தேர்தல் ஆணையம்
நேர்மையான வாக்காளர் பட்டியல்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றன
வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் கட்சிகள் ஈடுபடுத்தப்படுகின்றன
ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை தீர்த்து வைக்க வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு போதுமான நேரமும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது
Posted On:
16 AUG 2025 8:04PM by PIB Chennai
1. இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேர்தல் முறை, சட்டத்தால் உருவாக்கப்பட்ட பல அடுக்குகளைக் கொண்ட பரவலாக்கப்பட்ட கட்டமைப்பாகும்.
2. தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில், வருவாய்க் கோட்ட அலுவலர் நிலையிலான அதிகாரிகளான தேர்தல் பதிவு அலுவலர்கள், பூத் நிலை அலுவலர்கள் உதவியுடன் வாக்காளர் பட்டியலை தயாரித்து இறுதி செய்கிறார்கள். வாக்காளர் பட்டியல்களின் பிழையற்ற தன்மைக்கான பொறுப்பை தேர்தல் பதிவு அலுவலர்கள் மற்றும் பூத் நிலை அலுவலர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
3. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, அதன் டிஜிட்டல் மற்றும் அச்சிட்ட பிரதிகள் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பகிரப்பட்டு, அனைவரும் பார்க்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. வரைவு வாக்காளர் பட்டியல்
வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பு, உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கு வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு ஒரு மாத கால முழு அவகாசம் அளிக்கப்படுகிறது.
4. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, டிஜிட்டல் மற்றும் அச்சிட்ட பிரதிகள் மீண்டும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் பகிரப்பட்டு இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
5. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு அடுக்கு மேல்முறையீட்டு செயல்முறை வழங்கப்படுகிறது. இதில் முதல் மேல்முறையீடு மாவட்ட நீதிபதியிடமும் இரண்டாவது மேல்முறையீடு ஒவ்வொரு மாநில/யூனியன் பிரதேசத்தின் தலைமை நிர்வாக அதிகாரியிடமும் மேற்கொள்ளப்படலாம்.
6. சட்டம், விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் உச்சபட்ச வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுவது அதன் ஆகச் சிறந்த அடையாளமாக விளங்குகிறது.
7. சில அரசியல் கட்சிகளும் அவற்றின் பூத் லெவல் முகவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்யவில்லை என்றும், பிழைகள் குறித்து, வருவாய்க் கோட்ட அலுவலர் / தேர்தல் பதிவு அலுவலர்கள் / பூத் நிலை அலுவலர்கள் அல்லது தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் சுட்டிக்காட்டவில்லை என்றும் தெரிகிறது.
8. சமீபத்தில், சில அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் கடந்த காலத்தில் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் உட்பட, வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள் குறித்து பிரச்சினைகளை எழுப்புகின்றனர்.
9. வாக்காளர் பட்டியல் தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் எழுப்புவதற்கு பொருத்தமான நேரம், அந்தக் கட்டத்தின் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் காலத்தின் போது இருந்திருக்கும். இதுவே அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுடன் வாக்காளர் பட்டியலைப் பகிர்ந்து கொள்வதன் உண்மையான நோக்கமாகும். சரியான நேரத்தில் சரியான வழிகளில் இந்தப் பிரச்சினைகள் எழுப்பப்பட்டிருந்தால், அது உண்மையானதாக இருக்கும் பட்சத்தில், அந்தத் தேர்தல்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பதிவு அலுவலர்கள் தவறுகளைச் சரிசெய்திருக்க முடியும்.
10. அரசியல் கட்சிகள் மற்றும் எந்தவொரு வாக்காளர்களாலும் வாக்காளர் பட்டியல்கள் பரிசீலனை செய்யப்படுவதை இந்திய தேர்தல் ஆணையம் தொடர்ந்து வரவேற்கிறது. வாக்காளர் பட்டியலைக் குறைகளின்றி தயாரிக்க எண்ணும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நோக்கமாக எப்போதும் இருந்து வரும் கொள்கையின் அடிப்படையில் இத்தகைய பரிசீலனைகள் வருவாய் கோட்ட அலுவலர் / தேர்தல் பதிவு அலுவலர்கள் பிழைகளை நீக்க உதவிகரமாகவும் இருந்திருக்கும்.
***
(Release ID: 2157210)
AD/SM/RJ
(Release ID: 2157264)