உள்துறை அமைச்சகம்
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை
Posted On:
23 JUL 2025 1:42PM by PIB Chennai
பாரதிய நியாய சட்டம், 2023-ல், முதல் முறையாக, பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்பான விதிகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு, அது தொடர்பான பிரிவுகள் அனைத்தும் ஒரே அத்தியாயத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இத்தகைய பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்க வகை செய்யப்பட்டுள்ளன. 18 வயதுக்குட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனை அந்த நபரின் இயல்பான வாழ்க்கையின் எஞ்சிய ஆயுட்காலம் அல்லது மரணம் வரை ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்கிறது. திருமணம், வேலைவாய்ப்பு, பதவி உயர்வு போன்ற ஆசை வார்த்தைகள் கூறி அல்லது அடையாளத்தை மறைத்து பாலியல் உறவு கொள்வது போன்ற புதிய குற்றச் செயல்களும் பாரதிய நியாய சட்டம், 2023-ல் இணைக்கப்பட்டுள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்களில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மனிதர்களை கடத்துவது போன்ற குற்றத்தைத் தடுப்பதற்கும், அது போன்ற செயல்களை எதிர்கொள்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. பாரதிய நியாய சட்டம், 2023-ன் பிரிவு 143-ல் மனிதர்களை கடத்தும் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனையை வழங்கும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. குழந்தை கடத்தல் சம்பந்தப்பட்ட குற்றத்தில், 10 ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஆனால் அது ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் வரை நீட்டிக்கப்படலாம். 'பிச்சை எடுப்பது' என்பது கடத்தலுக்கான ஒரு சுரண்டல் வடிவமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாரதிய நியாய சட்டம், 2023-ன் பிரிவு 143-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். கூடுதலாக, பாரதிய நியாய சட்டம், 2023-ன் பிரிவு 144 (1)-ன் கீழ், கடத்தப்பட்ட குழந்தைகளை பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தும் குற்றத்திற்கு கடும் தண்டனை வழங்க வகை செய்கிறது. அத்தகைய குற்றங்களுக்கான குறைந்தபட்ச தண்டனை ஐந்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
----
(Release ID: 2147185)
VL/SV/KPG/DL
(Release ID: 2147501)