குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

தூய்மை நமது கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது – குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

Posted On: 17 JUL 2025 1:58PM by PIB Chennai

தூய்மை நமது கலாச்சார, ஆன்மீக உணர்வுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறியுள்ளார். 2024-ம் ஆண்டுக்கான  தூய்மை கணக்கெடுப்பு (ஸ்வச் சர்வேக்ஷன்) விருதுகளை புதுதில்லியில் இன்று (17.07.2025) அவர் வழங்கினார்.  நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், நமது நகரங்களில் தூய்மைக்கான  முயற்சிகளை ஊக்குவிப்பதில் இந்த விருதுகள் வெற்றிகரமான  நடைமுறையாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். கடந்த ஆண்டு  உலகின் மிகப்பெரிய தூய்மை ஆய்வை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் இணைந்து சுமார் 14 கோடி மக்களின் பங்களிப்புடன் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மேற்கொண்டதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.

தெய்வீகத்திற்கு இணையாக தூய்மையை மகாத்மா காந்தி வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார். இன்றைய காலகட்டத்தில் நமது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பது நமது கடமை என்று அவர் தெரிவித்தார். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களுக்கு 2022-ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்ததை அவர் சுட்டிக்காட்டினார். அதே ஆண்டில் நெகிழிப் பொருட்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டதை அவர் குறிப்பிட்டார். உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இந்த நெறிமுறைகைளை  பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கழிவுகளைக் குறைத்து மறு பயன்பாட்டையும், மறு சுழற்சியையும், அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதுவே சுழற்சிப் பொருளாதாரத்தில் அடிப்படைத் தத்துவம் என்று  அவர் கூறினார். பாரம்பரிய வாழ்க்கை முறையிலிருந்து பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொண்டு நவீன மறுசுழற்சி நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 2047-ம் ஆண்டுக்குள் உலகின் மிகவும் தூய்மையான நாடுகளுள் ஒன்றாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்று தீர்மானத்துடன் அனைவரும் செயல்படவேண்டும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு அறிவுறுத்தினார்.

-----

(Release ID: 2145459)

AD/TS/PLM/KPG


(Release ID: 2145504) Visitor Counter : 22