பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் பிரதமர் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்

அகமதாபாத்தில் ₹5,400 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி, சாலை, ரயில்வே உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த திட்டங்கள் இதில் அடங்கும்

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக, 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள, சுசுகி நிறுவனத்தின் முதல் உலகளாவிய பேட்டரி மின்சார வாகனமான 'இ விதாரா' வை ஹன்சல்பூரில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

டிடிஎஸ் லித்தியம்-அயன் பேட்டரி ஆலையில் ஹைப்ரிட் பேட்டரி எலக்ட்ரோடுகளின் உள்ளூர் உற்பத்தியை பிரதமர் தொடங்கி வைக்கிறார் - இது பசுமை எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு அடைவதற்கான ஒரு முக்கியப் படியாகும்

Posted On: 24 AUG 2025 1:08PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் குஜராத்திற்குச் செல்கிறார். ஆகஸ்ட் 25-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் அகமதாபாத்தில் உள்ள கோடல்தாம் மைதானத்தில் 5,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றவுள்ளார்.

ஆகஸ்ட் 26-ம் தேதி காலை 10:30 மணியளவில், அகமதாபாத்தின் ஹன்சல்பூரில், பிரதமர் ஹைப்ரிட் பேட்டரி எலக்ட்ரோடுகளின் உள்ளூர் உற்பத்தியைத் தொடங்கி வைக்கிறார். அத்துடன் 100 நாடுகளுக்கு பேட்டரி மின்சார வாகன ஏற்றுமதியைத் தொடங்கி வைத்து இந்த நிகழ்வில் அவர் உரையாற்றுவார்.

உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளுக்கும் போக்குவரத்து இணைப்புக்குமான தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரதமர் 1,400 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல ரயில் திட்டங்களை தேசத்திற்கு அர்ப்பணிக்கிறார். இதில் 530 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 65 கிலோ மீட்டர் மகேசனா-பலன்பூர் ரயில் பாதையை இரட்டிப்பாக்குதல், 37 கிலோ மீட்டர் கலோல்-காடி-கடோசன் சாலை ரயில் பாதையை மேம்படுத்துதல், 860 கோடிக்கு மேல் மதிப்புள்ள 40 கிலோ மீட்டர் பெக்ராஜி-ராணுஜ் ரயில் பாதைப் பணிகள் ஆகியவை அடங்கும். அகலப்பாதை திறன் கூடுதலாக சேர்க்கப்படுவதால், இந்த திட்டங்கள் இந்தப் பிராந்தியத்தில் திறன்வாய்ந்த, பாதுகாப்பான, தடையற்ற போக்குவரத்து இணைப்பை உறுதி செய்யும். இது தினசரி பயணங்கள், சுற்றுலா, வணிகங்களுக்கான பயணம் ஆகியவற்றை கணிசமாக எளிதாக்கும். அதே நேரத்தில் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும். மேலும், கட்டோசன் சாலை - சபர்மதி இடையே பயணிகள் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பது, மத தலங்களுக்கு மேம்பட்ட போக்குவரத்து அணுகலை வழங்கி, பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டும். பெக்ராஜியில் இருந்து கார்களைக் கொண்டு செல்லும் சரக்கு ரயில் சேவை மாநிலத்தின் தொழில்துறை மையங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும். சரக்குப் போக்குவரத்துக் கட்டமைப்பை வலுப்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல், பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துதல், பிராந்திய வளர்ச்சியை விரைவுபடுத்துதல் என்ற தனது தொலைநோக்குப் பார்வையை விரிவுபடுத்தும் வகையில், பிரதமர் விராம்காம்-குதாத்-ராம்புரா சாலையை விரிவுபடுத்தும் பணியைத் தொடங்கி வைப்பார். அகமதாபாத்-மெஹ்சானா-பலன்பூர் சாலையில் ஆறு வழி வாகன சுரங்கப்பாதைகள், அகமதாபாத்-விராம்காம் சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளிட்டவற்றை அமைப்பதற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டுவார். ஒட்டுமொத்தமாக, இந்த முயற்சிகள் தொழில்துறை வளர்ச்சியை அதிகரித்து, போக்குவரத்து திறனையும் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்தும்.

மாநிலத்தில் மின்சாரத்துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக, உத்தர குஜராத் விஜ் கம்பெனி லிமிடெட் (UGVCL) நிறுவனத்தின் கீழ் அகமதாபாத், மெஹ்சானா, காந்திநகர் ஆகிய பகுதிகளுக்கான மின்சார விநியோகத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைப்பார். புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ் மின் இழப்புகளைக் குறைத்தல், கட்டமைப்பை நவீனமயமாக்குதல், உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டங்கள் 1000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலானவை. பாதகமான வானிலையின் போது ஏற்படும் மின் தடைகளை இவை குறைக்கும். பொதுமக்களின் பாதுகாப்பு, மின்மாற்றி பாதுகாப்பு, மின்சார விநியோக கட்டமைப்பின் நம்பகத்தன்மை ஆகியவற்றை இவை மேம்படுத்தும்.

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் குடிசை மறுவாழ்வு அம்சங்களின் கீழ் ராமபிர் நோ டெக்ரோவின் பிரிவு-3-ல் அமைந்துள்ள குடிசைப்பகுதிகளின் மேம்பாட்டுப் பணிகளைப் பிரதமர் தொடங்கி வைப்பார். அகமதாபாத்தைச் சுற்றியுள்ள சர்தார் படேல் சுற்றுவட்டச் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும் செயல்படுத்தப்படும் முக்கிய சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை அமைப்புகளை வலுப்படுத்த முக்கிய நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

நிர்வாகத் திறன் மற்றும் பொது சேவை வழங்கலை வலுப்படுத்தும் வகையில், குஜராத்தில் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மக்களை மையமாகக் கொண்ட சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அகமதாபாத் மேற்குப் பகுதியில் ஒரு புதிய பத்திரப் பதிவு கட்டடம், குஜராத் முழுவதும் பாதுகாப்பான தரவு மேலாண்மை, டிஜிட்டல் நிர்வாக திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக காந்திநகரில் அமைக்கப்படும்  மாநில அளவிலான தரவு சேமிப்பு மையம் ஆகியவை இதில் அடங்கும்.

ஆகஸ்ட் 26-ம் தேதி, அகமதாபாத்தின் ஹன்சல்பூரில் உள்ள சுசுகி மோட்டார் ஆலையில் இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த மைல்கல் முயற்சிகள் அனைத்தும் சேர்ந்து, பசுமை இயக்கத்திற்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுப்பதை எடுத்துக் காட்டுகின்றன. அதே நேரத்தில் இந்தியாவில் தயாரிப்போம், தற்சார்பு இந்தியா ஆகியவற்றிற்கான பிரதமரின் உறுதிப்பாட்டை மேம்படுத்தும்..

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக பிரதமர், சுசுகியின் முதல் உலகளாவிய பேட்டரி மின்சார வாகனமான விதாரா (e VITARA)- வை தொடங்கி வைப்பார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பேட்டரி மின்சார வாகனங்கள் ஐரோப்பா, ஜப்பான் போன்ற மேம்பட்ட சந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த மைல்கல் அம்சத்தின் மூலம், இந்தியா இனி சுசுகியின் மின்சார வாகனங்களுக்கான உலகளாவிய உற்பத்தி மையமாக மாறும்.

பசுமை எரிசக்தித் துறையில் தற்சார்பு அடைவதற்கான பெரிய முன்னேற்றமாக, குஜராத்தில் உள்ள டிடிஎஸ் லித்தியம்-அயன் பேட்டரி ஆலையில் ஹைபிரிட் பேட்டரி மின்முனைகளின் உள்ளூர் உற்பத்தியைத் தொடங்குவதன் மூலம் இந்தியாவின் பேட்டரி சூழல் அமைப்பின் அடுத்த கட்ட வளர்ச்சியை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். தோஷிபா, டென்சோ, சுசுகி ஆகியவற்றின் கூட்டு முயற்சியான இந்த ஆலை, உள்நாட்டு உற்பத்தி மற்றும் சுத்தமான எரிசக்தி கண்டுபிடிப்புகளை அதிகரிக்கும். இந்ந முயற்சி, பேட்டரி மதிப்பில் எண்பது சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்யும்.

***

(Release ID: 2160280)

AD/PLM/RJ


(Release ID: 2160335)