பிரதமர் அலுவலகம்
18வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
இந்தியாவில், பாரம்பரியம் புதுமைகளை சந்திக்கிறது, ஆன்மீகம் அறிவியலை சந்திக்கிறது, ஆர்வம் படைப்பாற்றலை சந்திக்கிறது; பல நூற்றாண்டுகளாக, இந்தியர்கள் வானத்தை கவனித்து முக்கிய கேள்விகளைக் கேட்டு வருகின்றனர்: பிரதமர்
உலகின் மிக உயரமான வானியல் ஆய்வகங்களில் ஒன்றை லடாக்கில் நாம் கொண்டிருக்கிறோம், கடல் மட்டத்திலிருந்து 4,500 மீட்டர் உயரத்தில், நட்சத்திரங்களுடன் கைகுலுக்கும் அளவுக்கு அது அருகில் உள்ளது: பிரதமர்
அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதிலும் இளம் மனங்களை மேம்படுத்துவதிலும் இந்தியா ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது: பிரதமர்
நாம் பிரபஞ்சத்தை ஆராயும்போது, விண்வெளி அறிவியலால், பூமியில் உள்ள மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதையும் நாம் கேட்க வேண்டும்: பிரதமர்
சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது, இந்த ஒலிம்பியாட் அந்த உணர்வை பிரதிபலிக்கிறது: பிரதமர்
Posted On:
12 AUG 2025 7:03PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி செய்தி மூலம் 18வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் நிகழ்வில் உரையாற்றினார். இந்த நிகழ்வில், 64 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் இணைவதில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர், சர்வதேச ஒலிம்பியாட் நிகழ்விற்காக இந்தியா வந்துள்ளவர்களை அன்புடன் வரவேற்றார். "இந்தியாவில், பாரம்பரியம் புதுமையையும், ஆன்மீகம் அறிவியலையும், ஆர்வம் படைப்பாற்றலையும் சந்திக்கிறது. பல நூற்றாண்டுகளாக, இந்தியர்கள் வானத்தைக் கவனித்து முக்கிய கேள்விகளை எழுப்பி வருகின்றனர்" என்று திரு. மோடி கூறினார். 5 ஆம் நூற்றாண்டில் பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்து, பூமி அதன் அச்சில் சுழல்கிறது என்று முதன்முதலில் கூறிய ஆர்யபட்டாவின் உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டினார். "உண்மையில், அவர் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி வரலாற்றை உருவாக்கினார்!" என்று பிரதமர் குறிப்பிட்டார்.
"உலகின் மிக உயரமான வானியல் ஆய்வகங்களில் ஒன்றை, லடாக்கில், இந்தியா கொண்டுள்ளது, இது கடல் மட்டத்திலிருந்து 4,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது நட்சத்திரங்களுடன் கைகுலுக்கும் அளவுக்கு அருகில் உள்ளது!" என்று திரு மோடி குறிப்பிட்டார். புனேவில் உள்ள ஜெயண்ட் மீட்டர்வேவ் ரேடியோ தொலைநோக்கி பற்றி அவர் மேலும் எடுத்துரைத்தார், இது உலகின் மிக உணர்திறன் வாய்ந்த ரேடியோ தொலைநோக்கிகளில் ஒன்றாக விவரிக்கப்படுகிறது, இது பல்சர்கள், குவாசர்கள் மற்றும் விண்மீன் திரள்களின் மர்மங்களை டிகோட் செய்வதில் உதவுகிறது. ஸ்கொயர் கிலோமீட்டர் அரே மற்றும் லீகோ-இந்தியா போன்ற உலகளாவிய மெகா-அறிவியல் திட்டங்களுக்கு இந்தியா பெருமையுடன் பங்களிப்பதாக பிரதமர் கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சந்திரயான்-3, சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் பயணமாக மாறி வரலாறு படைத்ததை அவர் நினைவு கூர்ந்தார். சூரிய சுடரொளி வீச்சு, புயல்கள் மற்றும் சூரியனின் மனநிலை மாற்றங்களை கண்காணிக்கும் ஆதித்யா-எல்1 சூரிய சோதனையுடன் இந்தியா சூரியனை நோக்கி தனது பார்வையை திருப்பியுள்ளது என்றும் திரு மோடி மேலும் கூறினார். கடந்த மாதம், குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான தனது வரலாற்றுப் பயணத்தை நிறைவுசெய்ததாகவும், இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணம் என்றும் இளம் ஆய்வாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா, அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதிலும், இளம் மனங்களை மேம்படுத்துவதிலும் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை உறுதிப்படுத்திய பிரதமர், அடல் டிங்கரிங் ஆய்வகங்களில் நேரடி பரிசோதனைகள் மூலம் 10 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் ஸ்டெம் துறை சார்ந்த கருத்துருக்களைப் புரிந்துகொள்கிறார்கள், இதன் மூலம் கற்றல் மற்றும் புதுமை கலாச்சாரத்தை உருவாக்குகிறார்கள் என்பதை எடுத்துரைத்தார். அறிவுசார் அணுகலை மேலும் ஜனநாயகமாக்க, 'ஒரு நாடு ஒரு சந்தா' திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக திரு மோடி தெரிவித்தார். இது மில்லியன் கணக்கான மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு புகழ்பெற்ற சர்வதேச பத்திரிகைகளை இலவசமாக அணுக அனுமதிக்கிறது. ஸ்டெம் களங்களில் பெண்களின் பங்கேற்பில் இந்தியா முன்னணி நாடாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். பல்வேறு முயற்சிகளின் கீழ், ஆராய்ச்சி சூழலியலில் பில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்படுவதாக பிரதமர் கூறினார். உலகெங்கிலும் உள்ள இளம் மனங்கள் இந்தியாவில் படிக்க, ஆராய்ச்சி செய்ய மற்றும் ஒத்துழைக்க அழைப்பு விடுத்தார். "அடுத்த பெரிய அறிவியல் முன்னேற்றம் இதுபோன்ற கூட்டாண்மைகளிலிருந்தும் பிறக்கக்கூடும்!" என்று அவர் மேலும் கூறினார்.
மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் குறிக்கோளுடன் தங்கள் முயற்சிகளை இணைக்க பங்கேற்பாளர்களை ஊக்குவித்த திரு மோடி, விண்வெளி அறிவியலால் பூமியில் வாழ்க்கையை எவ்வாறு மேலும் மேம்படுத்த முடியும் என்பதைக் கருத்தில் கொள்ளுமாறு இளம் ஆய்வாளர்களை வலியுறுத்தினார். விவசாயிகளுக்கு இன்னும் சிறந்த வானிலை முன்னறிவிப்புகளை எவ்வாறு வழங்க முடியும்? இயற்கை பேரழிவுகளை ]கணிக்க முடியுமா? காட்டுத் தீ மற்றும் உருகும் பனிப்பாறைகளை நம்மால் கண்காணிக்க முடியுமா? தொலைதூரப் பகுதிகளுக்கு சிறந்த தகவல்தொடர்புகளை உருவாக்க முடியுமா? போன்ற சில முக்கியமான கேள்விகளை அவர் எழுப்பினார். அறிவியலின் எதிர்காலம் இளம் மனங்களின் கைகளிலும், கற்பனை மற்றும் இரக்கத்துடன் நிஜ உலகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் உள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார். "வெளியே என்ன இருக்கிறது?" என்று கேட்கவும், பூமியில் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அது எவ்வாறு உதவும் என்பதைப் பற்றி சிந்திக்கவும் அவர் அவர்களை வலியுறுத்தினார்.
"சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது, மேலும் இந்த ஒலிம்பியாட் அந்த உணர்வை பிரதிபலிக்கிறது" என்று பிரதமர் கூறினார். இந்த ஒலிம்பியாட் இதுவரை நடந்தவற்றிலேயே மிகப்பெரியது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம் மற்றும் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் நிறுவனத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார். பங்கேற்பாளர்கள் உயர்ந்த இலக்கை அடையவும் பெரிய கனவு காணவும் திரு மோடி ஊக்குவித்தார். "மேலும் நினைவில் கொள்ளுங்கள், இந்தியாவைப் பொறுத்தவரையில், வானம் என்பது எல்லை அல்ல, அது வெறும் ஆரம்பம் தான் என்று நாங்கள் நம்புகிறோம்!" என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
****
AD/BR
(Release ID: 2155927)
Read this release in:
Odia
,
Malayalam
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Kannada