பாதுகாப்பு அமைச்சகம்
உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தியின் மூலம் எதிரிகளைத் தோற்கடிக்கும் திறனை இந்தியா கொண்டுள்ளது என்பதற்கு ஆபரேஷன் சிந்தூர் சான்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
Posted On:
10 AUG 2025 2:18PM by PIB Chennai
இந்தியா தனது எதிரிகளை உள்நாட்டு வலிமையுடன் தோற்கடிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பதற்கு ஆபரேஷன் சிந்தூர் சான்றாகும் என்று மத்திய பாதுகாப்பு த் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மத்தியப் பிரதேசத்தின் உமாரியாவில் இன்று (ஆகஸ்ட் 10, 2025) பிஇஎம்எல் (BEML - Bharat Earth Movers Limited) நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும், பிஇஎம்எல் ரயில் ஹப் ஃபார் மேனுஃபேக்ச்சரிங் (BEML Rail Hub for Manufacturing - BRAHMA - பிரஹ்மா) நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டி அவர் பேசினார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான, கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒரு பொருத்தமான பதிலடி என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் தீர்க்கமான பதிலடி அதன் ஒருமைப்பாடு மீதும் இறையாண்மையின் மீதுமான தாக்குதலை இனி இந்தியா பொறுத்துக்கொள்ளாது என்ற உரத்த, தெளிவான செய்தியை வெளிப்படுத்தியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்தியா பிற நாடுகளை ஆக்கிரமித்து தாக்குவதில்லை எனவும் ஆனால் இந்தியா மீது ஆக்கிரமிப்பு செய்து தாக்குதல் நடத்துபவர்கள் தப்ப முடியாது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் தன்னம்பிக்கையின் சின்னமாக ஆபரேஷன் சிந்தூரை விவரித்த பாதுகாப்பு அமைச்சர், ஆயுதப்படைகள் உள்நாட்டு உபகரணங்களை திறம்பட பயன்படுத்தியதாகவும், அந்த உபகரணங்கள் இந்த நடவடிக்கையின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததாகவும் வலியுறுத்தினார். பாதுகாப்புத் துறையில் தற்சார்பு அடைய உறுதியுடன் செயல்படுவதால்தான் இந்தியா இந்த நிலையை அடைய முடிந்தது என்று அவர் கூறினார்.
பாதுகாப்புத் துறையின் மாற்றத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடியின் துடிப்பான தலைமைத்துவமும் தொலைநோக்குப் பார்வையுமே காரணம் என்று கூறிய திரு ராஜ்நாத் சிங், இப்போது உள்நாட்டிலேயே பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி செய்யப்படுவது மட்டுமல்லாமல், நட்பு நாடுகளின் பாதுகாப்புத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது என்று கூறினார். நமது பாதுகாப்பு உற்பத்தியும் ஏற்றுமதியும் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் அதிகரித்து சாதனை அளவைத் தொட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது புதிய இந்தியாவின் புதிய பாதுகாப்புத் துறை என்றும் அவர் கூறினார். 2024-25 நிதியாண்டில், ஆண்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு ₹1.51 லட்சம் கோடியாகவும், பாதுகாப்பு ஏற்றுமதி ₹23,622 கோடியாகவும் உயர்ந்தது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்ப அடித்தளத்தை உருவாக்குவதில் பிரஹ்மா (BRAHMA) போன்ற முன்முயற்சிகள் மிக முக்கியமானவை என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார். பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதில் பிஐஎம்எல்-ன் பங்கை அவர் பாராட்டினார். பிரஹ்மா திட்டம் உலகளாவிய போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதுடன் பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்களின் நிலையை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார். தொழில்துறை மற்றும் பாதுகாப்பு தன்னிறைவை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் பிஇஎம்எல் ஒரு தூணாக நிற்கிறது என அவர் தெரிவித்தார். பிரஹ்மா போன்ற திட்டங்கள், தன்னிறைவு, உலக அளவில் போட்டித்தன்மை, எதிர்காலத்திற்கு தயாரான நிலை ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்றன என அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு மற்றும் சிவில் துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பிஇஎம்எல்-ன் பங்களிப்பைப் பாராட்டிய திரு ராஜ்நாத் சிங், இதில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேலும் வலுப்படுத்த வேண்டும் அழைப்பு விடுத்தார்.
விழாவில் வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், ரயில்வே, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், பாதுகாப்பு உற்பத்தித் துறைச் செயலாளர் திரு சஞ்சீவ் குமார், பிஇஎம்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு சாந்தனு ராய், மற்றும் பிற மூத்த மத்திய, மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிஇஎம்எல் ரயில் பெட்டி உற்பத்தி மையம் பற்றி:
பிரஹ்மா வசதி 148 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரம் வாய்ந்த ரோலிங் ஸ்டாக் உற்பத்தி பிரிவாக உருவாக்கப்படும். இதற்கான பணிகள் சுமார் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த உற்பத்தி பிரிவை முழுமையாக நிறுவ, அடுத்த சில ஆண்டுகளில் கட்டம் கட்டமாக ₹1,800 கோடியை முதலீடு செய்ய பிஐஎம்எல் திட்டமிட்டுள்ளது. ஆரம்பத்தில் ஆண்டுக்கு 125-200 பெட்டிகளை உற்பத்தி செய்யும் அதன் திறன் ஐந்து ஆண்டுகளுக்குள் ஆண்டுக்கு 1,100 பெட்டிகளாக அதிகரிக்கும். இந்த உற்பத்திப் பிரிவு வந்தே பாரத் ரயில் பெட்டிகள், மெட்ரோ பெட்டிகள், அதிவேக ரயில் பெட்டிகள், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்கான பிற மேம்பட்ட பெட்டிகளை உற்பத்தி செய்யும். இது 5,000-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். இந்தியாவின் பசுமை உற்பத்தி இலக்குகளுக்கு இணங்க, இந்த உற்பத்திப் பிரிவு மிக உயர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணங்க அமைக்கப்படும்.
****
(Release ID: 2154834)
AD/SM/PLM/SG
(Release ID: 2154906)