வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பங்கேற்பு; இளைஞர்களுக்கு மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் அழைப்பு

Posted On: 18 JUL 2025 1:16PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று நொய்டாவில் இந்தியாவின் சர்வதேச ஐக்கிய நாடுகள் இயக்கம் -2025 மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், அமிர்த காலத்திற்கான ஐந்து உறுதிமொழிகளின்படி, 2047 ஆம் ஆண்டுக்குள்  வளர்ச்சியடைந்த  பாரதத்தை உருவாக்குவதற்கு இளைஞர்கள் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியா ஒரு பெரிய மாற்றத்தின் உச்சத்தில் நிற்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய திரு கோயல், 2022 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் ஆற்றிய உரையை நினைவு கூர்ந்தார். 2047-ம் ஆண்டு இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவிற்கு வழிவகுக்கும் அமிர்த காலத்தின்  25 ஆண்டு காலம் நாட்டிற்கு ஒரு தீர்க்கமான தருணம் என்று அவர் கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த  நாடாக மாற்றுவதற்கு இளைஞர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

ஐந்து உறுதிமொழிகளில் முதலாவது, இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான உறுதிமொழி என்று அவர் விளக்கினார். அடுத்த சில தசாப்தங்களில் இளைஞர்கள் இந்த மாற்றத்தின் முதன்மை உந்து சக்திகளாக அவர்கள் இருப்பார்கள் என்றார். மீதமுள்ள நான்கு உறுதிமொழிகளையும் சமமான தீவிரத்துடன் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்த உறுதிமொழியை நிறைவேற்ற முடியும் என்று அவர் கூறினார்.

இரண்டாவது உறுதிமொழி, காலனித்துவ மனநிலையை கைவிடுவதாகும் என்று அமைச்சர் திரு கோயல் குறிப்பிட்டார். உலகளாவிய பொருளாதார சக்தியாக இந்தியாவின் வளமான வரலாற்றைக் குறிப்பிடுகையில், பல நூற்றாண்டுகளாக காலனித்துவ அடிமைத்தனம் நம்பிக்கையை  அழித்து, கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்றார். கடந்த காலத்தின் கட்டுப்பாடுகளால் நாம் கட்டுப்படக்கூடாது, மாறாக உலகளாவிய அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும், லட்சிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மூன்றாவது உறுதிமொழி இந்தியாவின் பாரம்பரியத்தில் பெருமை கொள்வது பற்றியது. வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதை நோக்கி நாம் நகரும்போது இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம், மரபுகள் மற்றும் மதிப்பு அமைப்புகள் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன என்று திரு கோயல் கூறினார்.

நான்காவது உறுதிமொழியைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று  கூறினார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இளைஞர்களை ஈடுபடுத்தும் ஐஐஎம்யூஎன் முயற்சிகளைப் பாராட்டிய திரு கோயல், இந்த ஒற்றுமை இந்தியாவின் மிகப்பெரிய பலம் என்றும், ஒவ்வொரு மட்டத்திலும் வளர்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான நாட்டின் பயணத்திற்கு இந்தக் கூட்டு மனப்பான்மை அடிப்படையானது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ஐந்தாவது உறுதிமொழி, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்க 1.4 பில்லியன் இந்தியர்களின் கூட்டுத் தீர்மானமாகும் என்று அமைச்சர் கூறினார். அனைத்து மக்களும் ஒரு குடும்பத்தைப் போல, பகிரப்பட்ட பொறுப்புடன் ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக முடியும் என்பதை திரு கோயல் வலியுறுத்தினார்.

தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியை ஒரு கடமையாக ஏற்றுக்கொள்ளவும், ஒவ்வொரு பணியையும் அர்ப்பணிப்புடன் செய்யவும் இளைஞர்களை அமைச்சர் வலியுறுத்தினார். 

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளின் பங்களிப்புகள் பெரும்பாலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும், தனிநபர்கள் மற்றும் தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று அமைச்சர் கூறினார். இந்தப் பிணைப்பை வாழ்க்கையில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் நீடித்த உறவுகளில் ஒன்றாக அவர் விவரித்தார்.

பொது வாழ்வில் பங்கேற்பதை தீவிரமாக பரிசீலிக்குமாறும் திரு. கோயல் இளைஞர்களை வலியுறுத்தினார். 2024 சுதந்திர தினத்தன்று பிரதமரின் உரையை நினைவு கூர்ந்த அவர், மாற்றத்தின் முகவர்களாக மாற ஒரு லட்சம் இளைஞர்களும் பெண்களும் அரசியலிலும் பொது சேவையிலும் நுழைய பிரதமர் அழைப்பு விடுத்ததைக் குறிப்பிட்டார். கருணை, அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மையுடன் கொள்கை வகுப்பதில் பங்களிக்க திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள நபர்கள் தேவை என்று அவர் கூறினார்.

நாளைய இந்தியாவின் மாற்றத்தை உருவாக்குபவர்களாகவும், இயக்குபவர்களாகவும் இருங்கள். கூட்டு உறுதியுடன், நாம் ஒவ்வொரு சவாலையும் கடந்து நமது நாட்டை உயர்ந்த உச்சத்திற்கு அழைத்துச் செல்ல முடியும் என்று கூறி, இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று திரு கோயல் வலியுறுத்தினார்.

----

(Release ID 2145739)

AD/TS/PKV/KPG/RJ

 


(Release ID: 2145873) Visitor Counter : 4