பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நமீபியா நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரை

Posted On: 09 JUL 2025 10:14PM by PIB Chennai

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,

மாண்புமிகு  பிரதமர் அவர்களே,

மாண்புமிகு துணைப் பிரதமர் அவர்களே,

மதிப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களே,

எனது அன்பான சகோதர சகோதரிகளே,

ஓம்வா உஹாலா போ நவா?

மதிய வணக்கம்!

 

ஜனநாயகத்தின் கோவிலான இந்த உன்னதமான சபையில் உரையாற்றுவது ஒரு பெரிய பாக்கியம். இந்த மரியாதையை எனக்கு வழங்கியதற்கு நன்றி.

ஜனநாயக அன்னையின்பிரதிநிதியாக நான் உங்கள் முன் நிற்கிறேன். மேலும், இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் அன்பான வாழ்த்துக்களை என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன்.

இந்த மகத்தான தேசத்திற்கு சேவை செய்ய மக்கள் உங்களுக்கு ஆணையை வழங்கியுள்ளனர்.  உங்கள் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

நண்பர்களே,

சில மாதங்களுக்கு முன்பு, நீங்கள் ஒரு வரலாற்று தருணத்தைக் கொண்டாடினீர்கள். நமீபியா அதன் முதல் பெண் அதிபரைத் தேர்ந்தெடுத்தது.  உங்கள் பெருமையையும் மகிழ்ச்சியையும் நாங்கள் புரிந்துகொண்டு பகிர்ந்து கொள்கிறோம். ஏனென்றால் இந்தியாவில் குடியரசுத் தலைவரும் ஒரு பெண் என்பதை நாங்களும் பெருமையுடன் சொல்கிறோம்.

ஏழை பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த மகள் இன்று இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருப்பது இந்திய அரசியலமைப்பின் அதிகாரம். இந்த அரசியலமைப்புச் சட்டமே என்னைப் போன்ற ஒருவருக்கு பிரதமராகும் வாய்ப்பைக் கொடுத்தது. ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, மூன்று முறை. உங்களிடம் எதுவும் இல்லாதபோது, அரசியலமைப்பு உங்களுக்கு அனைத்தையும் வழங்குகிறது.

மதிப்புமிக்க உறுப்பினர்களே,

இந்த உன்னதமான அவையில் நான் நிற்கும்போது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் மறைந்த நமீபியாவின் முதல் அதிபர் சாம் நுஜோமாவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

நீதியைநிலைநிறுத்தும் சுதந்திரமான தேசம் பற்றிய அவரது தொலைநோக்கு பார்வை நம் அனைவரையும் தொடர்ந்து ஊக்குவிக்கிறது. உங்கள் சுதந்திரப் போராட்டத்தின் கதாநாயகர்கள் - ஹோசியா குடாகோ, ஹென்ட்ரிக் விட்பூய், மண்டுமே யா நெடெமுஃபாயோ மற்றும் பலரின் நினைவுகளையும் நாங்கள் மதிக்கிறோம்.

உங்கள் விடுதலைப் போராட்டத்தின் போது இந்திய மக்கள் நமீபியாவுடன் பெருமையுடன் நின்றார்கள். நமது சொந்த சுதந்திரத்திற்கு முன்பே, ஐக்கிய நாடுகள் சபையில் தென்மேற்கு ஆப்பிரிக்காவின் பிரச்சினையை இந்தியா எழுப்பியது.

உங்களுடன் வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல, செயலிலும் உடன் நின்றதில் இந்தியா பெருமை கொள்கிறது.

இன்று, இந்த நாடாளுமன்றமும், இந்த சுதந்திரமான மற்றும் பெருமைமிக்க நமீபியாவும் வாழும் நினைவுச்சின்னங்கள்.

மதிப்புமிக்க உறுப்பினர்களே,

இந்தியாவிற்கும் நமீபியாவிற்கும் நிறைய பொதுவான அம்சங்கள் உள்ளன. இரு நாடுகளும்  காலனித்துவ ஆட்சியை எதிர்த்துப் போராடின. நாம் கண்ணியத்தையும் சுதந்திரத்தையும் மதிக்கிறோம். சமத்துவம், சுதந்திரம் மற்றும் நீதியை நிலைநிறுத்த நமது அரசியலமைப்புகள் நம்மை வழிநடத்துகின்றன. நாம் உலகளாவிய தெற்கின் ஒரு பகுதியாக இருக்கிறோம், மேலும் நமது  மக்கள் ஒரே நம்பிக்கைகளையும் கனவுகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இன்று, எங்கள் மக்களுக்கு இடையிலான நட்பின் அடையாளமாக நமீபியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நமீபியாவின் உறுதியான மற்றும் நேர்த்தியான தாவரங்களைப் போலவே, எங்கள் நட்பும் காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கிறது. இது வறண்ட பருவங்களிலும் அமைதியாக செழித்து வளர்கிறது. மேலும், உங்கள் தேசிய தாவரமான வெல்விட்சியா மிராபிலிஸைப் போலவே, இது வயது மற்றும் காலத்திற்கு ஏற்ப வலுவடைகிறது. இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் சார்பாக, இந்த கௌரவத்திற்காக அதிபர்,அரசு மற்றும் நமீபியா மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன்.

நண்பர்களே,

இந்தியா நமீபியாவுடனான அதன் வரலாற்று உறவுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. கடந்த கால உறவுகளை நாங்கள் மதிப்பது மட்டுமல்லாமல், எங்கள் பகிரப்பட்ட எதிர்காலத்தின் திறனை உணர்ந்து கொள்வதிலும் கவனம் செலுத்துகிறோம்.

இந்தியாவில் உதவித்தொகை மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களால் 1700 க்கும் மேற்பட்ட நமீபியர்கள் பயனடைந்துள்ளனர். அடுத்த தலைமுறை நமீபிய விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் தலைவர்களை ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஐடியில் சிறந்த மையம், நமீபியா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள இந்தியப் பிரிவு மற்றும் பாதுகாப்பில் பயிற்சி ஆகியவை ஒவ்வொன்றும் திறன்தான் சிறந்த உத்தி என்ற எங்கள் பகிரப்பட்ட நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன.

உத்திகளைப் பற்றிப் பேசுகையில், இந்தியாவின் யுபிஐ-யை ஏற்றுக்கொண்ட நமீபியா பிராந்தியத்தில்முதல் நாடுகளில் ஒன்றாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நமது இருதரப்பு வர்த்தகம் 800 மில்லியனைத் தாண்டியுள்ளது..

புதிய தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் மூலம் நமீபியாவின் இளைஞர்களை ஆதரிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். வர்த்தக நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல், நிதி மற்றும் நண்பர்களையும் பெறக்கூடிய இடமாக இது இருக்கும்.

சுகாதாரம் எங்கள் பகிரப்பட்ட முன்னுரிமையின் மற்றொரு தூண். இந்தியாவின் சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் கிட்டத்தட்ட 500 மில்லியன் மக்களை உள்ளடக்கியது. ஆனால் இந்தியாவின் சுகாதார அக்கறை இந்தியர்களுக்கு மட்டும் என கட்டுப்படுத்தப்படவில்லை.

இந்தியாவின் நோக்கம் - "ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்" என்பது ஆரோக்கியத்தை ஒரு பகிரப்பட்ட உலகளாவிய பொறுப்பாகக் கருதுகிறது.

தொற்றுநோய் காலத்தில், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை வழங்குவதில் நாங்கள் ஆப்பிரிக்காவுடன் துணை நின்றோம் - எங்கள் "ஆரோக்கிய தோழமை" முயற்சி ஆப்பிரிக்காவை மருத்துவமனைகள், உபகரணங்கள், மருந்துகள் மற்றும் பயிற்சியுடன் ஆதரிக்கிறது. மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்காக நமீபியாவிற்கு ஒரு பாபட்ரான் கதிரியக்க சிகிச்சை இயந்திரத்தை வழங்க இந்தியா தயாராக உள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த இயந்திரம், 15 நாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு நாடுகளில் கிட்டத்தட்ட அரை மில்லியன் நோயாளிகளுக்கு முக்கியமான புற்றுநோய் சிகிச்சைக்கு உதவியுள்ளது.

மலிவு விலையில் தரமான மருந்துகளை பெறுவதற்காக மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் சேர நமீபியாவையும் நாங்கள் அழைக்கிறோம். இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியாவில் மருந்துகளின் விலை 50 முதல் 80 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இது தினமும் 1 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்கு உதவுகிறது. இதுவரை இது நோயாளிகளுக்கு கிட்டத்தட்ட 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை சுகாதாரச் செலவுகளில் சேமிக்க உதவியுள்ளது.

நண்பர்களே,

எங்கள் நாட்டில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்த நீங்கள் எங்களுக்கு உதவியபோது, இந்தியாவும் நமீபியாவும் ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் இரக்கத்தின் சக்திவாய்ந்த நிகழ்வை அரங்கேற்றின. உங்கள் பரிசுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். குனோ தேசிய பூங்காவில் அவற்றை விடுவிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

நண்பர்களே,

சர்வதேச சூரிய சக்தி கூட்டணி மற்றும் பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி போன்ற முயற்சிகள் மூலம் நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம். இன்று நமீபியா உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியிலும், சர்வதேச பெரும் பூனைகள்(புலிகள்)கூட்டணியிலும் இணைந்துள்ளது.

நண்பர்களே,

2018 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்காவுடனான எங்கள் ஈடுபாட்டின் பத்து கொள்கைகளை நான் வகுத்திருந்தேன். இன்றுஅவற்றுக்கான இந்தியாவின் முழு அர்ப்பணிப்பையும் நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். அவை மரியாதை, சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மையை அடிப்படையாகக் கொண்டவை. நாங்கள் போட்டியிட விரும்பவில்லை, ஒத்துழைக்க முயல்கிறோம். ஒன்றாகக் கட்டியெழுப்புவதே எங்கள் குறிக்கோள்.

ஆப்பிரிக்காவில் எங்கள் வளர்ச்சி ஒத்துழைப்பு12 பில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புடையது. ஆனால் அதன் உண்மையான மதிப்பு பகிரப்பட்ட வளர்ச்சி மற்றும் பகிரப்பட்ட நோக்கத்திலானது. உள்ளூர் திறன்களை உருவாக்குவது, உள்ளூர் வேலைகளை உருவாக்குவது மற்றும் உள்ளூர் கண்டுபிடிப்புகளை ஆதரிப்பது ஆகியவற்றில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.

நண்பர்களே,

20 ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் சுதந்திரம் ஒரு தீப்பொறியை ஏற்றியது - இது ஆப்பிரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள சுதந்திர இயக்கங்களுக்கு உத்வேகம் அளித்தது.21 ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் வளர்ச்சி ஒரு பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, உலகளாவிய தெற்கு அதன் சொந்த எதிர்காலத்தை உயர்த்தவும், வழிநடத்தவும், வடிவமைக்கவும் முடியும் என்பதைக் காட்டுகிறது. செய்தி என்னவென்றால் - உங்கள் அடையாளத்தை இழக்காமல், உங்கள் சொந்த விதிமுறைகளின்படி நீங்கள் வெற்றிபெற முடியும்.

இந்தச் செய்தி சத்தமாக எதிரொலிக்க, நாம் ஒன்றாகச் செயல்பட வேண்டும்.

இந்தக் கௌரவத்திற்கு மீண்டும் ஒருமுறை நன்றி.

டாங்கி உனேனே!

(Release ID: 2143585)

AD/TS/PKV/KR


(Release ID: 2143720)