பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலேயை பிரதமர் சந்தித்தார்

Posted On: 06 JUL 2025 1:48AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி அர்ஜெண்டினா அதிபர் திரு ஜேவியர் மிலேயை சந்தித்தார். காசா ரோசாடாவுக்கு அவர் வந்தடைந்தபோது, ​​அதிபர் மிலே அவரை அன்புடன் வரவேற்றார். முன்னதாக பியூனஸ் அயர்ஸ் வந்தடைந்த பிரதமருக்கு, பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. 57 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினாவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும் என்பதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாடுகளும் தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 75 ஆண்டுகளைக் கொண்டாடும் இந்த ஆண்டு இந்தியா-அர்ஜெண்டினா உறவுகளுக்கு இது ஒரு முக்கிய ஆண்டாகும். தமக்கும் தமது தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

 

இரு தலைவர்களும் பிரதிநிதிகள் நிலையில் பேச்சு நடத்தினர். அவர்கள் விரிவான விவாதங்களை நடத்தி இருதரப்பு உறவுகள் குறித்து ஆய்வு செய்தனர். முக்கிய கனிமங்கள், எண்ணெய், எரிவாயு, பாதுகாப்பு, அணுசக்தி, விவசாயம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விவசாயத்தில் ட்ரோன்களின் பயன்பாடு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, யுபிஐ, விண்வெளி, ரயில்வே, மருந்து, விளையாட்டு, மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த அவர்கள் ஒப்புக் கொண்டனர். தற்போதைய பொருளாதார ஒத்துழைப்பை தலைவர்கள் ஆய்வு செய்தனர். இருதரப்பு வர்த்தகம் நிலையான பாதையில் இருந்தாலும், வணிக ஈடுபாட்டின் முழு திறனையும் பயன்படுத்த இரு தரப்பினரும் வர்த்தகத்தைப் பல்வகைப்படுத்துவதற்குப் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த சூழலில், இந்தியா-மெர்கோசூர் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

பஹல்காமில் நடந்த கொடூர பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்ததற்காக அர்ஜெண்டினா அதிபர் திரு மிலேக்கு, பிரதமர் நன்றி தெரிவித்தார். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு அர்ஜெண்டினாவின் ஆதரவைப் பாராட்டினார். பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்த தொடர்ந்து நெருக்கமாக பணியாற்ற இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். உலகளாவிய தென் பகுதி நாடுகளின் கவலைகளுக்கு குரல் கொடுக்க அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

பிரதமர் தமது அர்ஜெண்டினா பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்பு, பியூனஸ் அயர்ஸில் உள்ள மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் சிலைகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

அர்ஜெண்டினாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டதற்காக அர்ஜெண்மினா அதிபர் திரு மிலே, பிரதமர் திரு நரேந்தர மோடிக்கு நன்றி தெரிவித்தார். பரஸ்பரம் வசதியான நேரத்தில் இந்தியாவுக்கு வருகை தருமாறு அர்ஜெண்டினா அதிபர் திரு மிலேவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

****

(Release ID: 2142576)

AD/PLM/RJ


(Release ID: 2142694)