ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய ஜவுளி அமைச்சர் திரு கிரிராஜ் சிங் ஜப்பான் பயணம் – ஜவுளித்துறை தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு

Posted On: 15 JUL 2025 2:48PM by PIB Chennai

மத்திய ஜவுளி அமைச்சர் திரு கிரிராஜ் சிங் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றார். டோக்கியோ நகரில் மகாத்மா காந்தி சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்ற அமைச்சர் திரு கிரிராஜ் சிங், இந்தியா-ஜப்பான் உறவுகள், ஜவுளித்துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

தொடர்ந்து உலகின் முன்னணி ஆடை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான பாஸ்ட் ரீடெய்லிங் நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான தடாஷி யனாயை சந்தித்தார். அந்த நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் சில்லரை விற்பனை நடவடிக்கைகளை இந்தியாவில் விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.

முன்னணி ஜவுளி வர்த்தக நிறுவனமான ஸ்டைலம் கம்பெனி நிறுவனத்தின் தலைமைக் குழுவையும் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் சந்தித்தார். இந்தியாவுடனான வர்த்தக தொடர்பை அதிகரிக்கும் வகையில், பிரதமரின் மித்ரா ஜவுளிப் பூங்கா மற்றும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து அந்தக் குழுவினரிடம் அமைச்சர் எடுத்துரைத்தார்.

இந்தியாவில் 200 பருத்தி பொருள் உற்பத்தி கடைகளை திறக்க முடிவு செய்துள்ள டெய்சோ தொழில் நிறுவனங்களின் இயக்குநர்களையும் அமைச்சர் சந்தித்தார். இந்தியாவின் ஜவுளி உட்கட்டமைப்பு மற்றும் சலுகைகளை பயன்படுத்துமாறும் அவர்களுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார். தொழில்நுட்ப ஜவுளி, நார் உற்பத்தி, ஜவுளி எந்திரங்களில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் ஜப்பான் நாட்டின் முக்கிய ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் தலைமை வகித்தார். மத்திய ஜவுளித் துறை கூடுதல் செயலாளர் திரு ரோஹித் கன்சால், இந்திய தூதர் திரு சிபி ஜார்ஜ் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144827

***

AD/TS/SM/GK/AG/KR


(Release ID: 2144908) Visitor Counter : 9