உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் ஸ்ரீமந்த் பாஜிராவ் பேஷ்வா I வின் உருவச் சிலையை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு. அமித் ஷா திறந்து வைத்தார்

Posted On: 04 JUL 2025 4:56PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு. அமித் ஷா இன்று மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஸ்ரீமந்த் பாஜிராவ் பேஷ்வா I வின் உருவச் சிலையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர்கள் திரு ஏக்நாத் ஷிண்டே மற்றும் திரு அஜித் பவார், மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு முரளிதர் மொஹோல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சரான திரு. அமித் ஷா, பிரதமர் திரு. நரேந்திர மோடி "வளர்ச்சியுடன் பாரம்பரியம்" என்ற தாரக மந்திரத்தை வழங்கியுள்ளார். இந்த மந்திரத்தின் கீழ் நமது "ஆயிரக்கணக்கான ஆண்டுகள்" பழமை வாய்ந்த கலாச்சாரம், அதன் வரலாறு மற்றும் உத்வேகம் அளிக்கும் நபர்களை நமது இளைஞர்கள் மற்றும் போர்வீரர்கள் அறிந்துகொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார். புனே நகரம் 'சுயராஜ்ஜியத்தின்' பிறப்பிடம்' என்று அவர் கூறினார். 17 - ம் நூற்றாண்டில், 'சுயராஜ்ஜியத்தின்' குரல் புனே நகரிலிருந்து எழுந்தது என்றும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்கள் 'சுயராஜ்ஜியத்திற்காக' போராட வேண்டிய தருணம் வந்தபோது, அதை முதலில் கோரியவர் லோக்மான்ய பால கங்காதர திலக் மகாராஜ் என்றும் திரு அமித் ஷா கூறினார். மகாராஷ்டிரா நாட்டைச் சேர்ந்த வீர் சாவர்க்கர், ஒரு நபர் தனது வாழ்நாளில் நாட்டிற்காக எவ்வளவு சேவை செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார் என்றும் அவர் கூறினார்.

நாடு முழுவதும் பேஷ்வா பாஜிராவின் பல்வேறு உருவச் சிலைகள் நிறுவப்பட்டிருந்தாலும், அவருக்கு நினைவுச்சின்னம் அமைக்க மிகவும் பொருத்தமான இடம் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி வளாகம் என்று திரு. அமித் ஷா கூறினார். நாட்டின் முப்படைகளின் எதிர்காலத் தலைவர்கள் இந்த அகாடமியில் பயிற்சி பெறுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். நமது வருங்கால வீரர்கள் பாஜிராவ் பேஷ்வாவிடமிருந்து உத்வேகம் பெற்று அவரது வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டால், வரும் காலங்களில் யாரும் இந்தியாவின் எல்லைகளில் சவால்களை ஏற்படுத்தத் துணிய மாட்டார்கள் என்றும் திரு. அமித் ஷா மேலும் கூறினார்.

போர்க் கலையின் சில கொள்கைகள் காலத்தால் அழியாதவை மற்றும் நித்தியமானவை என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். போரில் படைகளை வெற்றிக்கு அழைத்துச் செல்வது வியூகம், வேகம், அர்ப்பணிப்பு, தேசபக்தி மற்றும் தியாக உணர்வு என்று அவர் கூறினார். பாஜிராவ் பேஷ்வா 20 ஆண்டுகளில் 41 போர்களில் ஈடுபட்டு அனைத்திலும் வெற்றி பெற்றதாக திரு. ஷா குறிப்பிட்டார். தனது வாழ்நாள் முழுவதும் தோல்வியை ஒருபோதும் நெருங்க விடாத பாஜிராவ் பேஷ்வா போன்ற ஒரு துணிச்சலான போர்வீரனின் சிலைக்கு தேசிய பாதுகாப்பு அகாடமி  மிகவும் பொருத்தமான இடம் என்றும் அவர் கூறினார்.

தனது திறமைகள், உத்தி மற்றும் துணிச்சலான தோழர்களின் உதவியுடன், பாஜிராவ் பேஷ்வா பல போர்களை வெற்றிகளாக மாற்றினார் என்று திரு. அமித் ஷா கூறினார். பாஜிராவ் பேஷ்வா அடிமைத்தனத்தின் சின்னங்கள் இருந்த இடமெல்லாம் அவற்றை அழித்து, அந்த  இடத்தில் சுதந்திர விளக்கை ஏற்றினார் என்றும் அவர் கூறினார். தனது 20 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில், பாஜிராவ் பேஷ்வா தனது குதிரையிலிருந்து இறங்குவதை யாரும் பார்த்ததில்லை என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார். பாஜிராவ் பேஷ்வா சனிவர்வாடா கட்டுமானத்தை மேற்கொண்டார் என்றும், நீர் மேலாண்மை அமைப்புகளை செயல்படுத்தினார் என்றும், மேலும் பல சமூக தீமைகளுக்கு எதிராகப் போராடினார் என்றும் அவர் கூறினார். பாஜிராவ் பேஷ்வாவை தெய்வீக வரம் பெற்ற தளபதி, வெல்ல முடியாத போர்வீரன், சிவாஜியின் மிகச்சிறந்த சீடர் பாஜிராவ் பேஷ்வா என்று சிலர் குறிப்பிடுவதாக உள்துறை அமைச்சர் கூறினார். பாஜிராவ் தனது அனைத்துப் போர்களையும் சுயநலத்திற்காக இல்லாமல், தேசத்துக்காகவும் 'சுயராஜ்ஜியத்திற்காகவும்' நடத்தினார் என்பதை அவர் குறிப்பிட்டார். பாஜிராவ் பேஷ்வா தனது தாய்நாடு, மதம் மற்றும் சுயராஜ்ஜியத்திற்காக ஒவ்வொரு போரையும் நடத்தினார். வரும் நூற்றாண்டுகளில் யாராலும் மீண்டும் செய்ய முடியாத ஒரு அழியாத வரலாற்றை உருவாக்கினார் என்று திரு அமித் ஷா தனது உரையை முடித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2142226

******

AD/TS/SV/KGP/KG/DL


(Release ID: 2142318)