ஊரக வளர்ச்சி அமைச்சகம்
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய வளர்ச்சியடைந்த கிராமங்களை கட்டமைக்க வேண்டும்: மத்திய இணையமைச்சர் திரு பெம்மசானி சந்திரசேகர்
Posted On:
14 JUL 2025 2:07PM by PIB Chennai
2047-ம் ஆண்டுக்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற இலக்கை அடைய வளர்ச்சியடைந்த கிராமங்களை கட்டமைக்க வேண்டும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு பெம்மசானி சந்திரசேகர் அழைப்பு விடுத்துள்ளார்.
புதுதில்லியில் இன்று நடைபெற்ற ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் செயல்திறன் குறித்த ஆய்வுக்குழுவின் முதலாவது கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், உறுதியான வீடு, தரமான சாலைகளால் இணைக்கப்பட்ட கிராமம், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள், அதிகாரம் பெற்ற மற்றும் நிதி ரீதியாக சுதந்திரமான பெண்களைக் கொண்ட 'வளர்ச்சியடைந்த கிராமம்' என்பது தொலைதூரக் கனவு அல்ல என்றும், அதை அடையக்கூடிய ஒன்று என்றும் கூறினார். அதற்கு புத்துணர்ச்சியுடன் கூடிய ஆற்றல், புதுமை கண்டுபிடிப்புடன் கூடிய சிந்தனை மற்றும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நாம் பணியாற்ற வேண்டும் என்பது தேவைப்படுகிறது.
இந்த இலக்கை அடைவதில் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் பங்கை வலியுறுத்திய அமைச்சர், நாங்கள் திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமல்லாமல், இந்தியாவின் வளர்ச்சிக் கதையின் அடுத்த அத்தியாயத்தை எழுதுகிறோம் என்று தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோரின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், கிராமப்புற வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் என்று அமைச்சர் கூறினார். அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களின் சாதனைகளை விவரித்த திரு. பெம்மசானி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் கிராமப்புற வேலையின்மை மற்றும் கட்டாய இடம்பெயர்வுக்கு எதிராக, குறிப்பாக வேளாண் பற்றாக்குறை காலங்களில் ஒரு வலுவான ஆயுதமாக செயல்படுகிறது என்று கூறினார்.
ஆண்டுக்கு ரூ.90,000 முதல் ரூ.1,00,000 கோடி வரை முதலீட்டில், நீடித்த மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட சொத்துக்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கிறது. ஆண்டுதோறும் 250 கோடிக்கும் அதிகமான மனித நாட்கள் உருவாக்கப்படுகின்றன, மேலும் 36 கோடிக்கும் அதிகமான பணி அட்டைகள் வழங்கப்படுகின்றன. மேலும் 15 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் தொடர்ந்து பயனடைகிறார்கள் என்று அவர் தெரிவித்தார். பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம் பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர், குடிசை வீடு அல்லது பாழடைந்த வீடுகளில் வசிக்கும் கிராமப்புற குடும்பங்களுக்கு 3.22 கோடிக்கும் மேற்பட்ட உறுதியான வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும், குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் கிராமப்புற மக்கள்தொகை விரிவாக்கம் காரணமாக அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய 2029-ம் ஆண்டுக்குள் மேலும் 2 கோடி வீடுகளைக் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் பிராந்தியம் சார்ந்த குறிப்பிட்ட கட்டுமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதையும் செலவு குறைந்த வீட்டு வடிவமைப்புகளையும் ஊக்குவிக்க அமைச்சர் பரிந்துரைத்தார். பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இதுவரை 7.56 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான கிராமப்புற சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144483
***
TS/SM/IR/LDN/KR
(Release ID: 2144540)