கு மீண்டுமொரு முறை பலப்பல நல்வாழ்த்துக்கள், உங்க தகப்பனாருக்கும் என்னோட வணக்கங்களை தெரிவியுங்க; ஏன்னா இத்தனை சிரமங்களையும் பொருட்படுத்தாம, தன்னோட பெண்ணை முன்னேத்த எத்தனை ஊக்கப்படுத்தியிருக்காரு!! பலப்பல நல்வாழ்த்துக்கள். நன்றி.

ரஷ்மிதா – தேங்க்யூ சார்.

பிரதமர் – ஜய் ஜகன்னாத்!!

ரஷ்மிதா – ஜய் ஜகன்நாத் சார்!!

 

பிரதமர் – மொஹ்சின் அலி வணக்கம்.

மொஹ்சின் அலி – வணக்கம் சார்.

பிரதமர் – மொஹ்சின் அவர்களே, உங்களுக்குப் பலப்பல பாராட்டுக்கள், உங்களோட பிரகாசமான எதிர்காலத்துக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.

மொஹ்சின் அலி – தேங்க்யூ சார்.

பிரதமர் – மொஹ்சின், முதல்ல இந்த கேலோ இண்டியா நீர் விளையாட்டுக்கள் கொண்டாட்டம், இந்த முத பதிப்பிலேயே தங்கப்பதக்கம் ஜெயிக்கறது, இது எப்படி இருக்கு?

மொஹ்சின் அலி – சார், நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், முதமுறையா நடந்திருக்கற, அதுவும் இங்க கஷ்மீர்ல நடந்திருக்கற இந்த விளையாட்டுக்கள்ல நான் தங்கப் பதக்கம் ஜெயிச்சிருக்கேன்.

பிரதமர் – மக்கள் என்ன பேசிக்கறாங்க?

மொஹ்சின் அலி – சார், ரொம்ப சந்தோஷப்படுறாங்க, என் குடும்பம் மொத்தமும் சந்தோஷப்படுறாங்க.

பிரதமர் – உங்க பள்ளியில?

மொஹ்சின் அலி – பள்ளிக்கூடத்திலயும் எல்லாருக்கும் சந்தோஷம் தான். கஷ்மீர்ல எல்லாரும் என்ன தங்கப் பதக்கம் ஜெயிச்சவன்னு சொல்றாங்க.

பிரதமர் – அப்படீன்னா இப்ப நீங்க ஒரு பிரபலம்னு சொல்லுங்க!

மொஹ்சின் அலி – ஆமா சார்.

பிரதமர் – சரி, நீர் விளையாட்டுக்கள்ல உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டிச்சு, உங்க பார்வையில அதனால என்ன ஆதாயம்னு சொல்லுங்க?

மொஹ்சின் அலி – என் சின்ன வயசுல படகுகள் டல் ஏரியில பயணிக்கறதை பார்த்திருக்கேன். அப்ப அப்பா என்கிட்ட கேட்டாரு, நீயும் சவாரி போகறியான்னு கேட்டப்ப, எனக்கும் ஆர்வம் அதிகம் இருந்திச்சா, பிறகு மத்தியில மேடம் கிட்ட போயிட்டேன், பில்கிஸ் மேடம் தான் எனக்கு படகு ஓட்ட கத்துக் கொடுத்தாங்க.

பிரதமர் – அப்படியா? ஆங்….மொஹ்சின், தேசம் முழுக்கவிருந்தும் மக்கள் வந்தாங்க, முத முறையா நீர் விளையாட்டுக்கள் நடந்திச்சு, அதுவும் ஸ்ரீநகர்ல நடந்திச்சு, அதுவும் டல் ஏரியில நடந்திச்சு, இத்தனை பேர் வந்திருந்தாங்களே, கஷ்மீர் மக்கள் இதை எப்படி உணர்ந்தாங்க?

மொஹ்சின் அலி – ரொம்ப சந்தோஷப்பட்டாங்க சார். எல்லாரும் அருமையான இடம்னு சொன்னாங்க. எல்லாம் நல்லாயிருக்கு, நல்ல வசதிகள் இருக்குன்னாங்க. இங்க கேலோ இண்டியா விளையாட்டுக்கள்ல எல்லாமே ரொம்ப சிறப்பா இருந்திச்சு சார்.

 

பிரதமர் – நீங்க எப்பவாவது விளையாடுறதுக்கு கஷ்மீரை விட்டு வெளிய போயிருக்கீங்களா?

மொஹ்சின் அலி – ஆமா சார், போபால் போயிருக்கேன், கோவா போயிருக்கேன், கேரளா போயிருக்கேன், அப்புறம் ஹிமாச்சலம் போயிருக்கேன்.

பிரதமர் – அப்படீன்னா நீங்க இந்தியா முழுசுக்கும் போயிருக்கீங்கன்னு சொல்லுங்க.

மொஹ்சின் அலி – ஆமா சார்.

பிரதமர் – அப்ப எல்லாமும் கூட இத்தனை விளையாட்டு வீரர்கள் வந்திருந்தாங்களா?

மொஹ்சின் அலி – ஆமா சார்.

பிரதமர் – புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கிட்டீங்களா நீங்க?

மொஹ்சின் அலி – சார், நிறைய பேர் நண்பர்களானாங்க சார். ஒண்ணாவே நாங்க எல்லாரும் டல் ஏரி, லால் சௌக்னு பல இடங்களுக்கு சுத்திப் பார்க்க போனோம், பஹல்காமுக்கும் போனோம், எல்லா இடங்களுக்கும் போனோம்.

பிரதமர் – ஜம்மு கஷ்மீர்ல விளையாட்டுத் திறமைகள் ரொம்ப அற்புதமா இருக்குங்க.

மொஹ்சின் அலி – ஆமாம் சார்.

பிரதமர் – நம்ம ஜம்மு கஷ்மீரத்து இளைஞர்கள், தேசத்துக்கு பெருமை சேர்க்கற அளவுக்கு அவங்க கிட்ட திறன்கள் திறமைகள் இருக்கு, இதை நீங்க செஞ்சும் காட்டியிருக்கீங்க.

மொஹ்சின் அலி – சார், ஒலிம்பிக்ல பதக்கம் வெல்றது தான் என் கனவு சார்.

பிரதமர் – சபாஷ், பலே!!

மொஹ்சின் அலி – அதுதான் சார் என் கனவு.

பிரதமர் – நீங்க சொல்றதைக் கேட்டாலே எனக்கு மயிர்க்கூச்செறியுதே!!

மொஹ்சின் அலி – சார், ஒலிம்பிக்ல பதக்கம் ஜெயிக்கணும், தேசத்தோட தேசிய கீதம் ஒலிக்கணும், இதுமட்டும் தான் சார் என் கனவு.

பிரதமர் – என் தேசத்தின் தொழிலாளிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மகன் இத்தனை பெரிய கனவைக் காண்கிறான் அப்படீங்கறதோட அர்த்தம் என்னென்னா, என் தேசம் மிகவும் முன்னேறிட்டு இருக்குங்கறது தான்.

மொஹ்சின் அலி – சார், ரொம்ப முன்னேறும் சார். இந்த அளவுக்கு இங்க கேலோ இண்டியாவுக்கு இந்திய அரசு ஏற்பாடு செஞ்சிருக்கு, முதமுறையா இப்படி நடந்திருக்கு, இதுக்கு நாங்க எல்லாம் நன்றிக்கடன் பட்டிருக்கோம் சார்.

பிரதமர் – அப்படீன்னா உங்க பள்ளியில உங்களை தூக்கி வச்சுக் கொண்டாடியிருப்பாங்களே!!

மொஹ்சின் அலி – கண்டிப்பா சார்.

பிரதமர் – சரி மொஹ்சின், உங்களோட உரையாடினது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, என் தரப்பிலேர்ந்து உங்க அப்பாவுக்கு சிறப்பான நன்றிகளை தெரிவிச்சுருங்க. ஏன்னா அவங்கதான் தினக்கூலியா இருந்தும் கூட, உங்களுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் குடுத்திருக்காரு, நீங்களும் அப்பா சொன்னாரு, செஞ்சோம்னு எடுத்துக்காம, பத்தாண்டுகள் வரை கடுமையா உழைச்சு, மத்த விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு கருத்தூக்கமா இருந்திருக்கீங்க. அதோட உங்க பயிற்றுநருக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கறேன், அவங்களும் உங்க வெற்றிக்கு கடுமையா பாடுபட்டிருக்காங்க. உங்க எல்லாருக்கும் என் பலப்பல நல்வாழ்த்துக்கள், பலப்பல பாராட்டுக்கள் சகோதரா.

மொஹ்சின் அலி – தேங்க்யூ சார், வணக்கம் சார், ஜய் ஹிந்த்!!

 

          நண்பர்களே, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வு, தேசத்தின் ஒற்றுமை, தேசத்தின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு மிகவும் அவசியமானது. கண்டிப்பாக விளையாட்டுக்கள் இந்த உணர்வை வளர்த்தெடுப்பதிலே பெரும்பங்கு ஆற்றுகின்றன. நமது தேசம் எத்தனை போட்டிகளில் பங்கெடுக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகமாக மலர்ச்சி அடையும். இரண்டு விளையாட்டு வீரர்களுக்கும், உங்களுடைய நண்பர்களுக்கும் என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள்.

 

          எனதருமை நாட்டுமக்களே, நீங்கள் UPSC என்ற சொல்லைக் கண்டிப்பாக கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த அமைப்பானது, தேசத்தின் மிகக்கடினமான தேர்வுகளில் ஒன்றான குடிமைப்பணித் தேர்வுகளை நடத்துகிறது. நாம் அனைவரும் குடிமைச் சேவைகளில் முதலிடம் பெற்றவர்களின் கருத்தூக்கம்தரும் விஷயங்களைப் பல வேளைகளில் கேட்டிருக்கிறோம். இந்த இளைஞர்கள் கடினமான சூழ்நிலைகளிலும் படித்து முடித்த பிறகு தங்களுடைய உழைப்பு காரணமாக இந்தச் சேவையில் இடம் பிடிக்கிறார்கள். ஆனால் நண்பர்களே, UPSC தேர்வு பற்றிய மேலும் ஒரு உண்மை இருக்கிறது. ஆயிரக்கணக்கான தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இருக்கிறார்கள், அவர்களுடைய உழைப்பும் கூட யாருக்கும் சளைத்தது அல்ல என்றாலும் கூட, மிகச் சிறிய இடைவெளி காரணமாக அவர்களால் இறுதிப் பட்டியலில் இடம்பெற முடிவதில்லை. இந்தப் போட்டியாளர்கள் பிற தேர்வுகளுக்குப் புதியதாக மீண்டும் தயார் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதிலே அவர்களுடைய நேரமும் பணமும் இரண்டுமே விரயமாகின்றன. ஆகையால் இப்படிப்பட்ட புத்திகூர்மை உடைய மாணவர்களுக்கெனவே பிரதிபா சேது என்ற ஒரு டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

          பிரதிபா சேதுவிலே, பல்வேறு போட்டியாளர்களின் தரவுகள் இடம் பெற்றிருக்கின்றன, இவர்கள் UPSCயின் பல்வேறு தேர்வுகளின் அனைத்து நிலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தாலும், இறுதிக்கட்ட தகுதியானோர் பட்டியலில் அவர்களுடைய பெயர் இடம் பெறவில்லை. இந்த தளத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்திகூர்மை படைத்த இளைஞர்களின் தரவுத்திரட்டு இருக்கிறது. சிலர் குடிமைப்பணித் தேர்வுகளுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருக்கலாம், சிலர் பொறியியல் சேவைகளில் நுழைய விரும்பியிருக்கலாம், சிலர் மருத்துவச் சேவைகளின் அனைத்து நிலைகளையும் கடந்திருந்தாலும், இறுதிக்கட்டத்தில் தேர்வாகாமல் போயிருக்கலாம். இப்படிப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்கள் பற்றிய தகவல்கள் இப்போது பிரதிபா சேதுவில் இடம்பெற்று வரத் தொடங்கியிருக்கிறது. இந்தத் தளத்தைப் பார்த்து, தனியார் நிறுவனங்களும் கூட புத்திக்கூர்மை உடைய மாணவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு அவர்களை பணிக்கமர்த்திக் கொள்ளலாம். நண்பர்களே, இந்த முயற்சியின் விளைவுகளும் வரத் தொடங்கியிருக்கின்றன. நூற்றுக்கணக்கான மனுதாரர்களுக்கு இந்தத் தளத்தின் உதவியால் உடனடியாக வேலை கிடைத்திருக்கிறது; எந்த போட்டியாளர்களுக்கு மிகக் குறுகிய இடைவெளியால் வேலை கிடைக்கவில்லையோ, இப்போது புதிய தன்னம்பிக்கையோடு முன்னேறி வருகிறார்கள்.

 

  • என் மனம்நிறை நாட்டுமக்களே, இன்று உலகம் முழுவதன் கவனமும் பாரதம் மீதே இருக்கிறது. பாரதத்தின் மறைந்திருக்கும் சாத்தியக்கூறுகளின் மீதே உலகத்தின் பார்வை படிந்திருக்கிறது. இதோடு தொடர்புடைய ஒரு இனிமையான அனுபவத்தை நான் இப்போது உங்களுடன் பகிர இருக்கிறேன். இப்போதெல்லாம் பாட்காஸ்ட் என்பது ஒரு ஃபேஷனாகி இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். பல விஷயங்களோடு தொடர்புடைய பாட்காஸ்டுகளை பலரகப்பட்ட மக்கள் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். கடந்த நாட்களில் நானும் கூட சில பாட்காஸ்டுகளில் பங்கெடுத்தேன். இப்படிப்பட்ட ஒரு பாட்காஸ்ட் தான், உலகத்தின் மிகவும் பிரபலமான பாட்காஸ்டரான Lex Friedmanடன் நிகழ்ந்தது. அந்த பாட்காஸ்டிலே பல விஷயங்கள் பேசப்பட்டன,உலகம் முழுவதிலும் மக்கள் அதைக் கேட்டார்கள்; மேலும் அந்த பாட்காஸ்ட் பற்றிப் பேச்சு வரும் போது, பேச்சுவாக்கிலே நான் ஒரு விஷயத்தை எழுப்புகிறேன். ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீரர் அந்த பாட்காஸ்டைக் கேட்டிருக்கிறார், அதில் நான் கூறியிருந்த விஷயத்தின் மீது அவரது கவனம் ஆழமாகச் சென்றிருக்கிறது. அவர் அந்த விஷயத்தோடு தன்னை எந்த அளவுக்கு ஈடுபடுத்திக் கொண்டார் என்றால், அவர் அந்த விஷயம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, ஜெர்மனியில் உள்ள இந்தியத் தூதரகத்தோடு கடிதம் வாயிலாக தொடர்பு கொண்டு, இந்த விஷயம் தொடர்பாக பாரதத்தோடு தன்னை இணைத்துக் கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஜெர்மனியில் உள்ள ஒரு விளையாட்டு வீரருக்கு உத்வேகம் பிறக்கும் வகையிலே பாட்காஸ்டிலே மோதிஜி அப்படி என்ன தான் கூறியிருப்பார், அந்த விஷயம் என்னவாக இருக்கும் என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள். பேச்சுவாக்கிலே நான் பாட்காஸ்டிலே மத்திய பிரதேசத்தின் ஷஹ்டோலின் கால்பந்தாட்ட பேரார்வம் உடைய ஒரு கிராமத்தைப் பற்றி கூறியிருந்தேன். உள்ளபடியே நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஷஹ்டோலுக்கு சென்றிருந்தேன், அங்கேயிருந்த கால்பந்தாட்ட வீரர்களை சந்தித்தேன். பாட்காஸ்டின் போது ஒரு வினாவிற்கு விடையளிக்கும் வகையிலே நான் ஷஹ்டோலின் கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இந்த விஷயத்தைத் தான் ஜெர்மனியின் கால்பந்தாட்ட விளையாட்டு வீரரும், பயிற்றுநருமான Dietmar Beiersdorfer கேட்டிருக்கிறார். ஷஹ்டோலின் இளைய கால்பந்தாட்ட வீரர்களின் வாழ்க்கைப் பயணம் அவரிடம் மிகவும் தாக்கமேற்படுத்தியிருக்கிறது, உள்ளெழுச்சி உண்டாக்கியிருக்கிறது. உண்மையிலேயே இப்படிப்பட்ட ஒரு பிரபலமான கால்பந்தாட்ட வீரர், மற்ற தேசங்களின் பார்வையை தன்னை நோக்கி ஈர்ப்பார் என்று யாரும் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. இப்போது ஜெர்மனியின் இந்தப் பயிற்றுநர், ஷஹ்டோலின் சில விளையாட்டு வீரர்களுக்கு ஜெர்மனியின் ஒரு அகாதமியில் பயிற்சி அளிக்க முன்மொழிந்திருக்கிறார். இதன் பிறகு மத்திய பிரதேச அரசும் கூட அவரைத் தொடர்பு கொண்டிருக்கிறது. விரைவிலேயே, ஷஹ்டோலின் நமது சில இளைய நண்பர்கள் பயிற்சி பெற ஜெர்மனி செல்வார்கள். பாரதத்தில் கால்பந்தாட்டம் மீதான நாட்டம் தொடர்ந்து வளர்ந்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நேரம் வாய்க்கும் போதெல்லாம் ஷஹ்டோலுக்குக் கண்டிப்பாகச் சென்று வாருங்கள், அங்கே நடைபெற்றுவரும் விளையாட்டுப் புரட்சிகளை அருகிருந்து பார்த்து வாருங்கள் என்று நான் கால்பந்தாட்ட ரசிகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

 

  • எனதருமை நாட்டுமக்களே, சூரத்தில் வசிக்கின்ற ஜிதேந்திர சிங் ராடோட் பற்றித் தெரிந்தது மிகவும் சுகமான அனுபவமாக இருந்தது. மனதில் பெருமிதம் பொங்குகிறது. ஜிதேந்திர சிங் ராடோட் ஒரு பாதுகாப்புக் காவலர், அவர் செய்திருக்கும் ஒரு அற்புதமான முன்னெடுப்பு, தேசபக்தர்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கவல்லது. கடந்த சில ஆண்டுகளாகவே அவர் தாய்த்திருநாட்டைக் காப்பாற்ற தங்களுடைய இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவதில் ஈடுபட்டு வந்தார். இப்போது இவரிடத்திலே, முதலாம் உலகப் போர் தொடங்கி இப்போதைய உயிர்த்தியாகிகள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. இவரிடத்தில் உயிர்த்தியாகிகளின் ஆயிரக்கணக்கான படங்களும் இருக்கின்றன. ஒருமுறை ஒரு உயிர்த்தியாகியின் தந்தை கூறிய ஒரு விஷயம் இவர் இதயத்தைத் தொட்டு விட்டது. அந்த உயிர்த்தியாகியின் தந்தையார் கூறினார் – ‘மகன் போனால் அதனால் என்ன, தாய்நாடு நலமாக இருக்கிறது இல்லையா?’ இந்த ஒரு விஷயம், இந்த ஒரு வாக்கியம், இந்த உணர்வு, ஜிதேந்திர சிங் அவர்களின் மனதை தேசபக்தி என்ற அற்புதமான அமுதால் நிரப்பி விட்டது. இன்று இவரிடத்தில் பல உயிர்த்தியாகிகளின் குடும்பங்களிடம் தொடர்பு இருக்கிறது. இவர் கிட்டத்தட்ட 2500 உயிர்த்தியாகிகளின் தாய் தந்தையரின் பாதத் தூளிகளை தன்னிடத்தில் வைத்திருக்கிறார். ஆயுதப்படையினரிடத்தில் இவருக்கு இருக்கும் ஆழமான பாசம், உறவு ஆகியவற்றுக்கான உயிர்ப்புடைய எடுத்துக்காட்டு இது. ஜிதேந்திரா அவர்களின் வாழ்க்கை தேசபக்தியின் இயல்பான ஒரு பாடம்.

 

          என் கனிவான நாட்டுமக்களே, இப்போதெல்லாம் நீங்களே கவனித்திருக்கலாம், பல வீடுகளின் கூரைகளிலே, பெரிய கட்டிடங்களின் மேலே, அரசாங்க அலுவலகங்களில் எல்லாம் சூரியசக்தித் தகடுகள் பளிச்சிடுகின்றன. மக்கள் இவற்றின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள், இவற்றைத் திறந்த மனத்தோடு ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். நமது தேசத்திலே சூரியதேவனின் எல்லையற்ற கருணை இருக்கிறது எனும் போது ஏன் நாம் அந்த சக்தியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது?

 

          நண்பர்களே, சூரியசக்தியால் விவசாயிகளுடைய வாழ்க்கை மாறிக்கொண்டு வருகிறது. அதே வயல், அதே உழைப்பு, அதே விவசாயி ஆனால், இப்போது உழைப்பின் பலன் அதிகமாக இருக்கிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் சூரியசக்தி பம்ப் காரணமாகவும், சூரியசக்தி அரிசி ஆலையாலும் தான். இன்று தேசத்தில் பல மாநிலங்களில், நூற்றுக்கணக்கான சூரியசக்தி அரிசி ஆலைகள் அமைக்கப்பட்டு விட்டன. இந்த சூரியசக்தி அரிசி ஆலைகள், விவசாயிகளின் வருவாயோடு கூடவே அவர்களின் முகங்களில் மகிழ்ச்சிக் கீற்றுக்களைப் படர விட்டிருக்கின்றன.

 

  • நண்பர்களே, பிஹாரின் தேவ்கி அவர்கள், சூரியசக்தி பம்ப் வாயிலாக கிராமத்தின் எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். முஸஃப்ஃபர்பூரின் ரதன்புரா கிராமத்தில் வசிக்கும் தேவ்கி அவர்களை மக்கள் இப்போது அன்போடு சோலார் தீதி என்று அழைக்கிறார்கள். தேவகி அவர்களின் வாழ்க்கை அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை; சிறுவயதிலேயே அவருக்குத் திருமணம் ஆனது, சிறிய வயல் தான், நான்கு குழந்தைகளின் பொறுப்போடு கூடவே, எதிர்காலம் பற்றிய எந்த தெளிவான எண்ணமும் இருக்கவில்லை. ஆனால் அவருடைய தன்னம்பிக்கை என்றுமே தகர்ந்து போகவில்லை. அவர் ஒரு சுயவுதவிக் குழுவோடு தன்னை இணைத்துக் கொண்டார், அங்கே தான் அவருக்கு சூரியசக்தி பம்ப் பற்றிய தகவல் கிடைத்தது. அவர் சூரியசக்தி பம்பிற்காக முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார். சோலார் தீதியின் சூரியசக்தி பம்ப் வந்த பிறகு கிராமத்தின் காட்சியே மாறி விட்டது. முன்பெல்லாம் சில ஏக்கர் நிலங்களுக்கு மட்டுமே நீர்பாசனம் செய்ய முடிந்த நிலைமையிலே, இப்போது சூரியசக்தி தீதியின் சூரியசக்தியால் இயங்கும் பம்ப், 40 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்களுக்கு நீர் பாய்ச்சுகிறது. சோலார் தீதியின் இந்த இயக்கத்துடன் கிராமத்தின் பிற விவசாயிகளும் இணைந்து விட்டார்கள். அவர்களின் வயல்வெளிகளும் பசுமையாகக் காட்சியளிக்கின்றன, வருவாயும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

 

நண்பர்களே, முன்பெல்லாம் தேவகி அவர்களின் வாழ்க்கை நான்கு சுவர்களுக்குள்ளே அடங்கிப் போனது. ஆனால் இப்போதோ அவர் முழு தன்னம்பிக்கையோடு தனது பணிகளைச் செய்து வருகிறார், சோலார் தீதியாக ஆகி பணம் சம்பாதித்து வருகிறார். அனைத்திலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இவர் அந்த வட்டாரத்து விவசாயிகளிடமிருந்து யுபிஐ வாயிலாகவே தொகையைப் பெறுகிறார். இப்போது மொத்த கிராமத்திலும் இவருக்கு மிகுந்த மரியாதை கிடைக்கிறது. சூரியசக்தி என்பது மின்சாரத்திற்கான சாதனம் மட்டுமல்ல, கிராமம்தோறும் புதிய ஒளியேற்படுத்தவல்ல புதியதொரு சக்தியும் கூட என்பதைத் தான் இவருடைய உழைப்பும் தொலைநோக்கும் எடுத்துக்காட்டி இருக்கின்றன.

 

          என் மனம்நிறை நாட்டுமக்களே, செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி மாபெரும் பொறியாளர் மோக்ஷகுண்டம் விச்வேஸ்வரைய்யா அவர்களின் பிறந்த நாள் ஆகும். அந்த நாளன்று தான் நாம் பொறியாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம். பொறியாளர்கள் வெறும் இயந்திரங்களை மட்டும் உருவாக்குவதில்லை, அவர்கள் கனவுகளை மெய்ப்படச் செய்யும் கர்மயோகிகள். நான் பாரதத்தின் அனைத்துப் பொறியாளர்களையும் பாராட்டுகிறேன் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

 

  • செப்டம்பரில் தான் பகவான் விஸ்வகர்மாவின் புனிதமான வழிபாட்டுக்காலமும் வரவிருக்கிறது. செப்டம்பர் மாதம் 17ஆம் தேதியன்று விஸ்வகர்ம ஜயந்தியாகும். பாரம்பரியமான கைவினைக்கலை, திறன்கள் மற்றும் அனுபவ அறிவு-ஞானம் ஆகியவற்றை இடைவிடாமல் ஒரு தலைமுறையிடமிருந்து மற்றோர் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கிறார்கள். நமது தச்சர்கள், இரும்புக் கொல்லர்கள், பொற்கொல்லர்கள், மண்பாண்டம் தயாரிப்போர், சிற்பிகள், கட்டடக்கலைஞர்கள் போன்றோர் எப்போதுமே பாரதத்தின் வளத்தின் ஆதாரங்கள். நமது இந்த விஸ்வகர்மா உறவுகளுக்குத் துணைவரவே, அரசாங்கம் விஸ்வகர்மா திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.

 

நண்பர்களே, இப்போது நான் உங்களுக்கு ஒரு ஒலிக்குறிப்பை இசைக்கச் செய்ய விரும்புகிறேன்.

 

####

          மாநிலங்கள் விஷயத்தில் நான் செய்தது அல்லது ஹைதராபாத் தொடர்பாக நமது அரசாங்கம் செய்தது, ஆமாம் நாங்கள் தான் செய்தோம், இது பற்றி எல்லாம் நீங்கள் இந்த கௌரவப் பட்டயத்தில் எழுதியிருக்கிறீர்கள், எல்லாம் சரி தான். ஆனால் இந்த ஹைதராபாத் விஷயம் எப்படிப்பட்டது, நாங்கள் எப்படி செய்தோம், எத்தனை கடினம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அனைத்து மாநிலங்களிடத்திலும், அனைத்து அரச குமாரர்களிடமும் நாங்கள் அளித்த வாக்குறுதி என்னவென்றால், எந்த ஒரு அரசகுமாரனுக்கோ, அரசருக்கோ எதிராக தவறான முடிவை எடுக்க மாட்டோம். அனைவருக்கும் பொதுவான வகையிலே தான் முடிவு எடுக்கப்படும். ஆனால் ஹைதராபாதிடம் நாங்கள் ஒரு தனிப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்தினோம்.

 

#####

 

  • இந்தக் குரல் இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேலுக்குச் சொந்தமானது. ஹைதராபாத் சம்பவங்கள் தொடர்பாக அவர் குரலில் இருந்த துயரம், அதை உங்களால் உணரமுடியும். அடுத்த மாதம் செப்டம்பரில் நாம் ஹைதராபாத் விடுவிப்பு நாளைக் கொண்டாடுவோம். இதே மாதம் தான் நாம் ஆப்பரேஷன் போலோவில் பங்கெடுத்த அனைத்து வீரர்கள், தீரர்களை நினைவில் கொள்வோம். ஆகஸ்ட் மாதம் 1947ஆம் ஆண்டு பாரதம் சுதந்திரம் அடைந்த போது, ஹைதராபாத் மட்டும் தனியொரு நிலைமையில் இருந்தது. நிஜாம் மற்றும் ரஸாக்கர்களின் கொடூரங்கள் அன்றாடம் அதிகரித்து வந்தன. மூவண்ணக் கொடியைப் பறக்க விட்டாலோ, வந்தே மாதரம் என்று கோஷமிட்டாலோ, அவர்கள் கொல்லப்பட்டார்கள். பெண்கள் மற்றும் ஏழைகளின் மீது கொடுமைகள் கட்டவழித்துவிடப்பட்டன. இந்தப் பிரச்சனை பெரிதாகிக் கொண்டே வருவதாக, அந்த வேளையில் தான் பாபாசாகேப் ஆம்பேட்கரும் கூட எச்சரிக்கை விடுத்தார். கடைசியில், சர்தார் வல்லப்பாய் படேல் அவர்கள் விஷயத்தைத் தனது கைகளில் எடுத்தார். அவர் ஆப்பரேஷன் போலோவைத் தொடங்க அரசாங்கத்தைத் தயார் செய்தார். சாதனைபடைக்கும் வகையில் நமது இராணுவம் ஹைதராபாத் நிஜாமின் கொடுங்கோன்மையிலிருந்து விடுதலை அளித்து, ஹைதராபாதை பாரதத்தின் அங்கமாக்கியது. தேசமெங்கும் இந்த வெற்றிக்களிப்பு கொண்டாடப்பட்டது.

 

என் உளம்நிறை நாட்டுமக்களே, உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் நீங்கள் சென்று பாருங்கள், அங்கே உங்களால் பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் தாக்கத்தைக் காணமுடியும். இந்தத் தாக்கம் உலகின் பெருநகரங்களில் மட்டுமல்ல, இதைச் சின்னச்சின்ன நகரங்களிலும் கூட உங்களால் பார்க்க முடியும். இத்தாலியின் ஒரு சிறிய நகரமான கேம்ப் ரோதோந்தோ என்ற இடத்திலும் கூட இதைப் பார்க்கலாம். இங்கே மஹரிஷி வால்மீகி அவர்களுடைய திருவுருவச் சிலை திறக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அங்கிருக்கும் பகுதியின் நகரத் தந்தையைத் தவிர, வட்டாரத்தின் பல முக்கியமான நபர்களும் பங்கெடுத்துக் கொண்டார்கள். மகரிஷி வால்மீகி அவர்களின் திருவுருவச் சிலையை பாரத நாட்டைச் சேர்ந்தவர்கள் அமைத்ததால், கேம்ப் ரோதோந்தோவில் வசிப்போருக்கு மிகுந்த மகிழ்ச்சி. மகரிஷி வால்மீகியின் செய்தி நம்மனைவருக்கும் மிகவும் உத்வேகம் அளிக்கிறது.

 

நண்பர்களே, இந்த மாதம் தொடக்கத்தில் கனடாவின் மிஸிஸாகாவில் பிரபு ஸ்ரீ இராமனுடைய 51 அடி உயரமான திருவுருவச் சிலையும் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடர்பாக மக்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தார்கள். சமூக ஊடகங்களில் பிரபு ஸ்ரீ இராமனுடைய மாபெரும் திருவுருவச் சிலை மீதான காணொளிகள் நன்கு பகிரப்பட்டன.

 

  • இராமாயணம் மற்றும் பாரதநாட்டு கலாச்சாரத்திடம் அன்பு இப்போது உலகின் அனைத்து இடங்களிலும் சென்றடைந்து வருகிறது. ரஷியாவின் ஒரு புகழ்மிக்க இடம் விளாடிவாஸ்டாக். குளிர்காலத்தில் இங்கே தட்பவெப்பம் பூஜ்யத்திற்கு கீழே 20-30 டிகிரி செல்ஷியஸைக் கூட தொடக்கூடிய இடமாக இது பார்க்கப்படுகிறது. இந்த மாதம் விளாடிவாஸ்டாக்கில் ஒரு வித்தியாசமான ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. இதிலே ரஷிய நாட்டுக் குழந்தைகள் வாயிலாக இராமாயணத்தின் பல்வேறு கருத்துக்கள் தொடர்பாக வரையப்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இங்கே ஒரு போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து பாரத நாட்டு கலாச்சாரத்திடம் பெருகிவரும் விழிப்புணர்வைப் பார்க்கும் போது உள்ளம் மிகவும் சந்தோஷத்தில் விம்முகிறது.

 

  • நாட்டுமக்களே, மனதின் குரலில் இந்த முறை இம்மட்டே. இப்போது தேசமெங்கும் கணேச உற்சவம் பெரும் கோலாகலத்தோடு கொண்டாடப்பட்டு வருகிறது. வரவிருக்கின்ற நாட்களில் பல பண்டிகைகள் ஒளிகூட்ட வரவிருக்கின்றன. இந்தப் பண்டிகைகளின் போது நீங்கள் சுதேசி பற்றிய எண்ணத்தை எப்போதும் மறந்துவிடக்கூடாது. பரிசுகள் என்றால் பாரதத்தில் தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும், ஆடைகள் என்றால் அவையும் பாரதத்தில் தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும், அலங்காரங்கள் என்றால் அவையும் பாரதத்தில் தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும், விளக்குகளும் பாரதத்தில் தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும், இப்படி அனைத்துப் பொருட்களும், வாழ்க்கையின் அனைத்துத் தேவைகளும், அனைத்தும் சுதேசியாக இருக்க வேண்டும். பெருமிதம் பொங்கச் சொல்லுங்கள், இது சுதேசி என்று, பெருமிதம் பொங்கச் சொல்லுங்கள், இது சுதேசி என்று, பெருமிதம் பொங்கச் சொல்லுங்கள், இது சுதேசி என்று. ஒரே ஒரு மந்திரம் தான், அது உள்ளூர் பொருட்களுக்கான குரல். ஒரே ஒரு பாதை தான், அது தற்சார்பு பாரதம். ஒரே ஒரு இலக்குத் தான், அது வளர்ச்சியடைந்த பாரதம்.

 

  • இந்த சந்தோஷங்களுக்கு இடையே நீங்கள் அனைவரும் தூய்மை மீது அழுத்தம் அளித்து வாருங்கள், ஏனென்றால், எங்கே தூய்மை இருக்கிறதோ, அங்கே தான் பண்டிகைகளின் ஆனந்தமும் அதிகரிக்கிறது. நண்பர்களே, மனதின் குரலுக்காக எப்போதும் போலவே நீங்கள் அதிக எண்ணிக்கையில் கடிதங்கள் எழுதி வாருங்கள். உங்களுடைய அனைத்து ஆலோசனைகளும் இந்த நிகழ்ச்சிக்கு மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. உங்களுடைய பின்னூட்டங்களை எனக்கு அனுப்பி வாருங்கள். அடுத்த முறை நாம் சந்திக்கும் வேளையிலே, மேலும் புதிய விஷயங்களோடு சந்திப்போம். பலப்பல நன்றிகள். வணக்கம்.

******

 

(Release ID: 2162402)
AD/SG


(Release ID: 2162431) Visitor Counter : 10